

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்; அந்த சிரசின் பிரதானம் மூளை (Brain Health).
மனித மூளையைப் பற்றி விஞ்ஞானிகள் இன்னமும் ஆராய்ந்து கொண்டுதான் உள்ளனர். ஒரு முடிவுக்கு வர அவர்களால் இயலவில்லை. கணினியைக் காட்டிலும் வேகமானது; (பெண்களைப்போல) புரிந்து கொள்ள இயலா புதிர்தான் அது.
மூளை பல சிறப்புகள் கொண்டது. வலி மறத்தல் மருந்துகள் உட்கொண்டால் மனித மூளையால் எந்த வலியையும் உணர இயலாது. இதில் சுமார் 86 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன.
மனித மூளை பிராணவாயு இல்லாமல் ஐந்து முதல் பத்து நிமிடங்களும், தண்ணீர் இல்லாமல் இரண்டு நாட்களும், தூக்கம் இல்லாமல் பதினோரு நாட்களும், உணவு இல்லாமல் இருபது நாட்கள் வரையும் இயங்கி கொண்டிருக்கும்.
நமது மூளை பதினெட்டு வயது வரை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. மேலும், அது ஹார்ட் டிஸ்கில் உள்ள நான்கு டெராபைட்டுகளுக்கு நிகரான நினைவாற்றல் திறனைக் கொண்டது.
நமது மூளை சுமார் மூன்று பவுண்டுகள் எடை ஆகும். இதில் அறுபது சதவீதம் கொழுப்பு உள்ளது.
மூளையில் 0.025 கிலோவாட் மின்ஆற்றல் கிரகிக்க கூடிய ஆற்றல் கொண்டது. இது ஒரு மின்விளக்கினை ஒளிரச் செய்ய போதுமானதாகும்.
சாக்லெட்டுகளின் நறுமணம் மூளை அலைகளை அதிகரிக்க செய்கிறது. அது மூளை செல்களில் தளர்வை ஏற்படுத்துகிறது என்று சமீபத்திய அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் விவரிக்கின்றன.
மனிதர்களை ஆட்டி வைப்பது ஒன்று அவர்களின் அன்பு மனைவிகள், மற்றொன்று மூளை. அப்படிப்பட்ட மூளையை நாம் பாதுகாக்க வேண்டும். ஆகவேதான் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசம் அணிய அரசாங்கம் கூறிக் கொண்டே உள்ளது. நாம்தான் அதற்கு செவிசாய்ப்பதில்லை.
நம் மூளையை நாம் தான் பாதுகாக்க வேண்டும். அதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
1) குறுக்கெழுத்து போட்டிகள், அறிவு மேம்படுத்தும் விளையாட்டுகள், புதிர் விளையாட்டுகள் ஆகியவற்றை விளையாடி நமது மூளையைப் புத்துணர்வுடன் வைத்திருக்க வேண்டும்.
2) நமது மூளையைப் பாதுகாக்க, இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசமும், மகிழுந்துவில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும்.
3) நாம் வழக்கமான பழக்க வழக்கத்தை அவ்வப்போது மாற்றி புதிய நல்ல பழக்கவழக்கத்தை ஏற்படுத்தினால், நமது மூளை ”சபாஷ்டா” என்று செல்லமாக தலையில் ஒரு கொட்டு வைக்குமே!.
4) புத்தகங்களில் உள்ள நல்ல கதைகள், கட்டுரைகள், நகைச்சுவை துணுக்குகள் படிக்கும் பழக்கம் மேற்கொண்டால் மூளைக்கு டானிக் கொடுத்தது போலாகும்.
5) அன்றாட உடற்பயிற்சி, யோகாசனம் மற்றும் பிராணயாம பயிற்சிகளும் மேற்கொண்டால் நமது மூளையை புத்துணர்வுடன் இயங்கும்.
6) நாம் ஒரு நாளைக்கு ஆறுமணி நேரம் முதல் எட்டுமணி நேரம் ஆழ்ந்த உறக்கம் மேற்கொண்டால் மூளை புத்துணர்ச்சி பெறுவதோடு, அதற்கு ஒரு உந்துசக்தி கிடைக்கும்.
7) மனஅழுத்தத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால், அனைவரிடமும் மனம்விட்டு பேசி சிரித்து மகிழ்ந்தோம் என்றால் மனஅழுத்தம் நீங்கி மூளையும் நமது உடலும் புத்துணர்வு பெறும்.
8) மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களைத் தவிர்த்தாலே மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.
9) புரோட்டின் நிறைந்த உணவுகளும், நல்ல கொழுப்புகள் அடங்கிய உணவுகள், காய்கறிகள் மற்றும் பழவகைகளை அதிகமாக உண்டால் மூளையின் புத்துணர்விற்கு நூறு சதவீதம் உத்திரவாதம்.
10) நமது மூளை எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கவும், இளமையாக வைத்திருக்கவும், புதிய விஷயங்களைக் கற்று கொள்ளலாம். மேலும், புதிய மொழிகளைக் கூட கற்றுக் கொள்ளலாம்.
11) எப்பொழுதும் இயல்பான புன்னகை முகத்தோடும், மகிழ்ச்சியோடும், அன்பாகவும், மனநிறைவோடும் இருந்தாலே மனஅழுத்தம் மாயமாக மறைந்து மூளை என்றும் இளமையாக இருக்கும்.
12) அதிகமான நேரங்களை டிஜிட்டல் உலகத்தில் உலாவுதல், அலைபேசியைப் பயன்படுத்துதல், தேவையற்ற மனஅழுத்தம் தரக்கூடிய செய்திகள், வதந்திகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது மூளைக்கு தக்க பாதுகாப்பாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)