

சிரிப்பின் பின்னால் மறைந்திருக்கும் மனச்சோர்வு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. வெளியில் சிரித்துக் கொண்டு இருந்தாலும், உள்ளுக்குள் உடைந்து கொண்டிருக்கும் மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் வலியை கண்களால் பார்க்க முடியாது. ஆனால், அது அவர்களின் ஒவ்வொரு நாளையும் பாதிக்கிறது.
மனச்சோர்வு என்றால் என்ன? அதன் அறிகுறிகளும் தீர்வுகளும்!
இன்றைய காலகட்டத்தில் 'டிப்ரெஷன்' என்பது பலருக்கும் சொந்தமான ஒரு சொல்லாக, மாறிவிட்டது. பொதுவாக டிப்ரெஷனில் உள்ளவர்கள் சோகமாக, தூக்கமின்றி, நம்பிக்கையற்ற மனநிலையுடன், ஒரு விதமான வெறுமை உணர்வோடு, எவ்வித செயல்பாடுகளிலும் ஈடுபடாமலும் ஆர்வம் இல்லாமலும் இருப்பார்கள்.
வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சோதனைகள் சிலசமயங்களில் தோல்வியில் சென்று முடியும். அதனையும் ஒரு கவலையாக மனதில் கொண்டு தன்னைத்தானே வருத்தி கொள்வோம். தோல்வியை நம்மை திருத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே கருத வேண்டும்.
எனது இரண்டு அனுபவங்களை இங்கு நான் பகிர்கிறேன்...
எனது ரயில் பயணத்தின் போது ஒருவரை சந்தித்தேன். அவருடன் பேசிய போது "இந்த காலத்து பிள்ளைங்களாம் எதுக்கு எடுத்தாலும் 'டிப்ரெஷன்'னு சொல்லிட்டு இருக்கீங்க. அந்த காலத்துல நாங்க ரொம்ப சந்தோசமா இருந்தோம். அன்று எனக்கு டிப்ரெஷன்னு ஒரு வார்த்தை இருக்குன்னுகூட தெரியாத அளவுக்கு சந்தோசமா வாழ்ந்தோம். நானும் என்னோட பக்கத்து வீட்டு பிள்ளைகளும் சேர்ந்து, பயமே இல்லாம எங்க ஊரில் எல்லா இடத்திற்கும் செல்வோம். ஆனா இப்ப உள்ள பிள்ளைங்க வீட்டை விட்டு வெளிய வராமல், வரும் சவால்களையும், சோதனைகளையும் டிப்ரெஷன்னு சொல்லிட்டு இருக்காங்க... என்ன சொல்ல?''
நானும் இவ்வாறுதான் சொல்லி கொண்டு இருந்தேன். எனது தந்தை சொன்னார், "உனக்கு வரும் சிக்கல்களை மறக்க உன்னுடைய கவனத்தை வேறு ஏதாவது ஒரு விஷயத்தின் மீது செலுத்து. ஒருவரை மறக்கவோ அல்லது, நம் மனதில் உள்ள கஷ்டங்களை மறக்கவோ அது உனக்கு உதவும்'', என்று சொல்லி, ஒரு நாய்க்குட்டியை எனக்கு பரிசளித்தார். அதனைக் கண்டவுடன் என் மனம் ஆனந்தத்தில் நிறைந்தது.
அப்பொழுதுதான் நானும் சிந்தித்தேன். இந்த காலத்து குழந்தைகளும், இளைஞர்களும், எவ்வித சவால்களையும், சோதனைகளையும் சந்திக்க தயங்கி, நம்பிக்கை இழந்து எளிதில் மனச்சோர்வு அடைந்து விடுகிறோம்.
நம் வாழ்வில் சந்திக்கும் எவ்விதமான சவால்களையும், எதிர்த்து நம்பிக்கையுடன் போராட வேண்டும். அன்றாட வாழ்வில் நடக்கும் பிரச்னைகளை கண்டு, 'என்னால் முடியாது, மிகவும் கடினம்' என்றெல்லாம் சொல்லாமல், சவால்களை கண்டு அஞ்சாமல், எதிர்த்து போராட வேண்டும். சவால்களும், சோதனைகளும், நம்மை செம்மைபடுத்தும் ஒரு கருவிதானே, தவிர அவை நம்மை மனசோர்வடைய செய்வது இல்லை.
மாற்றத்திற்கான புதிய பாதை
சோதனைகள் நம்மை வலிமையாக்குகின்றன. தோல்வியை கண்டு மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு முயற்சி செய்பவரே வாழ்க்கையில் வெற்றியை அடைவார்கள்.
மனசோர்வு என்ற இருண்ட அறைக்குள் நம்மை நாமே பூட்டி வைக்காமல், நம் எண்ணங்களை நேர்மறையான விஷயங்களின் பக்கம் திருப்ப வேண்டும். உங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளில், உடற்பயிற்சி, பயணங்கள், அல்லது எனது தந்தை கற்றுக்கொடுத்தது போல் ஒரு செல்ல பிராணியை வளர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் மனதில் இருக்கும் பாரங்களை உங்களுக்கு பிடித்தமானவர்களிடம் கூறுங்கள். பகிர்தல் என்பது மனசோர்வுக்கு ஒரு சிறந்த வடிகால். எனவே சோதனையை கண்டு அஞ்சாமல் விடா முயற்சியால் சாதித்துக் காட்டுங்கள், நிச்சியமாக வெற்றி அடைவீர்கள்.
வாழ்க்கை என்னும் பயணத்தில் மகிச்சியுடன் பயணியுங்கள்!
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference