குளிர்காலங்களில் ஆரோக்கியம் தரும் மூலிகைக் குளியல் மற்றும் கஷாயங்கள்!

Winter healthy kashayam
Winter healthy kashayam
Published on

குளிர்காலத்தில் சளி, இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி, தொண்டைப் புண், மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்றவை ஏற்படுவது சகஜம். இதற்கு மூலிகைக் குளியல், ஒத்தடம், கஷாயம் போன்றவை நல்ல பலன் கொடுக்கும். அப்படிப் பலன் கொடுக்கும் சில குளிர்கால நிவாரணங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.

ஆடாதொடை கஷாயம்: குரல்வளைப் புண்களை குணப்படுத்தும் ஆடாதொடை கஷாயம். சித்தர்களால் ‘கற்பக மூலிகை’ என அழைக்கப்படும் ஆடாதொடை இலைகள் தசை வலிகளைப் போக்கும். நாள்பட்ட சளி தொல்லையை குணமாக்கும். தொண்டை பாதிப்புகளும் நீங்கும். 2 கப் நீரில் ஐந்தாறு இலைகளை கிள்ளிப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருக நல்ல பலன் கிடைக்கும்.

மூலிகைக் குளியல்: புளிய இலை ஒரு கைப்பிடி, வாதநாராயண இலை 2, நொச்சி, நுணா இலைகள் சிறிது, ஆடாதொடை இலை சிறிது ஆகியவற்றை கொதிக்கும் நீரில் போட்டு தேவையான அளவுக்கு நீர் சேர்த்து குளிக்க உடல் வலி, சோர்வு, அசதி நீங்கி புத்துணர்வுடன் இருக்கலாம்.

நொச்சி இலை: நொச்சி இலைகளை சூடுபடுத்தி ஒத்தடம் கொடுக்க சுளுக்கு குணமாகும். தண்ணீரைக் கொதிக்க வைத்து இலைகளைப் போட்டு ஆவி பிடிக்க தலைபாரம், தலைவலி, மூக்கடைப்பு குணமாகும். நொச்சி இலைக் குளியல் உடல் வலியைப் போக்கும்.

இதையும் படியுங்கள்:
உலகின் பழைமையான ஆலமரம் எங்கே உள்ளது தெரியுமா?
Winter healthy kashayam

இலை ஒத்தடம்: வாதநாராயண இலை எல்லா வகையான வாதங்களையும் குணப்படுத்தும். வீக்கத்தைப் போக்கும். இலைகளை வாணலியில் நன்கு சூடு வர திரட்டி துணியில் முடிந்து ஒத்தடம் கொடுக்க மூட்டு வலி, கை கால் வலி காணாமல் போகும். வாதநாராயண இலையுடன் பூண்டை தட்டிப் போட்டு வேகவிட்டு உணவுடன் கலந்து சாப்பிட மூட்டு வலி குணமாக்கும்.

நுணா இலை ஒத்தடம்: வெப்பம் தணிக்கும் வயிற்றுக் கோளாறுகளைப் போக்கும் நுணா இலையின் சாற்றை மூட்டுகளில் பூசி சூடாக ஒத்தடம் கொடுத்து வர மூட்டு வீக்கம், மூட்டு வலி, வாதம் போன்றவை குணமாகும்.

தைல குளியல்: இவற்றிற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது என்று எண்ணுபவர்களுக்கு நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நொச்சி தைலம், வாதநாராயண தைலம் போன்றவற்றை வாங்கி வந்து குளிக்கும் வெந்நீரில் கலந்து குளிக்கலாம்.

கஷாயம்: அதிமதுரம், மிளகு, சுக்கு, ஏலக்காய், லவங்கப்பட்டை ஆகியவற்றை தட்டி  தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிப் பருக தலைவலி, சளி, வறட்டு இருமல், மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்னைகள் சரியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com