உச்சி முதல் பாதம் வரை உடலை வாட்டும் பல பிரச்னைகளுக்கு எலுமிச்சையில் கிடைக்கிறது எளிய தீர்வு.
எலுமிச்சை மரத்தின் காய், பழம் , குலை என எல்லாமே மருந்தாக பயன்படுகிறது. இயற்கையாக கிடைக்கும் வைட்டமின் சி சத்து இதில் நிறைய உண்டு.
இது தவிர இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் என சகல சத்துக்களும் எலுமிச்சையில் இருக்கிறது.
எலுமிச்சை நாக்கின் சுவை அறியும் தன்மையை தூண்டி விடும் குணம் கொண்டது. பசியை தூண்டும்; நா வறட்சியைப் போக்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கான எளிய தீர்வுகள் என்ன என்று பார்ப்போம்.
பேன் தொல்லை நீங்க
துளசி சாறுடன் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற விட்டு குளித்தால் பேன் தொல்லை நீங்கும்.
இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் அரைத்த பூண்டு விழுது 2 ஸ்பூன் சேர்த்து கலக்கி தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற விட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் பேன் தொல்லை போயே போய்விடும்.
கருவளையம் நீங்க
அரை டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறில் அரை டேபிள்ஸ்பூன் தக்காளி சாறு கலந்து கண்களை மூடி அக்கலவையை கண்களில் கீழே தடவி அரை மணி நேரம் கழித்து முகம் கழுவி வரவும். சில நாட்கள் தொடர்ந்து இப்படி தடவி வந்தால் கருவளையம் காணாமல் போகும்.
தலைவலி நீங்க
எலுமிச்சை பழத் தோலை காய வைத்து பொடி செய்து தண்ணீரில் கலந்து பேஸ்ட்டாக்கி தலைவலி உள்ள இடத்தில் தடவினால் தலைவலி நீங்கும்.
வாய் துர்நாற்றம் நீங்க
எலுமிச்சம் பழச்சாறு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து ஒருடம்ளர் நீரில் கலந்து தினமும் மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் சுவாசம் புத்துணர்வுடன் வாய் துர்நாற்றம் போகும்.
பல் வலி நீங்க
எலுமிச்சம் பழச்சாறு 3 டேபிள் ஸ்பூன் எடுத்து சிட்டிகை பெருங்காயத்தூள் கலந்து மிதமாக சூடுபடுத்தி ஆறியதும் இதில் பஞ்சை நனைத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்தால் வலி குறையும்.
வாயுத்தொல்லை நீங்க
எலுமிச்சை சாறில் இஞ்சித் துண்டுகளை ஊறவைத்து உணவு சாப்பிட்ட பின், சிறு துண்டு வாயில் போட்டு மென்று தின்றால் வாயுத் தொல்லை நீங்கும்.
அஜீரணம் நீங்க
எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை அரைத்து எடுத்த சாறு ஒரு டேபிள் ஸ்பூன் இரண்டையும் கலந்து சிட்டிகை சர்க்கரை சேர்த்து அருந்தினால் அஜீரணமும் வயிற்று வலியும் சரியாகும்.
வாந்தி , குமட்டல் நீங்க
எலுமிச்சை சாறில் சீரகத்தை ஊற வைத்து எடுத்து உலர்த்தி வாந்தி, குமட்டல் வரும் நேரத்தில் சிறிது வாயில் போட்டு மென்றால் குமட்டல் உடனே நிற்கும்.
மலச்சிக்கல் நீங்க
எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து வெது வெதுப்பான நீரில் கலந்து இரண்டு வேளை குடித்தால் மலச்சிக்கல் நீங்கும்.
உடல் எடை குறைய
துளசி இலை சாறுடன் சம அளவு எலுமிச்சம்பழம் சாறு சேர்த்து சூடாக்கி அதனுடன் தேன் கலந்து உணவுக்குப் பின் குடித்தால் உடல் எடை குறையும்.
நீர்ச் சுருக்கு குறைய
எலுமிச்சம் பழ விதைகளை பசை போல் அரைத்து அதை தொப்புளை சுற்றி தடவி விட்டு ஐந்து நிமிடம் கழித்து குளிர்ச்சியான தண்ணீரை ஊற்றினால் நீர் சுருக்கு, சிறுநீர் கழிக்கும் போது வரும் வலி , எரிச்சல் உடனே நீங்கிவிடும்.
பாத வெடிப்பு நீங்க
எலுமிச்சை பழச்சாறு வெதுவெதுப்பான நீரில் கலக்கி இந்த தண்ணீரில் வெடிப்புகள் இருக்கும் கால் பாதத்தை பத்து நிமிடங்கள் ஊறவிட்டு, வாரம் ஒரு நாள் இப்படி செய்து வந்தால் கால் பாத வெடிப்புகள், புதிதான வெடிப்புகளும் வராது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)