
இன்றைய வாழ்க்கை முறையில் உடல் பருமன் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும், உடற்பயிற்சியின்மையும் இதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. உடல் எடையை குறைக்க பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். கடுமையான உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகள் என பல வழிகள் இருந்தாலும், நடைப்பயிற்சி போன்ற எளிய முறைகள் மூலம் கூட உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது உண்மை.
சமீப காலமாக உடல் எடையைக் குறைப்பதற்கான ஒரு புதிய நடைப்பயிற்சி முறை பிரபலமாகி வருகிறது. அதுதான் "5-4-5 நடைப்பயிற்சி". இந்த முறை உடல் எடையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நடைப்பயிற்சி முறையின் முதல் கட்டம் 5 நிமிடங்கள் லேசாக ஓடுவது. இது இதயத் துடிப்பை அதிகரித்து உடலின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. மேலும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி நுரையீரல் திறனையும் அதிகரிக்கிறது. இதனால் உடல் வலிமை பெறுவதோடு தசைகளும் வலுவடைகின்றன.
இரண்டாவது கட்டம் 4 நிமிடங்கள் மிதமான வேகத்தில் நடப்பது. ஓடிய பிறகு நடப்பது சுவாசத்தை சீராக்க உதவுகிறது. தசை சோர்வை குறைத்து அடுத்த கட்டத்திற்கு உடலை தயார்படுத்துகிறது. இது உடலுக்கு ஒரு நல்ல ஓய்வை அளிக்கிறது.
மூன்றாவது மற்றும் முக்கியமான கட்டம் 5 நிமிடங்கள் வேகமாக நடப்பது. இந்த விறுவிறுப்பான நடைப்பயிற்சி உடல் உறுதியை மேம்படுத்தவும், கால் தசைகளை வலுப்படுத்தவும், இதயத்தின் செயல்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. வேகமாக நடக்கும்போது அதிக கலோரிகள் எரிக்கப்படுவதால் உடல் எடை விரைவாக குறைய வாய்ப்புள்ளது.
இந்த 5-4-5 நடைப்பயிற்சி சூத்திரத்தை ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது செய்வது நல்லது. அதாவது, மொத்தம் 45 நிமிடங்கள். முடியாதவர்கள் இரண்டு முறை, அதாவது 30 நிமிடங்கள் செய்தாலும் பலன் கிடைக்கும். ஆரம்பத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்துவிட்டு, படிப்படியாக நேரத்தை அதிகரிப்பது சிறந்தது.
உடல் எடையைக் குறைக்க விரும்பும் மக்கள் இந்த எளிய மற்றும் பயனுள்ள 5-4-5 நடைப்பயிற்சி முறையை முயற்சி செய்து பார்க்கலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கும், உடல் எடைக்கும் ஒரு நல்ல மாற்றத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.