பெண்களே கவனிங்க! உங்கள் அந்தரங்க ஆரோக்கியத்தின் ரகசியம் இதுதான்!
பெண்களின் ஒட்டுமொத்த உடல்நலத்தில் அந்தரங்க உறுப்பின் ஆரோக்கியம் மிக முக்கியமானது. ஆனால், பல நேரங்களில் கூச்சம் காரணமாகவோ அல்லது போதிய விழிப்புணர்வு இல்லாமலோ இது குறித்து நாம் பேசுவதில்லை.
அந்தரங்கப் பகுதியில் அரிப்பு, துர்நாற்றம் அல்லது அசௌகரியம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் pH அளவு மாறுபடுவதுதான்.
pH சமநிலை என்றால் என்ன? அது ஏன் முக்கியம்?
நமது உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட அமில, காரத் தன்மை உண்டு. ஒரு ஆரோக்கியமான பெண்ணின் அந்தரங்கப் பகுதியில் pH அளவு 3.8 முதல் 4.5 வரை இருக்க வேண்டும்.
இந்த அமிலத்தன்மைதான் லாக்டோபாசிலி (Lactobacilli) எனும் நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவுகிறது. இந்த நல்ல பாக்டீரியாக்கள் தேவையற்ற கிருமிகள், பூஞ்சை தொற்று மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாமல் ஒரு கவசமாகப் பாதுகாக்கிறது. pH அளவு 4.5-க்கு மேல் உயர்ந்தால், தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
அந்தரங்கப் பகுதியைப் பாதுகாக்க டிப்ஸ்:
Vagina என்பது உட்புறப் பகுதி இதைச் சுத்தம் செய்யத் தேவையில்லை. Vulva என்பது வெளிப்புறப் பகுதி இதை மட்டும் மென்மையான நீரால் சுத்தம் செய்ய வேண்டும்.
அந்தரங்கப் பகுதியைச் சுத்தம் செய்ய வாசனை திரவியங்கள் கலந்த சோப்பு அல்லது Vaginal Washes பயன்படுத்துவது நல்லதல்ல. Doctor prescribe செய்தால் மட்டும் பயன்படுத்தலாம். யோனி என்பது தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும் ஒரு உறுப்பு. எனவே, சாதாரண வெதுவெதுப்பான நீரைக் கொண்டே வெளிப்பகுதியைச் சுத்தம் செய்வது போதுமானது. வீரியமிக்க இரசாயனங்கள் அங்குள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்து, pH அளவை மாற்றிவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உள்ளாடைகளின் தரம் உங்கள் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கும். செயற்கை இழைகளால் ஆன அல்லது மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் காற்றோட்டத்தைத் தடுத்து, ஈரப்பதத்தை அதிகரிக்கும். இந்த ஈரப்பதம் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை வளர சாதகமான சூழலை உருவாக்கும். எப்போதும் காட்டன் துணியால் ஆன உள்ளாடைகளையே அணியுங்கள். இரவு நேரங்களில் காற்றோட்டமான ஆடைகளை அணிவது மிகவும் நல்லது.
பல பெண்கள் அந்தரங்கப் பகுதியை தண்ணீரை பீய்ச்சி அடித்துச் சுத்தம் செய்கிறார்கள். இது மிகவும் தவறான பழக்கம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது இயற்கையாக சுரக்கும் திரவங்களை வெளியேற்றி, pH சமநிலையை முற்றிலும் குலைத்துவிடும். இதனால் 'Pelvic Inflammatory Disease' போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படலாம்.
உடலுறவுக்குப் பின் சிறுநீர் கழிப்பது சிறுநீரகப் பாதை தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும், அந்த இடத்தைச் சுத்தமான நீரால் கழுவி உலர வைப்பது அவசியம்.
நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் அந்தரங்க ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும். தயிர் மற்றும் மோரில் உள்ள ப்ரோபயாடிக்குகள் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. மேலும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நச்சுகளை வெளியேற்றி, அந்தரங்கப் பகுதியை ஆரோக்கியமாக வைக்கும்.
மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் பேட்களை 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். நீண்ட நேரம் ஒரே பேடை பயன்படுத்துவது பாக்டீரியா பெருக்கத்திற்கு வழிவகுக்கும். மென்சுரல் கப் பயன்படுத்துபவர்கள் அதைச் சரியாகச் சுத்திகரிப்பது மிக முக்கியம்.
வழக்கத்திற்கு மாறான அதிகப்படியான வெள்ளைப்படுதல், துர்நாற்றம் வீசுவது, அந்தரங்கப் பகுதியில் கடுமையான அரிப்பு அல்லது எரிச்சல், சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், சுயமாக மருந்து எடுப்பதைத் தவிர்த்து உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகுவது சிறந்தது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

