
உடலில் தேவையற்ற கொழுப்புகள் பல நோய்களை கொண்டு வர வாய்ப்பை ஏற்படுத்தும். கொழுப்பு அதிகரிக்கும் போது, இரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்க வாதம் உள்ளிட்ட பல நோய்களை உண்டாக்குகிறது. இந்த நோய்களின் தொடர்ச்சியாக நீரழிவு நோய், கல்லீரல் நோய், சிறுநீரகம் தொடர்பான நோய்களும் எற்படலாம். கெட்ட கொழுப்பு ஆரம்ப காலக் கட்டத்தில் மூச்சிரைப்பு, சோர்வு போன்ற ஆரோக்கிய குறைபாட்டையும் ஏற்படுத்தும் . இதனால் தேவையற்ற கொழுப்புகளை குறைப்பது மிகவும் அவசியமாகிறது. அதற்கு என்ன செய்யணும்?
1.புகை மற்றும் மது:
புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்தால், உடனடியாக அதை கைவிடுங்கள். இந்த இரண்டு பழக்கங்களும் உடலின் ஆரோக்கியத்தை சீர்கெட வைப்பதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. இந்த பழக்கங்கள் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்க வைக்கிறது.
புகைப்பழக்கம் நுரையீரலை பாதித்து உடலில் ஆக்சிஜனேற்றத்தை குறைக்கிறது. புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதால், உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வைத்து கெட்ட கொழுப்பை குறைக்கலாம். புகைப்பிடித்தலை கைவிட்ட மூன்று மாதங்களுக்குள் நுரையீரல் செயல்பாடு அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக இயங்க வைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கெட்ட கொழுப்பை குறைப்பதில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. மதுப்பழக்கம் கல்லீரல் நோய்களை ஏற்படுத்தி, அதை சரிவர செயல்பட விடாமல் தடுக்கிறது. கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகள் விரைவில் நீரழிவு நோயையும் கொண்டு வந்து விடும். நீரிழிவு நோய் அதிகப்படியான சர்க்கரையை உடலில் கொழுப்பாக மாற்றி தேங்க வைக்கும். மதுவினை கைவிடுவதன் மூலம் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்க முடியும்.
2. உணவு கட்டுப்பாடு :
நாம் சாப்பிடும் உணவில் அதிக கார்போஹைட்ரேட்கள் இருந்தால், அது ரத்தத்தில் கொழுப்பாக மாறக் கூடும். தினசரி நாம் அருந்தும் பானங்கள் கூட உடல் எடையை அதிகரிக்க வைக்கும். பழச்சாறுகள், டின் குளிர்பானங்கள், ஊட்டச்சத்து பானங்கள் ஆகியவை அதிகமாக பருகும் போது கெட்ட கொழுப்பை விரைவாக உடலில் ஏற்றுகின்றன. திட உணவுகளில் அதிகம் சிறுதானியங்களும், நார்ச்சத்து மிக்க உணவுகளும் எடுத்துக் கொள்வது கொழுப்பினை கட்டுப்படுத்தும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு வகைகளை அதிகம் சாப்பிட்டால், அவை கெட்ட கொழுப்பை கரைத்து விடும். இறைச்சிகளை குறைந்த அளவில் உண்ணுவதும், அவை எண்ணெயில் பொறிக்கப்படாமல் வேறு வழிகளை சமைத்து சாப்பிடுவதும் கொழுப்பை ஏற்றாமல் தடுக்கும். அதிக இனிப்பு கொண்ட உணவு பண்டங்களை தவிர்ப்பது மிகவும் நன்மை தரும். கடல் உணவுகள், கோழி, காடை தவிர மற்ற இறைச்சிகளை தவிர்த்தல் நலம் தரும்.
3. எடை மேலாண்மை :
உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும்போது அவை உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பையும் குறைக்கும். உடல் எடைக்கும் கெட்ட கொழுப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உடல் எடை குறைய குறைய கெட்ட கொழுப்பும் குறைய தொடங்கும். சோம்பேறித்தனமான வாழ்வியல் முறைகளை புறம் தள்ளி விட்டு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்தால், உடல் எடையை பராமரிக்க எளிதாக இருக்கும்.
4. உடற்பயிற்சி:
வாரத்திற்கு குறைந்தபட்சம் ஆறு நாட்களாவது தினசரி அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது கெட்ட கொழுப்பினை கரைக்க பெரிதும் உதவும். தினசரி நேரம் சிறிது நேரம் நடப்பதும் , யோகா பயிற்சிகள் செய்வதும் உடல் உள் உறுப்புகளை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும்.
இந்த செயல்பாடுகளை நீங்கள் கடைபிடித்தால், மூன்று வாரங்களுக்குள் கெட்ட கொழுப்பு குறையத் தொடங்கும். பின் ஆரோக்கியமாக வாழலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)