

மஞ்சள் காமாலை எனும் 'ஹெபடைடிஸ்' என்பது ஓர் அபாயகரமான நோய். 'ஹெபாட்' என்றால் கிரேக்க மொழியில் 'ஈரல்' என்று பொருள். 'டிடிஸ்' என்றால் 'வீக்கம்' என்று அர்த்தம். இவை இரண்டும் இணைந்து 'ஹெபடைடிஸ்' என்றானது. இதில் பலவகைகள் உண்டு. இது ஒரு வித வைரஸ் கிருமியால் தொற்றுவது. அந்தக் கிருமியை கண்டுபிடித்தவர் நோபல் பரிசைப் பெற்ற 'பாரூச் சாமுவேல் பிளம்பெர்க்' எனும் அமெரிக்க மருத்துவர். இவரது பிறந்த நாளான ஜூலை 28 ம் தேதியை உலக மஞ்சள் காமாலை தினமாகக் கடைபிடிக்கின்றனர்.
'ஜான்டிஸ்' எனும் மஞ்சள் காமாலை என்பது நோய் கிடையாது அது ஒரு நோயின் அறிகுறி. மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்கு சருமம், கண்கள் மற்றும் உடலின் சில பகுதிகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதற்கு 'பிலிருபின்' கழிவு பொருள் தான் காரணம். இந்த நோயின் தாக்கத்தின் போது ரத்தத்திலும், திசு நீர்மங்களிலும் பித்தநீர் நிறமிகள் அதிகமாகும். இதனால் கண், சருமம் முதலிய பகுதிகளில் மஞ்சள் நிறம் தென்படும். ரத்த சிவப்பணுக்கள் அதிகமாக அழிக்கப்படுவதாலோ, பித்த நீர் கற்களால் அடைப்பு ஏற்படுவதாலோ இந்த நோய் உருவாகிறது.
மஞ்சள் காமாலையில் சாதாரணம், தீவிரம், அதி தீவிரம் என்ற நிலைகள் உள்ளன. மஞ்சள் காமாலை நோயின் தீவிரம் 'ஹெப்படைட்டிஸ் ஏ,பி,சி' என்னும் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக ரத்தப் பரிசோதனையின் மூலமே மருத்துவர்கள் மஞ்சள் காமாலை நோயின் வகையை தீர்மானிக்கிறார்கள். சில விதிவிலக்கான நேரங்களில் சில சிறப்பு பரிசோதனைகளும் செய்யப்பட்டு மஞ்சள் காமாலையின் வகை தீர்மானிக்கப்படுகிறது.
மஞ்சள் காமாலைக்கு இரண்டு நிலைகளில் மருத்துவம் வழங்கப்படுகிறது. பொதுவாக மஞ்சள் காமாலை நோயாளியை அதிக ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம். குறைந்த கொழுப்புள்ள, எளிய உணவுகளை சாப்பிடுமாறு கூறுகின்றனர். பித்தநீர் கற்களில் ஏற்படும் அமைப்பினை நீக்க சில குறிப்பிட்ட சமயங்களில் அறுவை சிகிச்சையும் செய்யப்படுவதுண்டு. 'ஹெப்டாட்டிஸ்-சி' வைரசினால் ஏற்படும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்துகள் தரப்படுவதுண்டு.
மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்த இந்திய, சீன, ஐரோப்பிய மூலிகை மருத்துவ முறைகளில் நிறைய மருந்துகள் உள்ளன. இவை 'அலோபதி' மருத்துவ முறைக்கு உதவும் வகையில் உள்ளன.
இந்தியா போன்ற நாடுகளில் மஞ்சள் காமாலை நோயை வரும் முன் காப்பதே சிறந்தது. இந்நோய் தொற்றினை தடுக்க அசுத்தமான உணவு வகைகள், குடிநீர் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட ஈரல் வீக்கமுற்று வலியை உண்டாக்கும். பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதாலும், பித்தப்பையில் வீக்கம் ஏற்படுவதாலும் மஞ்சள் காமாலை ஏற்படும். வைரஸ் கிருமியால் ஏற்படும் மஞ்சள் காமாலைக்கு முக்கிய காரணம் குடிநீரில் கழிவு நீர் கலப்பது, சுகாதாரமற்ற சுற்றுசூழல் , உணவுப் பொருட்களில் கழிவுப் பொருட்கள் கலந்து கிருமிகள் வளர ஆரம்பிப்பது போன்றவைகளே.
