
அடிக்கடி சளி வருவதற்கான பொதுவான காரணங்கள்:
நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு, மோசமான உணவு பழக்கமும், சுத்தம் சுகாதாரத்தை பேணாமல் இருப்பதும் காரணமாகும். கைகளை சோப்பு போட்டு கழுவுவது தொற்று நோய் நம்மை எளிதில் பற்றாமல் இருக்க உதவும். போதுமான தூக்கம் இல்லை என்றாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் பலவீனமாகும். இதனால் சளி பிடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். பள்ளிகள் அல்லது அலுவலகங்களில் இருமல், சளி போன்ற தொந்தரவு உள்ளவர்கள் இருக்கும் சூழலில், இது போன்ற வைரஸ் எளிதில் மற்றவர்களுக்கும் பரவும். அத்துடன் பருவ கால மாற்றங்களும் ஒரு முக்கியமான காரணியாகும். இதற்கு டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே மூலிகைகளை வைத்து கஷாயம் செய்து சாப்பிட விரைவில் நிவாரணம் பெறலாம்.
1) தூதுவளை தோசை:
தூதுவளையை வெறும் வாணலியில் நன்கு வதக்கி மிக்ஸியில் அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை வார்த்து சாப்பிட, சளித் தொல்லையிலிருந்து விடுபடலாம். சளியை இளக்கி வெளியேற்றும் தன்மை கொண்டது.
2) தூதுவளை கஷாயம்:
தூதுவளையை வெறும் வாணலியில் வதக்கி இரண்டு கப் தண்ணீர் விட்டு மிளகு பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விட்டு பாதியாக வற்றியதும் வடித்து இரண்டு நாட்களில் காலை, மாலை என இரண்டு வேளை பருக சளி இளகி வெளிவந்து விடும்.
3) ஆடாதொடை & வெல்லப்பாகு கஷாயம்:
ஆடாதொடை இலை குழந்தைகளுக்கு சளியை வெளியேற்ற பெரிதும் உதவும். அத்துடன் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு இருக்கும் சமயத்தில் இந்த ஆடாதொடை கசாயம் பருக நல்ல பலன் கிடைக்கும். ஆடாதொடை இலையை சுத்தம் செய்து அரைத்து சாறு எடுத்து இரண்டு ஸ்பூன் அளவில் எடுத்துக் கொண்டு கொஞ்சம் தேன் கலந்து பருக, நல்லது. தினமும் செய்வது கடினமாக இருந்தால் ஆடாதொடை இலையை நிறைய அளவில் எடுத்து மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து வெல்லம் சேர்த்து பாகு தயார் செய்து வைத்துக் கொண்டு தினம் ஒரு ஸ்பூன் அளவு பருக நன்கு குணமாகும்.
4) துளசி சாறு:
ஒரு கப் தண்ணீரை வைத்து அதில் துளசி இலைகள் 10 எடுத்து கையால் பிய்த்துப் போட்டு மஞ்சள் தூள், மிளகுத்தூள் சிறிது சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டிப் பருக சளி இருமலுக்கு சிறந்தது.
5) கண்டங்கத்திரி கஷாயம்:
கண்டங்கத்திரி இலையில், தூதுவளை இலை போல் முள் இருக்கும். அதனை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வெறும் வாணலியில் நன்கு வதக்கி இரண்டு கப் தண்ணீர் விட்டு மஞ்சள் தூள், மிளகு தூள், அதிமதுரம் ஒரு சிறு துண்டு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பாதியாக வற்றியதும் வடிகட்டி இரண்டு வேளை பருக சளி கரைந்து வெளியேறுவதுடன், வறட்டு இருமலும் குணமாகும்.
6) சித்தரத்தை கஷாயம்:
சித்தரத்தை ஒரு பெரிய துண்டு எடுத்து நன்கு நசுக்கி வெறும் வாணலியில் போட்டு சூடு வர வறுத்து அதில் ஒரு கப் தண்ணீர் விட்டு பாதியாக வற்றியதும் இரண்டு வேளை பருக சளிக்கு நல்லது.
நாட்டு மருந்து கடைகளில் சித்தரத்தை பொடி ரெடிமேடாக கிடைக்கிறது. அதை ரெண்டு சிமிட்டு அளவு எடுத்து சிறிது தேன் கலந்து காலை மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வர சளி, தொண்டைப் புண்ணுக்கு நல்ல குணம் தெரியும்.
7) அதிமதுரத்துண்டு:
வறட்டு இருமலுக்கு அதிமதுரத்தை ஒரு சிறு துண்டு எடுத்து வாயில் அடக்கிக் கொண்டு அவ்வப்போது ஊறும் எச்சில் நீரை வீங்கி வர வறட்டு இருமல், தொண்டை வலிக்கு ஏற்றது.
வேலைக்கு செல்கிறோம் இதற்கெல்லாம் நேரமில்லை என்று கருதுபவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதிமதுரப்பொடி, சித்தரத்தை பொடி, தூதுவளைப் பொடி ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொண்டு காலை மாலை இரண்டு வேளையும் வெண்ணீரில் கால் ஸ்பூன் அளவு கலந்து பருகிவர நல்ல பலன் கிடைக்கும்.