
வேகமாக நடக்கும் பொழுது கால் இடறி நகம் பெயர்ந்து வலியெடுக்கும். அது போன்ற நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவோம். அதற்கு வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே கை வைத்தியம் செய்து வலியைப் போக்கிக் கொள்ளலாம். வலியை தணிக்கும் இது போன்ற சில வீட்டு மருத்துவ குறிப்புகளை காண்போம்.
1. கால் நக வலிக்கு:
நாம் வேகமாக நடக்கும்போது கால் நகங்கள் எதிலாவது இடறி வலி வருவதுண்டு. சில சமயம் குழந்தைகள் விளையாடும் போது கால் நகங்களில் அடிபட்டு வெடிப்பாக வலி வலிக்கும். அப்பொழுது மிளகாய் வற்றலின் உள் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு அதில் தேங்காய் எண்ணெய்யை நிரப்ப வேண்டும். அவற்றை மிதமான நெருப்பில் சூடு பண்ண வேண்டும். எண்ணெய் சூடானதும் மிளகாயின் அடி நுனியில் அதுவாக ஒரு வெடிப்பு ஏற்படும். அப்போது சூடு தாங்கும் அளவுக்கு சொட்டு சொட்டாக அடிபட்ட இடத்தில் அந்த மிளகாயைப் பிடித்துக்கொண்டு அதிலிருந்து சூடான எண்ணெயை விழும்படி செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து வலி நீங்கும்.
2. வயிற்று வலி சரியாக:
வயிற்றில் வாயு அடைத்து கொண்டாலும் வயிறு வலி உண்டாகும். அப்பொழுது உடற்பயிற்சியால் ஜீரண உறுப்புகளை நன்றாக செயல்பட வைக்க வேண்டும். அதனால் வயிற்று வலி குறையும். உடற்பயிற்சி சோர்வை அகற்றி புத்துணர்ச்சி தரும். இந்த மனச்சோர்வு தான் வயிற்று வலிக்கு முக்கியமான காரணம். ஆதலால், நமாஸ் செய்ய அமர்ந்திருப்பவர்கள் எப்படி முட்டியை மடக்கி அதில் அமர்கிறார்களோ அதுபோல் சிறிது நேரம் செய்தால் வயிற்று வலி நீங்குவதை உணரலாம்.
3. ஜலதோஷ நெஞ்சு வலிக்கு:
அதிகமான ஜலதோஷம் பிடித்து இருக்கும் பொழுது நெஞ்சு வலிப்பது போல் இருக்கும். அதற்கு எளிமையாக செய்ய வேண்டிய வைத்தியம் என்னவென்றால், அரை டம்ளர் பச்சரிசியை ஊற வைக்க வேண்டும். அது நன்றாக ஊறியவுடன் அந்தத் தண்ணீரை வடிகட்டி கொஞ்சம் ஈரத்தை காய விட வேண்டும். அப்படி லேசாக காய்ந்த அரிசியை மிக்ஸியில் போட்டு அதனுடன் ஒரு துண்டு சுக்கு , ஒரு துண்டு தேங்காய் சேர்த்து ரவை போல் நல்ல மாவாக வரும்வரை பொடிக்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு வெல்லம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அரைத்து சாப்பிட நெஞ்சு தடுமண், ஜலதோஷம், இருமல் என்று எது இருந்தாலும் குணமாகும்.
4. காது வலிக்கு:
காதில் இரைச்சல், குத்தல் அடைப்பாக இருந்தால் பெரிய பூண்டு பல்லை எடுத்து தோல் நீக்கி காதில் உள் போகாத அளவுக்கு பூண்டின் நுனியை சிறிதாகக் கிள்ளி , கிள்ளிவிட்ட நுனிப்பாகத்தை வலிக்கும் காதில் வைத்து விட குணம் தெரியும்.
5. பல் ஈறு வலிக்கு :
நார்த்த இலையை தண்ணீரில் கொதிக்க விட்டு வாய் கொப்பளிக்க வாய் நாற்றம், வாயில் பல் துர்நாற்றம் குறைந்து பல் ஈறு வலி பாதிப்பு குறையும்.
6. மூட்டு வலி குணமாக:
பெருங்காயத்தை தண்ணீரில் உரசி அந்தத் தண்ணீரை வலியுள்ள இடத்தில் பற்றாக போட்டால் மூட்டு வலி, வாதம் குணம் பெறும்.
மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் ஆப்பிள் சீசனில் ஆப்பிள் ஜூஸ் போட்டு சிறிது தேன் கலந்து தினம் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நாளடைவில் வலி குறையும். ஒரு மாதம் ஆவது இப்படி குடிப்பது அவசியம்.
மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் குளிர்ந்த தரையில் உட்காராமல் தரையில் படுக்காமல் இருக்க வேண்டும். தரையில் நல்ல பிடிமானமான செருப்பு போட்டு நடக்க வேண்டும். மாடிப்படிகள் ஏறாமல் இருந்தால் மிகவும் நல்லது. உணவில் நல்ல காய்கறிகள், கீரைகள், சோயா சேர்த்து சாப்பிட மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மூட்டு வலி மிகவும் அதிகமாக இருந்தால் நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றிலும் ஒரு ஸ்பூன் எடுத்து அதில் கற்பூரம் வில்லை போட்டு சூடு செய்து மூட்டு வலி உள்ள இடத்தில் மெதுவாக தேய்த்து ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். பின்னர் தண்ணீரில் சிறு துண்டு இஞ்சி அதோடு கல் உப்பு சிறிது போட்டு சூடு படுத்தி அந்த வலி உள்ள இடத்தில் தண்ணீரை ஊற்றி வருடி விடவும். இப்படி சில நாட்கள் செய்து வர மூட்டு வலி நல்ல குணமடைவதை உணரலாம்.
7. உஷ்ண வயிற்று வலிக்கு:
வறுத்துப் பொடித்த சீரகப் பொடியை மோரில் சேர்த்து குடிக்க, உஷ்ணத்தால் வரும் வயிற்று வலி சரியாகும். இதுபோல் கை வைத்தியங்கள் செய்து வலிகளை வலுவிழக்க வைக்கலாம் .
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.