முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த சில யோசனைகள்!

முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த சில யோசனைகள்!

ந்த ஆண்டு உலக முதுகெலும்பு தினத்தின் கருப்பொருள்,  ‘உங்கள் முதுகெலும்பை நகர்த்தவும் (Move your Spine)‘ என்பதாகும். இது மனிதர்கள் தங்கள் முதுகெலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்த அறிவுறுத்துகிறது. முதுகெலும்பு, உடலின் மைய ஆதரவு அமைப்பாகச் செயல்படுகிறது. இது உட்காருதல், நிற்பது, நடப்பது மற்றும் வளைதல் போன்ற உடலின் அடிப்படை செயல்பாடுகளுக்கு அவசியம். முதுகெலும்பு நோய்கள், தீவிர முதுகுவலி போன்றவை  ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக பாதிக்கிறது.  நான்கு முதியவர்களில் ஒருவர் தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் முதுகுவலியை அனுபவிப்பதாக புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. இது உலகளவில் ஒரு பில்லியன் மக்களை பாதிக்கிறது.

முதுகு வலிக்கான  காரணங்கள்: முதுகில் ஏற்படும் பிரச்னைகளில் முக்கியமானது கீழ் முதுகு வலி (LOWER BACK PAIN). கூன் விழுந்த நிலையில் உட்காருவது, வேலை நிமித்தமாக தொடர்ச்சியாக நாற்காலியில் அல்லது கணினி முன்னால் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழல், தினமும் இரு சக்கர வாகனங்களில் நீண்ட தொலைவு பயணிப்பது, குண்டும் குழியுமான சாலைகளில் அடிக்கடி பயணம் செய்வது, அதிக எடையை தூக்குவது, உடற்பயிற்சி இல்லாதது, ஊட்ட சத்துக்குறைவு, ஆஸ்டியோ மைலிட்டிஸ், ஸ்பாண்டிலிட்டிஸ், காச நோய் போன்றவற்றின் பாதிப்பாலும் கீழ் முதுகில் வலி வரும். உடல் பருமன், புகைபிடித்தல், மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை முதுகுவலிக்கு வழிவகுக்கும். வாகன விபத்துகள் அல்லது விளையாடும்போது ஏற்படுகிற விபத்துகள் காரணமாக எலும்பு முறிந்து இந்த வலி ஏற்படலாம்.

முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த சில யோசனைகள்:

1. நீண்ட நேரமாக இருக்கையிலேயே அமர்ந்து வேலை செய்வதைத் தவிர்க்கவும். நாற்காலியில் அமரும்போது முதுகுத்தண்டு நேராக இருக்குமாறு அமர வேண்டும். நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்ய வேண்டி இருந்தால் அவ்வப்போது எழுந்து நின்றும், நடந்தும் முதுகெலும்புக்கு ஓய்வு தர வேண்டும்.

2. தன் உயரத்துக்கு ஏற்ற எடையை ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டும். முதுகுத்தண்டின் அழுத்தத்தைக் குறைக்க ஆரோக்கியமான எடையை பராமரித்தல் அவசியம்.

3. புகைபிடிப்பதை அறவே கைவிட வேண்டும். ஏனென்றால், சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின்  இரத்த நாளங்களை பாதித்து, முதுகெலும்புக்கு இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வருவதைக் கட்டுப்படுத்துகிறது.

4. கீழே குனிந்து ஒரு பொருளை எடுக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக முதுகெலும்பு வளையாமல் எடுக்க வேண்டும். நின்ற வாக்கிலேயே குனிந்து எடுக்காமல், தரையில் குத்திட்டு அமர்ந்து அந்தப் பொருளை இரு கைகளாலும் தூக்க வேண்டும்.

5. முதுகெலும்பின் தசை வலிமை மற்றும் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்க யோகா பயிற்சியில் ஈடுபடலாம்.

6. தூங்குவதற்கு உறுதியான, மேடு பள்ளங்கள் அற்ற, பிளாட்டான  மெத்தையைத் தேர்வு செய்யவும்.

7. முதுகெலும்பு ஆரோக்கியத்தை நிலைநிறுத்த சரியான காலணிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

8. எலும்பு மற்றும் முதுகெலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க உணவில் மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் டி மற்றும் கே, வைட்டமின் ஏ, இரும்பு மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைச் சேர்த்துக்கொள்ளவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com