தனியாக இருக்கும்போது மாரடைப்பு வந்தால் உயிர் தப்புவது எப்படி?

மாரடைப்பு வந்தால் பதற்றமின்றி நீங்கள் செய்ய வேண்டிய உடனடி உயிர் காக்கும் வழிமுறைகள்!
Heart attack | மாரடைப்பு
Heart attack | மாரடைப்புAI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தனியாக இருக்கும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டால் முதலில் பதற்றத்தைத் தவிர்த்து உடனடியாக அவசர உதவி எண் 108 அல்லது உங்கள் பகுதியில் உள்ள அவசர மருத்துவ சேவை எண்ணை டயல் செய்து உங்கள் இருப்பிடத்தை தெளிவாகக் கூறவும்.

அடுத்து உங்களுக்கு ஆஸ்பிரின் மருந்துடன் எந்த ஒவ்வாமையும் இல்லை என்றால் ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை மென்று விழுங்கவும். இது ரத்தம் உறைவதைத் தடுத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.

உதவிக்கு வருபவர்கள் (ஆம்புலன்ஸ் பணியாளர்கள்) என மற்றவர்கள் எளிதாக உள்ளே வருவதற்கு உங்கள் வீட்டுக் கதவை திறந்து வைக்கவும்.

உடலுக்கு அதிக சிரமம் கொடுக்காமல் உதவி வரும் வரை தரையில் வசதியாகப் படுத்து அல்லது உட்கார்ந்து ஓய்வெடுக்கவும்.

சமூகத்தில் பரவும் சில தவறான தகவல்கள் போல பலமாக இருமுவது மாரடைப்பை குணப்படுத்தாது. பயத்தில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருப்பது தேவையற்றது. அந்த சமயத்தில் அமைதியாக உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்வது நல்லது.

பொறுமை இழந்து தாமாகவே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு அல்லது அவசர சிகிச்சை பிரிவு செல்ல முயற்சிக்க வேண்டாம். காரணம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாரடைப்பு உயிருக்கு ஆபத்தான நிலையை அடையக் கூடும்.

மாரடைப்பு எந்த வயதிலும் ஏற்படலாம். மாரடைப்பு ஏற்படும் பொழுது எவ்வளவு விரைவாக அதற்கான சிகிச்சைக்காக செயல்படுகிறோமோ, அந்த அளவிற்கு நீண்டகால இதய பாதிப்பை தடுப்பதற்கான வாய்ப்புகள் சிறப்பாக அமையும்.

Heart attack | மாரடைப்பு
Heart attack | மாரடைப்பு

மார்பில் அழுத்தம் அல்லது இறுக்கம் ஏற்படுவது, இடது பக்கத்தில் கை, தாடை, கழுத்து அல்லது முதுகில் வலி ஏற்படுவது, நெஞ்செரிச்சல் போன்ற அசௌகரியம், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் பொதுவாக நீடிக்கும். இவை தொடர்ந்து 10 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் தொடர்ந்தால் அவசர மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.

30 நிமிடங்களுக்கு ரத்த ஓட்டம் தடைப்பட்டால் இதயத்தில் நிரந்தர பாதிப்பு ஏற்படலாம். மாரடைப்பு என்பது ஒரு தீவிரமான நிலை என்றாலும், இதயத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ரத்த ஓட்டத்தை விரைவாக மீட்டெடுக்கும் மருத்துவ சிகிச்சையின் மூலம் உயிர் பிழைப்பதற்கும், குணம் அடைவதற்குமான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

அவசர மருத்துவ உதவி வரும் வரை காத்திருக்கும் பொழுது தொடர்ந்து இருமவோ அல்லது மார்பில் அழுத்தம் கொடுக்கவோ கூடாது. எதையும் உண்ணவோ பருகவோ வேண்டாம்.

அந்த சமயத்தில் படிக்கட்டுகளில் ஏறுவதோ, தேவையற்ற அசைவுகளையோ தவிர்த்து உங்கள் ஆற்றலை சேமித்து முடிந்த வரை அசைவின்றி இருக்க பாருங்கள்.

எளிதாக சுவாசிப்பதற்கு, தேவைப்பட்டால் மார்பு, கழுத்து அல்லது இடுப்பைச் சுற்றியுள்ள இறுக்கமான ஆடைகளை தளர்த்தி விடவும்.

மொபைல் போனை கை எட்டும் தூரத்தில் வைத்திருப்பதும், ஏதேனும் மருந்து ஒவ்வாமைகள் இருந்தால் அவற்றை ஒரு பேப்பரில் குறித்து வைப்பதும் அவசர சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கும்.

மாரடைப்பு மற்றும் திடீர் இதய நிறுத்தம் இரண்டும் ஒரே அவசரநிலை அல்ல. மாரடைப்பு என்பது இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. ஆனால் இதயம் வழக்கமாக துடித்துக் கொண்டே இருக்கும். அத்துடன் மாரடைப்பு ஏற்பட்ட நபர் பெரும்பாலும் விழித்திருந்து பதில் அளிப்பார். இவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இப்படி சுயநினைவுடன் இருக்கும் ஒருவருக்கு சிபிஆர் /ஏஇடி (CPR/AED) போன்றவை பொதுவாக பயன்படுத்தப்படுவது இல்லை.

இதையும் படியுங்கள்:
பாட்டி சொன்ன ரகசியம்: உடல் உபாதைகளை விரட்டும் 15 பாரம்பரிய வழிகள்!
Heart attack | மாரடைப்பு

அதுவே இதயத்துடிப்பு நிறுத்தம் என்னும் பொழுது இதயம் திடீரென திறம்பட செயல்படுவதை நிறுத்தி விடுகிறது. அத்துடன் அந்த நபர் சுயநினைவின்றி இருப்பார். மேலும் அவரால் இயல்பாக சுவாசிக்க முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு சிபிஆர் மற்றும் ஏஇடி உடனடியாக பயன்படுத்தப்பட வேண்டும். உயிர் பிழைப்பதை மேம்படுத்துவதற்கு CPR/AED இன்றியமையாதவை.

மாரடைப்புக்கு பிறகு எதிர்கால அபாயத்தை குறைப்பதற்கு மருத்துவரின் ஆலோசனையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அறிவுறுத்தப்பட்டபடி எடுத்துக் கொள்வதும், மருத்துவரை கலந்தாலோசிக்காமல் மருந்தை நிறுத்தவோ அல்லது மாற்றவோ கூடாது.

உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு நோய் போன்ற அடிப்படை நோய்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் இவை மீண்டும் மாரடைப்பு ஏற்படுத்துவதற்கான ஆபத்துக் காரணிகளாக மாறிவிடும்.

புகைபிடிப்பதை நிறுத்துவதும் இதய பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை கணிசமாக குறைக்கும்.

இதயத்திற்கு ஆரோக்கியமான உணவு மற்றும் செயல்பாட்டு திட்டங்களை மருத்துவரின் ஆலோசனைப்படி பின்பற்ற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மஞ்சள் காமாலை அபாயம்: நாம் கவனிக்க வேண்டிய முக்கிய எச்சரிக்கைகள்!
Heart attack | மாரடைப்பு
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com