அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் என்பது பிரபலமானதொரு தமிழ்ப் பழமொழியாகும். இதை நமது முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் என்றால் எப்படிப்பட்ட சுவையான உணவானாலும் அதை நாம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உட்கொண்டால் அது எதிர்மறை விளைவுகளைத் தந்து விஷம் போலாகிவிடும் என்பதை உணர்த்துவதற்காகத்தான்.
இங்கு நம்மில் பலரும் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாகவே இருக்கிறோம். தினமும் ஒன்று அல்லது இரண்டு காபிக்கு மேல் அருந்தும்போது அதிலுள்ள காஃபின் என்ற பொருள் உடலுக்கு எத்தகைய ஆரோக்கியக் குறைபாடுகளை உண்டுபண்ணும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
காபி மற்றும் டீயின் முக்கிய கூட்டுப்பொருளான காஃபின், உடலின் மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை ஊக்குவித்து அதிகப்படியான சக்தியையும் சுறுசுறுப்பையும் தரக்கூடியது. அளவுக்கு அதிகமாக காஃபின் உடலில் சேரும்போது இதயம் மற்றும் நரம்புகளில் படபடப்பு மற்றும் சக்தியின் வெளிப்பாட்டில் ஒழுங்கற்ற தன்மை உண்டாகும்; கார்ட்டிசோல் (cortisol) என்னும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் தூண்டப்பட்டு மன அழுத்தம் அதிகரிக்கும்.
காஃபின் உடலின் தூங்கும் மற்றும் எழுந்துகொள்ளும் நேர சுழற்சியில் தலையிட்டு கோளாறுகளை உண்டுபண்ணுவதால் பகலில் சோர்வு, எரிச்சல் மற்றும் கவனச் சிதறல் உண்டாக வாய்ப்புண்டாகிறது.
காபி, டீ அதிகம் எடுத்துக்கொள்ளும்போது மைக்ரைன் எனப்படும் நாள்பட்ட தலைவலி உண்டாகும் வாய்ப்பேற்படுகிறது. அதிகமாக காபி, டீ குடிப்பதைப் பழகி விட்டு திடீரென அவற்றைக குறைப்பதாலும் சிலருக்கு மைக்ரைன் தலைவலி உண்டாகக் கூடும்.
அளவுக்கதிகமான காஃபின், வயிற்றின் உட்புற சுவர்களில் எரிச்சலை உண்டுபண்ணுவதால் நெஞ்செரிச்சல், வயிற்று அமிலம் உணவுக் குழாய்க்குள் பாய்வது மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற ஆரோக்கியக் குறைபாடுகளும் ஏற்பட வாய்ப்பாகிறது.
அதிகளவு காஃபின் சிலருக்கு தற்காலிகமாய் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பின் அளவை உயரச் செய்கிறது. உடலளவில் மட்டுமின்றி, அதிகளவு காஃபின் மனதளவிலும் உணர்வுபூர்வமாகவும் பாதிப்பை உண்டுபண்ணக் கூடியது. ஸ்ட்ரெஸ்ஸைக் குறைப்பதற்காக குடிக்க ஆரம்பித்த ஒரு கப் காபி, நாளடைவில் அதிகமாகும்போது ஸ்ட்ரெஸ்ஸை சமாளிக்கக் கூடிய நம் திறமையையே குலைத்து விடுகிறது. காபி, டீயை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லாததால் ஒன்றிரண்டு கப்போடு நிறுத்திக்கொள்ளப் பழகிக் கொண்டால் நம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.