

மனநலம் மேம்பட, முதலில் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். ஆனால் நமது அன்றாட வாழ்க்கை முறையில் அது எப்படி முடியும்? போராட்டமே வாழ்க்கையாக இருக்க, பிரச்சனைகள் வரிசை கட்டி நின்றிருக்க, இது நடைமுறைக்கு சாத்தியமா?!
ஆம், உண்மைதான். சில விஷயங்கள் மாறாது. சில விஷயங்களை மாற்றவும் முடியாது என்று நாம் நம்பிக்கொண்டிருக்கும் வரையில், மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால்.... உங்களுடைய தினசரி வாழ்க்கை முறையில், சில செயல்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் அது சாத்தியமாகும்.
நீங்கள் செய்ய விரும்பிய செயல்களில், அடைய நினைத்த வெற்றியை அடைய முடியாவிட்டாலும், அவ்வப்போது நீங்கள் செய்து முடித்த சிறிய விஷயங்களைக் கொண்டாடத் தொடங்குங்கள். ஏனெனில் நாம் எதிர்பார்க்கும் பெரிய மாற்றங்கள் உடனடியாக நடந்து விடுவதில்லை. ஆனால் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், மாற்றத்தை உண்டாக்கும் தூரத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
இதைத்தான் 'அட்டாமிக் ஹாபிட்ஸ்' என்கிற புத்தகத்தில் ஜேம்ஸ் கிளியர் சொல்கிறார். அதில் முக்கியமாக மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க, பத்து விதமான பழக்கங்களைக் கடைப்பிடிக்க ஆலோசனை தருகிறார். அதில் சிலவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
முதலாவதாக, காலை எழுந்தவுடன் உங்களுக்காக ஒரு பத்து நிமிடங்களை ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில், உங்களுடைய கைபேசியைத் தூரமாக வைத்துவிட வேண்டும். எந்தவிதமான சமூக வலைதளங்கள், செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி என எதிலும் கவனத்தைச் செலுத்தாமல் இருக்க வேண்டும். அன்றைய நாளைப் பற்றிய சிந்தனையோடு, அமைதியாக இருக்க வேண்டும்.
அடுத்து உடலுக்கான பயிற்சியைத் தொடங்க வேண்டும். ஆனால் அதிக சிரமத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல், முதலில் பத்து அல்லது இருபது நிமிடங்கள் என்று மெதுவான நடைப்பயிற்சியில் இருந்து தொடங்க வேண்டும். அந்த நேரத்தில் இயற்கையான காற்று, சூரிய ஒளி அல்லது இயற்கை காட்சிகளோடு மனதை இணைக்க வேண்டும்.
அதற்குப் பிறகு உங்கள் அறிவைச் செறிவூட்டும் வகையில், ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து ஒரு பத்து பக்கங்களாவது படிக்க வேண்டும்.
மேலும் குடும்பத்தினர் மற்றும் உறவுகளோடு நேரடியாக (கைபேசி / தொலைபேசி இல்லாமல்), ஒரு சில மணித்துளிகளாவது மனம் விட்டுப் பேசும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஓய்வாக இருக்கும் நேரங்களில், உங்கள் சுவாசத்தைக் கவனியுங்கள். எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றினால், அவற்றை ஒதுக்கி விட்டு அமைதியாக இருங்கள். அன்றைய நாளில் நடந்த நல்ல விஷயங்களை நினைத்துச் சந்தோஷப்படுங்கள். இதுவரை உங்களுக்குக் கிடைத்த நன்மைகளுக்கும், இந்த நாள் இனிமையாக இருப்பதற்கும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் கிடைக்க ஓய்வும் அவசியம். இரவில் கிடைக்கும் நல்ல ஆழ்ந்த தூக்கம், அடுத்த நாளுக்குத் தேவையான தெம்பைத் தரும். தேவையான தூக்கமும், மகிழ்ச்சியாக இருக்கும் மனமும், பல நோய்கள் வராமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்தச் செயல்களைத் தினமும் தவறாமல் செய்து வரும்போது, உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
மனம் மகிழ்ச்சியாக இருப்பின் மனநலம் நன்றாக இருக்கும். மன நலம் நன்றாக இருப்பின் உடல் நலமும் நன்றாக இருக்கும்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference