பாட்டி சொன்ன ரகசியம்: உடல் உபாதைகளை விரட்டும் 15 பாரம்பரிய வழிகள்!

பக்கவிளைவுகள் இல்லாத நமது பாரம்பரிய நாட்டு மருத்துவ முறைகளால் உடனடி நிவாரணம் பெறுவது எப்படி?
Traditional home remedies | கை வைத்தியம்
Traditional home remedies | கை வைத்தியம்AI Image
Updated on

பாட்டி சொன்ன இந்த 15 பாரம்பரிய கை வைத்திய ரகசியங்கள் வயிற்று இரைச்சல், உப்புசம், பூச்சிகள், மலச்சிக்கல், அஜீரணக் கோளாறுகள், தலைபாரம், வாய் துர்நாற்றம், மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு, இடுப்பு வலி, பொடுகு போன்ற அன்றாட உடல் உபாதைகளை எளிய வீட்டுச் சிகிச்சைகளால் குறைக்க உதவுகின்றன. ஓமம், சுக்கு, சீரகம், மணத்தக்காளி, துளசி, சுண்டைக்காய், அதிமதுரம், மஞ்சள், மாதுளம், ஏலக்காய், பூண்டு, தேங்காய் பால் போன்ற இயற்கை பொருட்களின் பயன்கள் விளக்கப்படுகின்றன.

வயிற்றில் இரைச்சல்

வயிற்றில் இரைச்சல் இருந்தால் கொஞ்சம் ஓமத்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றி மூடி வைத்துவிட வேண்டும் கொஞ்ச நேரம் கழித்து திறந்து பார்த்தால் காபி டிகாஷன் போல் ஆகிவிடும். இதை வடிகட்டி பாலும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று இரைச்சல் நீங்கிவிடும்.

வயிறு உப்புசம்

வயிறு உப்புசமாக இருந்தால் கொஞ்சம் சுக்கும் சீரகமும் சம அளவு எடுத்து பெரும்பான்மையில் வறுத்து பொடித்து அந்த பொடியை சாப்பிடும் போது சாதத்தில் கலந்து பிசைந்து சாப்பிட வேண்டும். வயிறு உப்புசம் நீங்கும்.

வாய் புண்கள்

வாயிலும் உதட்டிலும் நாக்கிலும் சிறு புண்கள் வந்தால் மணத்தக்காளி கீரை அல்லது துளசி இலை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பறித்து சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று தின்று விட்டால் புண்கள் மறைந்து விடும்.

Natural home remedies | கை வைத்தியம்
Natural home remedies | கை வைத்தியம்AI Image

வயிற்று பூச்சிகள்

சுண்டைக்காய் வற்றலுடன் இரண்டும் மோர் மிளகாய் சிறிது பெருங்காயம் ஆகியவற்றை நன்கு வறுத்து பொடி செய்து சாதத்துடன் நல்லெண்ணெய் அல்லது நெய் போட்டு உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பூச்சிகள் அடியோடு ஒழிந்து விடும்.

தொண்டைப்புண்

அதிமதுர பொடி ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து தினம் இரண்டு வேளை சாப்பிட்டால் தொண்டைப்புண் வாய்ப்புண் ஆறும். நாக்கு வறண்டு போவதை சரி செய்யும். ஈறுகளில் வீக்கம் வலி இருந்தால் அதையும் குணப்படுத்தி விடும்.

கால் ஆணி

மஞ்சளையும் கடுக்காயையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு கல்லில் இழைத்து தேங்காய் எண்ணெயில் குழைக்க வேண்டும் இதை கால் ஆணி உள்ள இடத்தில் தடவினால் கால் ஆணி குணமாகும்.

மலச்சிக்கல்

மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும் இரத்தம் சுத்தம் அடையும்.

இதையும் படியுங்கள்:
பக்கவிளைவுகளும் குறைவு, செலவும் குறைவு... இது நம்ம பரம்பரை சொத்து!
Traditional home remedies | கை வைத்தியம்

அஜீரணக் கோளாறுகள்

ஏலக்காய் சுக்கு மிளகு இவற்றை வறுத்து பொடி செய்து கஷாயம் செய்து சாப்பிட அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

தலைபாரம்

தலை பாரம் உள்ளவர்கள் கொதிக்கும் நீரில் மஞ்சள் தூள் போட்டு ஆவி பிடித்தால் தலைபாரம் நீங்கும்.

வாய் துர்நாற்றம்

எலுமிச்சம்பழ சாற்றில் வெந்நீர் உப்பு போட்டு குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

மூக்கடைப்பு

ஜலதோஷத்தினால் வரும் மூக்கடைப்புக்கு சூடான டீயில் தேன் கலந்து குடித்து வந்தால் மூக்கடைப்பு சரியாகும்.

வயிற்று கடுப்பு

மாதுளம் பிஞ்சை நைசாக அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்று கடுப்பு சரியாகும்.

தொண்டை கரகரப்பு

பாலில் பூண்டை போட்டு காய்ச்சி குடித்தால் இருமல் ஜலதோஷம் தொண்டை கரகரப்பு நீங்கிவிடும்.

இடுப்பு வலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆற வைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் சேர்த்து வறுத்து சேர்த்து குடித்தால் இடுப்பு வலி நீங்கும்.

பொடுகு

தேங்காய் பால் அரை கப் எடுத்துக் கொண்டு நான்கு டேபிள் ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு கலந்து தலைக்கு குளித்து வர பொடுகு தானாக போய் விடும்.

இதையும் படியுங்கள்:
நம் பாரம்பரிய சமையலின் ரகசியம்: குழம்புகளில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்!
Traditional home remedies | கை வைத்தியம்
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com