

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் எடுக்கும் முதல் படி, நமது மளிகைப் பொருட்களைச் சரியாக தேர்ந்தெடுப்பது தான். சமையலறைக்குத் தேவையான பொருட்களை வாங்கும் பொழுது சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் நம் உடலையும், குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும். ஹெல்தி ஷாப்பிங் செய்வதை எளிமையாக்க சில முக்கிய வழிகள்:
ஷாப்பிங் செய்வதற்கு முன்:
பட்டியல் தயாரிப்பது:
நலம் தரும் ஆரோக்கியமான உணவுகளை வாங்குவதற்கு கடைக்குச் செல்வதற்கு முன் ஒரு திட்டமிட்ட பட்டியலைத் தயாரிப்பது அவசியமாகும். வீட்டில் இருக்கும் பொழுதே தேவைப்படும் உணவுப் பொருட்களின் பட்டியலை எழுதித் தயார் செய்துக் கொள்வது நல்லது. இது தேவையில்லாத பாக்கெட் ஸ்நாக்ஸ், ஜங்க் ஃபுட்களை வாங்குவதைத் தவிர்க்க உதவும். அத்துடன் நம் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தவும் உதவும். அத்துடன் நம் வீட்டு சமையல் அறையிலும், குளிர்சாதனப் பெட்டியிலும் ஏற்கனவே என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதை சரிபார்த்துக் கொள்வது ஒரே பொருளை மீண்டும் வாங்குவதைத் தவிர்க்க உதவும்.
பசியோடு செல்ல வேண்டாம்:
பசியோடு கடைக்குச் சென்றால் சிப்ஸ், சாக்லேட் போன்ற நொறுக்குத் தீனிகளை அதிகம் வாங்கத் தோன்றும். எனவே சாப்பிட்டு விட்டு ஷாப்பிங் செய்யச் செல்லலாம்.
கடையில் பொருட்கள் வாங்கும் பொழுது:
சூப்பர் மார்க்கெட்:
விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். டயட் ஃபுட், சுகர் ஃப்ரீ, லோ ஃபேட் என்று லேபிளிடப்பட்ட உணவுகளைத் தவிர்த்து இயற்கையான உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கவும். பொதுவாக கடைகளின் ஓரப்பகுதிகளில் தான் காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் நவதானியங்கள் இருக்கும். நடுப்பகுதியில் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து விட்டு, ஓரப் பகுதிகளில் அதிக நேரம் செலவிடுவது நம் ஆரோக்கியத்திற்கு முக்கியமாகும்.
வண்ணமயமான கூடைகள்:
கடைக்குச் சென்றதும் கண்ணில் கண்டதை எல்லாம் வாங்காமல் நம் பட்டியலில் உள்ள பொருட்களை மட்டுமே வாங்குவதில் உறுதியாக இருக்க வேண்டும். நம் கூடையில் தக்காளி, கீரை, கேரட், குடைமிளகாய் எனப் பலப்பல வண்ணங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். அதேபோல் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த முழு தானியங்கள், சியா விதைகள், பூசணி விதைகள், பரங்கி விதைகள், பாதாம் முந்திரி போன்ற உலர் பழங்கள் ஆகியவற்றை வாங்கலாம்.
லேபிள்களைப் பார்த்து வாங்கவும்:
பாக்கெட்களில் அடைக்கப்பட்ட பொருட்களை வாங்கும் பொழுது பொருட்களின் பின்னால் இருக்கும் லேபிளில் அதில் சேர்க்கப்பட்ட சர்க்கரை (Added Sugar) மற்றும் உப்பின் (Sodium) அளவு குறைவாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
ஒரு பொருளின் பின்னால் இருக்கும் இன்கிரிடியன்ஸ் (Ingredients) பட்டியலில் முதலாவதாக இருக்கும் பொருட்கள்தான் அதில் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கும். அதில் சர்க்கரை அல்லது மைதா இருந்தால் அந்தப் பொருளை வாங்குவதை தவிர்த்து விடுவது நல்லது.
செயற்கை நிறங்கள் & பிரசர்வேடிவ்ஸ்:
செயற்கை நிறங்கள் (Artificial colours) மற்றும் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் வேதிப்பொருள் (Preservatives) அதிகம் உள்ள உணவுகளை வாங்குவதைக் குறைத்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியமான மாற்றங்கள்:
வழக்கமான சில பொருட்களுக்குப் பதிலாக சில ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்து பார்க்கலாம்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு (Refined oil) பதிலாக செக்கு எண்ணெய்.
வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை, வெல்லம், பனங்கற்கண்டு அல்லது தேன்.
மைதாவுக்கு பதிலாக கம்பு, தினை, ராகி போன்ற சிறுதானியங்கள், முழு கோதுமை.
வெள்ளை அரிசிக்கு பதிலாக கைக்குத்தல் அரிசி.
பாக்கெட் சிப்ஸ்/பிஸ்கட்டுக்கு பதிலாக வறுத்த வேர்க்கடலை, பொரி, பாதாம், முந்திரி, உலர் திராட்சை
என ஆரோக்கியமான மாற்றங்களை செய்யலாம்.
உள்ளூர் பொருட்கள்:
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ், ரெடி-டு-ஈட் உணவுகள், குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்குவதை விட, நாம் வசிக்கும் பகுதிக்கு அருகில் விளையும் பருவக்கால காய்கறிகள், பழங்கள், இளநீர் ஆகியவற்றை வாங்கலாம். இவை ப்ரஷ் ஆக, புத்தம் புதியதாக இருப்பதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.