

நமது அன்றாட வாழ்க்கையில் உணவிற்காக அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்று பீர்க்கங்காய் (Ridge gourd). இந்த காய் பல மருத்துவப் பயன்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு காய்கறி. இதில் ஊட்டச்சத்துக்கள் செறிந்த, குறைந்த கலோரி கொண்ட ஒரு காய்கறியாகும். பீர்க்கு, பீரம், பீர்க்கங்காய் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் A மற்றும் C, மற்றும் இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன. இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தி, உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆல்கலாய்டு சேர்மங்கள் பீர்க்கங்காயில் ஏராளமாக உள்ளன.
எடை மேலாண்மை மற்றும் செரிமான ஆரோக்கியம்: இதில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதன் மூலம் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகின்றன.
மேலும், மலச்சிக்கலைத் தடுத்து சீரான குடல் இயக்கத்திற்கும் துணைபுரிகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பார்வையை மேம்படுத்துகிறது: இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ (பீட்டா-கரோட்டின் வழியாக) நிறைந்துள்ளதால், இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, கண் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், வயதான காலத்திலும் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது விழித்திரை சிதைவு, பகுதி குருட்டுத்தன்மை மற்றும் பிற கண் நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்டான பீட்டா கரோட்டின், பார்வை நரம்புகள் மற்றும் பார்வை இரத்த நாளங்களில் உள்ள நச்சுக்களை நீக்கி, தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.
இரத்த சர்க்கரை மற்றும் இதய ஆரோக்கியத்தை நிர்வகிக்கிறது: இதில் உள்ள நார்ச்சத்து, இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இதில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால், ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது.
இரத்த சோகைக்கான தீர்வுகள்: அதிகளவில் இரும்புச்சத்தைக் கொண்டுள்ள பீர்க்கங்காயை, உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வது, இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையைக் குணப்படுத்த உதவுகிறது. மேலும், பீர்க்கங்காயில் வைட்டமின் B6 சத்து செறிந்து காணப்படுகிறது.
இரும்புச்சத்துடன் இணைந்து, உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் முறையாக உருவாவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் விளைவாக, இது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சீரான இரத்த ஓட்டத்தை உறுதிசெய்து, வலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைத் தணிக்கிறது.
கல்லீரல் செயல்பாட்டைப் பாதுகாக்கிறது: பீர்க்கங்காய், இரத்தத்தில் உள்ள நச்சுக்கழிவுகள், மதுவின் எச்சங்கள் மற்றும் செரிக்கப்படாத உணவுத் துகள்களைச் சுத்திகரிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது. எனவே, இது கல்லீரலின் ஆரோக்கியத்தையும் பித்தநீர் சுரப்பின் செயல்பாட்டையும் மேம்படுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. பித்தநீர் என்பது கல்லீரலால் சுரக்கப்படும் ஒரு திரவமாகும்; இது கொழுப்புகளை (Lipids) உடைத்துச் செரிக்க உதவுகிறது. மேலும், இது மஞ்சள் காமாலை மற்றும் பித்த நாளத்தில் ஏற்படும் பிற தொற்றுகளுக்கும் சிறந்த சிகிச்சையாக அமைகிறது.
சரும அமைப்பைப் புத்துணர்ச்சியூட்டுகிறது: ஆன்டிஆக்ஸிடன்ட் ஆற்றலுக்குப் பெயர் பெற்ற வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ள பீர்க்கங்காய், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றவும், ஆரோக்கியமான சருமத் திசுக்களுக்கு ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தைத் தடுக்கவும், இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்திகரிக்கவும் உதவுகிறது. சாலடுகள், கூட்டு வகைகள் அல்லது குழம்புகளில் சிறிய அளவில் பீர்க்கங்காயை தினசரி உணவின் சேர்ப்பதன் மூலம், சரும செல்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தொற்றுகள், முகப்பரு, கரும்புள்ளிகள் ஆகியவற்றைக் குணப்படுத்தி, மென்மையான, தெளிவான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவுகிறது.
உடல் சூட்டைக் குறைக்கிறது: பீர்க்காய் ஒரு நீர்ச்சத்து மிகுந்த காய்கறியாகும். இது அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளதால், கோடையில் இதை அதிகளவு உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நீரிழப்பைத் தடுத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவுகிறது. அதுமட்டுமின்றி, நீரிழப்பைச் சரிசெய்து, எலக்ட்ரோலைட் சமநிலையை மீட்டெடுத்து, உடலில் இழந்த திரவங்களையும் ஊட்டச்சத்துக்களையும் மீண்டும் நிரப்புகின்றன.
குடல் புண்களைக் குணப்படுத்துகிறது: வயிற்றுக்கோளாறுகள் மற்றும் குடல் புண்கள் ஏற்படக் காரணமாகும் அமிலத்தன்மையைச் சீர்படுத்த, பீர்க்கங்காய் உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கும் தன்மை ஆகியவற்றின் காரணமாக, குடல் புண்களை (Peptic ulcers) ஆற்ற உதவுகிறது. மேலும், வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உணர்வையும், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலையும் தணிக்க இது பெரிதும் உதவுவது நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.
அதேபோல் பீர்க்கங்காய் தோலிலும் அதிக சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், அதைத் தூக்கி எறியாமல் துவையல் செய்து உண்பது மிகவும் நல்லது.
பொதுவாக பீர்க்கங்காயில் அதிகளவு நன்மைகள் இருந்தாலும், அதிகமாக உட்கொள்வது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.