நம் உடலின் மையப் பகுதியில் அமைந்துள்ள தொப்புள், பிறப்பின் போது நாம் தாயின் கருப்பையில் இருந்து பிரிந்ததற்கான அடையாளம் ஆகும். இந்த சிறிய பகுதியில் அடிக்கடி அழுக்கு சேர்வதை நாம் கவனித்திருப்போம். ஆனால், அங்கு எப்படி அழுக்கு சேர்கிறது? இதனால், ஏற்படும் ஆபத்துக்கள் என்ன? என்பது பற்றி பலருக்குத் தெரிவதில்லை. இந்தப் பதிவில் அதுகுறித்த முழு விவரங்களைப் பார்க்கலாம்.
தொப்புளில் அழுக்கு சேர்வதற்கான காரணங்கள்:
தொப்புளில் உள்ள முடிகள் இறந்த செல்கள் மற்றும் தூசிகளை பிடித்துக் கொண்டு அழுக்குகளை உருவாக்கும். உடலில் இருந்து வெளியேறும் வியர்வை மற்றும் கொழுப்பு பொருட்கள் தொப்புளில் தேங்கி, அழுக்கை அதிகரிக்கின்றன. சுற்றுப்புறத்தில் உள்ள தூசிகள் தொப்புளில் படிந்து, அழுக்கை உண்டாக்கும். நாம் அணியும் உடைகளில் உள்ள சிறிய நார்கள் தொப்புளில் உள்ளே சென்று அழுக்குகளாக மாறிவிடும்.
ஆபத்துக்கள்: தொப்புள் அழுக்கு பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கான சிறந்த சூழலை ஏற்படுத்தி, தொற்று நோய்களை உண்டாக்கலாம். மேலும், இது மோசமான வாசனையை வெளியிடும் என்பதால், தேவையில்லாத அசௌகரியங்களை சந்திக்க நேரிடலாம். தொற்று அதிகமாக இருந்தால் தொப்புள் பகுதி வீங்கி காணப்படும். ஒருவேளை இதை கவனிக்காமல் நீண்ட காலம் அப்படியே இருந்தால் தொப்புளில் கட்டி உருவாகும் வாய்ப்புள்ளது.
தொப்புள் சுகாதாரம்:
ஒவ்வொரு நாளும் குளிக்கும்போது தொப்புளை சோப்பால் நன்கு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முடிந்தால் தொப்புளில் உள்ள முடிகளை அவ்வப்போது நீக்கிவிடுங்கள். குளித்த பிறகு தொப்புளை நன்றாகத் துடைத்து ஈரப்பதத்தை நீக்க வேண்டும். தொப்புளின் ஈரப்பதத்தைக் குறைக்க, அங்கு பவுடர் தடவலாம். ஒருவேளை தொப்புளில் தொற்று ஏற்பட்டுவிட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.
தொப்புளில் அழுக்கு சேர்வது என்பது சாதாரணமானதுதான் என்றாலும், இது தொற்று நோய்களை ஏற்படுத்தி உடல் நலனை பாதிக்கக்கூடும். எனவே, தொப்புள் சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். தினசரி தொப்புளை சுத்தமாக வைத்திருப்பது மூலம், தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.