
இதயத்தின் செயல்பாட்டில் ஏற்படும் குறைபாடே இதய கோளாறாக கருதப்படுகிறது (Heart Disease). மார்பில் நுரையீரல்களுக்கு நடுவே உட்குழியான தசையால் ஆன உறுப்பாக இதயம் அமைந்துள்ளது. அசுத்த ரத்தத்தை பெற்று அதனை சுத்தமான ரத்தமாக மாற்றி உடலின் திசுக்கள் அனைத்திற்கும் அனுப்புவது இதயத்தின் இன்றியமையாத பணியாகும்.
இதயத்தில் பெருந்தமனி, மேற்பெருஞ்சிரை, கீழ் பெருஞ்சிரை, நுரையீரல் தமனி, நுரையீரல் சிரைகள், இடது மேலறை, இடது கீழறை, வடது மேலுறை, வலது கீழறை ஆகியன ஒருங்கிணைந்து முறையாக செயல்படுகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஏற்படும் குறைபாட்டினால் உடலின் திசுக்களுக்கு ஏற்ற அளவில், ஏற்ற வகையில் இதயத்தால் ரத்தத்தை தர இயலாமல் போவதால் உடலின் நிலைப்பாட்டில், இயக்கத்தில் கோளாறுகள் தோன்றுகின்றன, இதனையே இதயநோய் என்பர்.
இதயத்தின் கீழறையான வெண்டிரிக்களின் தசை சுருங்குதல், இவ்வாறு தசை சுருங்குவதால் ரத்தத்தை பெருந்தமணிக்கும், நுரையீரல் தமனிக்கும் செலுத்தும் வெண்டிரிக்களின் பணியில் சிக்கல் தோன்றுகிறது.
இதய தசைகள் கடின தன்மை அடைந்து போதுமான ரத்தம் இதயத்திற்கு வர இயலாத நிலைமை தோன்றுகிறது. எனவே இதயத்திலிருந்து வெளியேறும் ரத்தத்தின் அளவு குறைகிறது.
இதய வால்வுகள் உரிய அளவிற்கு குறைவாக குறுகலாக இருத்தல், வால்வுகளின் 'திறந்து மூடல்' செயலில் குறைபாடு காணப்படுதல், இதயத்தில் இடப்பக்கத்தில் ஏற்படும் குறைபாட்டினால், இதயத்தின் தசைகள் மிகவும் பலவீனமடைகின்றன. நுரையீரலில் திரவம் சேர்கிறது. இதயத்தின் வலது பக்கத்தில் ஏற்படும் குறைபாட்டினால் இதயத்தின் தசைகளில் கடினத்தன்மை ஏற்படுகின்றது. இதனால் உடலின் நரம்புகளும், இதயத்தை சுற்றியுள்ள திசுக்களும் வீக்கமடைகின்றன. திரவம் இதயத்தின் உள்ளே சென்று சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
அதிக ரத்த அழுத்தத்தினால் இதயம் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றது. எனவே, அதிக அழுத்தத்திற்கு முறையான சிகிச்சை அளிக்கப் பட வேண்டும். அதிகரிக்கும் ரத்த அழுத்தத்தை சமன்படுத்த இதயத்தின் தசைகள் கடினமாகின்றன இதனால் இதயம் பாதிக்கப்படுகிறது.
உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் இதயம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதய நரம்புகளில் படிந்திருக்கும் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்தை நேரடியாகப் பாதிக்கிறது. இதன் காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது.
உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட சில உணவுகள் உதவுகின்றது. உங்கள் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள், சத்துள்ள தானியங்கள் அதிகம் இடம் பெறுகிறதா? உங்களை மரபுரீதியான இதய நோய்கள் கூட தாக்காது என்கிறார்கள் மசாசூசட் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள். உணவுக் கட்டுப்பாடு, திட்டமிட்ட ஒழுங்கான வாழ்க்கை முறை ஆகியவற்றால் . இதயநோய்கள் வராமல் நம்மை காத்துக் கொள்ள முடியும்.
நமக்கு வரும் 40 சதவீத நோய்களுக்கும், மரணத்திற்கும் காரணம் நாம் வாழும் முறை தான் என்கிறார்கள் இங்கிலாந்து நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். அதில் இதய நோய்களும் அடங்கும்.
இதய நோயிலிருந்து நம்மை காத்துக் கொள்ள சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினலே போதுமானது. அன்றாட வாழ்வில் ஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காரதீர்கள். ஒரு மணி நேரத்திற்கு பிறகு எழுந்து 2 நிமிடங்கள் உங்களை ரிலாக்ஸ் செய்து கொண்டு மீண்டும் அமருங்கள். இதன் மூலம் 14 சதவீதம் இதயநோய் ஆபத்திலிருந்து தப்பலாம்.
பல் ஆரோக்கியத்திற்கும் இதய நோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பற்களின் ஈறுகளில் பிரச்சினைகள் என்றால் வாயில் உருவாகும் பாக்டீரியாக்கள் நேரடியாக ரத்தத்தில் கலந்து இதயநோய்களுக்கு வழி வகுக்கும். எனவே வருடம் இரண்டு முறை பல் மருத்துவரிடம் சென்று உங்கள் பற்களை சுத்தம் செய்வதன் மூலம் 24 சதவீதம் இதயநோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள்.
வாரத்தில் இரண்டு நாட்கள் வால்நட், பாதாம் போன்ற கொட்டை உணவுகளை எடுப்பவர்களுக்கு 23 சதவீதம் இதயநோய் ஆபத்திலிருந்து தப்பலாம் என்கிறார்கள்.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி இதயம் காக்க, ஆளிவிதை, ஓட்டாமில், பசலைக்கீரை, கேரட், புரோக்கோலி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, டார்க் சாக்லெட் போன்ற குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், சீரான உணவு முறையையும், உடற்பயிற்சிகளையும் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள்.