இரண்டு விதமான வைரஸ்கள் மஞ்சள் காமாலைக்கு காரணமாக அமைகின்றன. ஒன்று நோய் தொற்று ஏற்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றொன்றுக்கு பரவும் நோய் தொற்று மஞ்சள் காமாலை (Infective Hepatitis). இரண்டாவது ரத்தம் மூலம் பரவும் மஞ்சள் காமாலை (Serum Hepatitis). நோய் மனிதர்கள் மூலம் பரவினால் அதன் அறிகுறிகள் தெரிய இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும். ஆனால், ரத்தம் மூலம் பரவும் மஞ்சள் காமாலை வெளியே தெரிய சுமார் 100 நாட்கள் ஆகும்.
நோய் தொற்று ஏற்பட்ட சில நாட்களில் பசியின்மை, காய்ச்சல், குமட்டல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுகின்றன. இவையே ஈரல் பழுதுபட்டதற்கான முதல் அறிகுறி. ஒரு வாரம் சென்றதும் சிறுநீரிலும், கண்களிலும் மஞ்சள் நிறம் பரவுகிறது. மலம் வெளுத்தும் காணப்படும். முற்றிய நிலையில் தோலிலும் மஞ்சள் நிறம் தென்படும்.
இந்நிலையில் நோயாளிகளுக்கு அபரிமிதமான உடல் சோர்வும், தளர்ச்சியும் ஏற்படும். வயிற்றில் ஈரல் பகுதியில் வலியும் ஏற்படும். குடி பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த வலி அதிகமாக தெரியும். ஆரோக்கியமான ஈரல் உள்ளவர்களுக்கு இந்த நோய் மூன்று வாரங்களில் சரியாகும். ஈரலில் உள்ள இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தி காரணமாக ஈரல் சகஜ நிலைக்கு வர 5 வாரங்கள் ஆகும்.
ரத்தம் மூலம் பரவும் மஞ்சள் காமாலை சற்று வீரியமாக இருக்கும். மஞ்சள் காமாலை ஏற்பட்டவர்கள் இரண்டு வாரங்களுக்கு பெட் ரெஸ்ட் எடுப்பது அவசியம். ஓய்வும் பத்திய உணவும் ஒருவரை வெகு விரைவில் நல்ல நிலைக்கு கொண்டு வந்து விடும். எண்ணெய் பதார்த்தங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும், சுலபத்தில் செரிமானமாகும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். காய்கறிகள் மற்றும் கீரைகளை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆவியில் சமையல் செய்த உணவுகள் நல்லது.
மஞ்சள் காமாலைக்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் ஈரலைப் பாதித்து செயலிழக்கச் செய்து மரணத்தை ஏற்படுத்தும் எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பெரியவர்களைத் தவிர, குழந்தைகளும் இந்த நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வீட்டிலேயே மஞ்சள் காமாலையைக் கண்டறிய உதவும் பொதுவான அறிகுறிகள் சருமம் மற்றும் கண்களின் வெண்படலம் மஞ்சள் நிறமாகத் தோன்றுவது அதன் அறிகுறிகளில் இரண்டு மட்டுமே. இந்த மருத்துவ நிலையைக் கண்டறிய உதவும் வேறு பல அறிகுறிகளும் இதற்கு உண்டு. குறிப்பாக குழந்தைகளில் இதன் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு இருக்கும்... ஆரஞ்சு/மஞ்சள் சரும நிறம், விழித்தெழுவதில் உள்ள பிரச்னைகள், உடலை முறுக்கி அழுகை, முறையற்ற தூக்கப் பழக்கங்கள், குறைந்த அளவு சிறுநீர் கழித்தல், உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது உங்கள் குழந்தைக்குப் இந்த அறிகுறிகள் தென்பட்டாலும், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference