

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் கோடை காலங்களில் ஆரோக்கியம் குறையாமல் உடலைப் பாதுகாக்க சில வகைத் தாவர விதைகள் சிறந்த முறையில் உதவி புரிகின்றன என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளனர். அவர்கள் கூறியுள்ளபடி என்னென்ன வகைத் தாவர விதைகளை எப்படி, எப்போது உட்கொள்ள வேண்டும் என்ற விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
ஒரு டேபிள் ஸ்பூன் பூசணி விதைகள், ஒரு டேபிள் ஸ்பூன் வாட்டர் மெலன் விதைகள் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் கசகசா (Poppy seeds) விதைகள் ஆகிய மூன்று வகை விதைகளையும் முந்தின நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலை அவை முளைக்கும் திறன் கொண்ட நிலைக்கு வந்துவிடும். அதனுடன் ஊற வைத்த கருப்புநிற உலர் திராட்சைப் பழங்களையும் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம். அவை வயிற்றின் ஜீரண சக்தியை அதிகரிக்கவும், அவற்றில் உள்ள கரையக் கூடிய நார்ச் சத்துக்கள் மலச் சிக்கலை நீக்கவும் உதவி புரிகின்றன.
கருப்பு நிற திராட்சைப் பழங்களில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. காலை வெறும் வயிற்றில் தினசரி இக்கலவையை உட்கொள்வதால் நாள் முழுவதுக்குமான சக்தி கிடைக்கும். சருமம் பளபளப்புப் பெறும். முடியின் அமைப்பு மேன்மையுறும்.
காலை உணவுடன் இந்த விதைகளை ஒரு பகுதியாய் சேர்த்துக் கொண்டால் தாவர வகைப் ப்ரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச் சத்து மற்றும் நுண்ணுயிர்ச் சத்துக்கள் கிடைக்கின்றன. பூசணி விதைகளில் ப்ரோட்டீன், மக்னீசியம், சிங்க் மற்றும் இரும்புச் சத்துக்கள் உள்ளன.
அவை நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இதய ஆரோக்கியம் பலமடையவும் காயம்பட்ட தசைகளை சீராக்கவும் உதவி புரிகின்றன. மேலும் அவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வீக்கங்களைக் குறைக்கவும் வளர் சிதை மாற்றங்கள் சிறப்பாக நடைபெறவும் உதவும்.
வாட்டர் மெலன் விதைகளில் உள்ள ப்ரோட்டீன் மற்றும் நார்ச் சத்து திசுக்களின் வளர்ச்சி மற்றும் தசைகளின் சீரமைப்பிற்கு உதவும். அதிலுள்ள ஆரோக்கியம் நிறைந்த அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்தி இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.
கசகசாவில் கால்சியம், மக்னீசியம், சிங்க் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை எலும்புகள் மற்றும் நரம்புகளின் செயல்பாடுகள் மற்றும் மெட்டபாலிசம் சிறப்புற, சிறந்த முறையில் உதவுகின்றன. இதிலுள்ள சிறிதளவு ப்ரோட்டீன் மற்றும் ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் இந்த விதைக் கலவையிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகரிக்க உதவி புரிகின்றன.
கருப்பு திராட்சைகளில் இயற்கையான இனிப்புச் சத்து, இரும்புச் சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. இவை இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கவும் ஜீரணம் சிறப்புற நடைபெறவும் உதவுகின்றன.
இவ்விதைகளை ஊற வைத்து உட்கொள்வது ஜீரணம் சிரமமின்றி நடைபெற உதவும். இவ்விதைக் கலவையில் ஆரோக்கியம் தரும் கொழுப்பு அதிகம் நிறைந்திருப்பதால் இவற்றை குறைந்த அளவில் எடுத்துக் கொள்வதே நலம். அதிகம் சாப்பிட்டால் உடலுள் கலோரி அளவு கட்டுப்பாடின்றி போவதற்கு வாய்ப்புண்டாகும்.
ஒரு நாளைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் கலந்த விதைகள் மற்றும் சில திராட்சைகளும் போதுமானது.
கர்ப்பிணிப் பெண்கள் கசகசாவை தவிர்க்கவும், நீரிழிவு நோயாளிகள் திராட்சைகளை குறைக்கவும், நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் உண்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்விதைக் கலவையை சாப்பிட்டுவிட்டு வழக்கமான காலை உணவைத் தவிர்ப்பது ஆரோக்கியம் தராது.
சரிவிகித உணவுடன் இந்த விதைகளை உட்கொள்வதே அனைத்து வயதினருக்கும் நாள் முழுவதுக்குமான சக்தி கிடைக்க உதவும்.
வேறு எந்த விதமான நோய்க்கும் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே இவ்விதைகளை சாப்பிட ஆரம்பிக்கலாம்.