

பஞ்ச துளசி என்பது ஐந்து வகையான துளசி இலைகளைக் குறிக்கும். ஒரே ஒரு துளசி வகையைப் பயன்படுத்துவதை விட ஐந்து வெவ்வேறு துளசி வகைகளை ஒன்றாக சேர்க்கும் போது அதன் மருத்துவ குணங்களும் நோய் எதிர்ப்பு ஆற்றலும் பன்மடங்கு அதிகரிக்கும்.
ராம துளசி:
பச்சை நிற இலைகளைக் கொண்டது. லேசான இனிப்பு சுவை உடையது. இது மன அழுத்தத்தை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
கிருஷ்ண துளசி:
கரும் ஊதா அல்லது கருமை நிற இலைகளைக் கொண்டது. காரமான சுவை உடையது. இது வீரியமிக்க கிருமி நாசினியாகவும், வைரஸ் எதிர்ப்பானாகவும் செயல்படுகிறது. இதில் ஆன்டி - ஆக்சிடென்ட்டுகள் அதிகம். சளி, இருமல் மற்றும் தொண்டைப் புண்களுக்கு சிறந்த மருந்தாகும்.
வன துளசி:
காடுகளில் இயற்கையாக வளரக்கூடிய காட்டு துளசி இது. நல்ல நறுமணம் கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவும்.
கற்பூர துளசி:
கற்பூர நறுமணம் வீசக்கூடிய துளசி வகை இது. காது வலி, தோல் நோய்கள், ஆஸ்துமா சளி போன்ற தீவிர சுவாச பிரச்சனைகளுக்கும் நல்லது.
எலுமிச்சை துளசி/ஸ்வேத துளசி:
எலுமிச்சை போன்ற நறுமணமும், மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையும் கொண்டது. மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த துளசி இது. உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, புத்துணர்ச்சியை அளிப்பதுடன் சரும ஆரோக்கியத்திற்கும் உகந்தது.
இந்த ஐந்து வகையான துளசி இலைகளையும் நேரடியாக தண்ணீரில் கொதிக்க வைத்து பருகலாம். பஞ்ச துளசி ஒவ்வொன்றையும் தேடி கொதிக்க வைத்து கஷாயம் தயாரிப்பதை விட ஆயுர்வேத கடைகளில் இது சொட்டு மருந்து வடிவில் கிடைக்கிறது. இதனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் இரண்டு சொட்டுகள் கலந்து தினமும் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
கர்ப்பிணிப் பெண்களும், தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்களும் இதனை எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
அனைத்து வகையான துளசிகளும் புதினா போன்ற புத்துணர்ச்சியூட்டும் நறுமணத்தையும், காரமான சுவையையும் ஒரங்கே கொண்டுள்ளன. நம் அன்றாட வாழ்வில் துளசியை தினமும் எடுத்துக் கொள்வது நம் மனதை ஆசுவாசப்படுத்தி பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை போக்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இது இதயம், கல்லீரல், சருமம் மற்றும் சிறுநீரகங்களை பாதுகாக்க ஒரு சக்தி வாய்ந்த தொற்று எதிர்ப்பு மூலிகையாகும். அதனால்தான் இதனை 'மூலிகைகளின் ராணி' என்று அழைக்கிறார்கள். ஆயுர்வேதத்தில் இதற்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. துளசி செடி தீய சக்திகளை விரட்டவும், 200 மீட்டர் சுற்றளவை புனித இடமாக மாற்றவும் போதுமான மின்சக்தி இதற்கு இருப்பதாக கூறப்படுகிறது.
துளசி முகப்பரு, தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் போன்றவற்றை போக்கி சருமத்திற்கு நன்மைகளைத் தருகின்றன. துளசியில் எலக்ட்ரோலைட்டுகள், வைட்டமின்கள், பைட்டோநியூட்ரியன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை தேவையற்ற வைரஸ் தாக்குதலைப் போக்கி சரும ஆரோக்கியத்தை காக்கிறது.
துளசி மருத்துவ நோக்கங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. இந்து மதத்தில் இது லட்சுமி தேவியின் அவதாரமாக கருதப்பட்டு, ஒரு புனிதத் தாவரமாக வணங்கப்படுகிறது.
சில வகை துளசிகளை தாய்லாந்து உணவு மற்றும் மூலிகை தேநீரிலும் பயன்படுத்துகிறார்கள். மெக்சிகோவிலோ இது ஒரு அதிர்ஷ்டமான தாவரமாக கருதப்படுவதால் இதனை சட்டைப் பையில் வைத்து கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.
இவற்றைப் பயன்படுத்துவதால் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி அடிக்கடி சளி, காய்ச்சல் வராமல் பாதுகாக்கும்.
இருமல், தொண்டை வறட்சி, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நெஞ்சுச் சளியை வெளியேற்ற பெரிதும் உதவும்.
ரத்தத்தை சுத்திகரித்து உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
அஜீரணம், வாயுத்தொல்லை போன்ற வயிற்று உபாதைகளைக் குறைத்து செரிமானத்தை சீராக்கும்.
இது ஒரு சிறந்த அடாப்டோஜென் என்பதால் மன அழுத்தத்தைக் குறைத்து உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியைத் தரும்.