ஒரே மாதிரி தோற்றம் கொண்டவை சீத்தா பழமும் ஆத்தாப் பழமும் ஆகும். பலருக்கும் ஆத்தாப்பழம் என்றால் சரியாகத் தெரியாது. சீத்தா பழத்தைப் போன்றே தோற்றத்திலும் சுவையிலும் ஒன்றாக இருக்கும் இந்தப் பழத்தை, ‘ராம் சீத்தா’ என்றும் கூறுவர். இந்த இரண்டு பழங்களும் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாக இருந்தாலும் இரண்டுமே வெவ்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டவை.
தோற்றத்தில் இதயத்தின் வடிவத்தை கொண்டிருக்கும் இந்தப் பழம் காயாக இருக்கும்போதே இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். சீத்தாப் பழத்தை விட இதில் சதைப் பற்று அதிகமாக இருக்கும். தோல் பகுதி மெலிதாகவே இருக்கும். இந்தப் பழம் அதிக குளிர்ச்சித் தன்மையை உடையது. அதனால் உடல் உஷ்ணம் அதிகம் உள்ளவர்கள் இந்தப் பழத்தை வாங்கி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இந்தப் பழத்தை சாப்பிடுவதால் இதயம், நரம்பு பகுதிகள் வலுவடையும். இரத்த ஓட்டம் சீராகும். மாரடைப்பு வருவதைத் தடுக்கலாம். மூச்சுத் திணறல்கள் குறையும்.
இந்தப் பழத்தின் தேவை அதிகமாகவும் இதன் உற்பத்தி குறைவாகவும் இருப்பதனால் ஒரு பழத்தின் விலையும் மிகவும் அதிகமாகவே உள்ளது.
மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட இந்தப் பழத்தின் சாறு பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனி, ஆத்தா பழச்சாறு ஜூஸ் தயாரிப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.
ஆத்தாப் பழத்தை கொட்டை நீக்கி சதை பகுதியை மட்டும் எடுத்து வைத்து கொள்ளவும். இப்போது அடுப்பில் பாலை நன்றாகக் காய்ச்சி அதில் கன்டென்ஸ்ட் மில்க் கிரீம் 1 ஸ்பூன், ஜீனி ஒரு ஸ்பூன் சேர்த்து கலக்கி இறக்கி வைத்து கொள்ளவும். இறக்கிய பாலை நன்றாக ஆற விடவும். இப்போது மிக்ஸியில் எடுத்து வைத்த ஆத்தாப் பழத்தின் சதையை மற்றும் ஆறிய பால் கலவையை சேர்த்து வேண்டுமென்றால் இரண்டு ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
இதை கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறலாம். சாப்பிடுவதற்கு மிகவும் க்ரீமியாக லஸ்ஸி போன்று இருக்கும். இதில் இருக்கும் எக்கச்சக்க நன்மைகள் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயப்பதாகும்.