
கொண்டாட்டம் மிக்க தீபாவளி பண்டிகையை ஒட்டி ஒவ்வொரு வீட்டிலும் ஏராளமான இனிப்புகளை செய்து மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். தீபாவளி அன்று ஒவ்வொரு வீட்டிற்கும் இனிப்புகளை பகிர்ந்து கொள்வதும், அவர்கள் கொடுக்கும் இனிப்புகளை பெற்றுக் கொள்வதும் பாரம்பரியமான ஒரு விஷயம் தான். தீபாவளி வாரங்களில் உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீட்டிற்கு நீங்கள் செல்லும்போது, அவர்கள் செய்த பலகாரங்களை சாப்பிட சொல்லி வற்புறுத்துவார்கள்.
அந்த நேரத்தில் நீங்கள் நீரிழிவு நோயாளி என்றோ, இனிப்பு பண்டங்களை சாப்பிட மாட்டேன் என்று கூற முடியாமல், ஒருவித சங்கடத்துடன் சமாளிப்பது எப்படி என்று அறியாமல் இருப்போம். ஒரு சில விதிகளை பின்பற்றினால் தீபாவளி போன்ற பண்டிகை நாளன்று சர்க்கரை நோய் உள்ளவர்களும் இனிப்பினை ருசிக்கலாம்.
தவிர்க்க வேண்டியவை:
உங்களது வீட்டில் பலகாரங்கள் தயாரிக்கும் போது, அதில் இனிப்பு பயன்படுத்தும் அளவை கூடுமான அளவிற்கு கட்டுப்படுத்துங்கள். ஒரு சில இடங்களில் சர்க்கரையை குறைக்க முடியாவிட்டால், அந்த இனிப்புகளை மட்டும் உண்பதை தவிர்த்து விடுங்கள். உதாரணமாக குலோப் ஜாமுன், அல்வா, ரசகுல்லா போன்ற இனிப்புகளில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க முடியாது. அதுபோன்ற இனிப்புகளை உண்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
சுகர் ஃப்ரீ இனிப்புகளை சாப்பிடுங்கள்:
ஒரு சில இனிப்புகளில் சுகர் பிரீ, ஸ்டீவியா போன்ற சர்க்கரை இல்லாத இனிப்புகளை பலகாரங்களில் சேர்த்து தயாரித்தால், அதை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட முடியும். இந்த சுகர் ஃப்ரீ இனிப்பூட்டிகளை பயன்படுத்தி ஒரு சில இனிப்பு வகைகளை செய்ய முடியும். வீட்டில் உள்ளவர்களுக்கு அது போன்று தயாரிக்க தெரியாவிட்டால், தரமான இனிப்பகங்களில் சுகர் ஃப்ரீ பயன்படுத்தி இனிப்புகள் தயாரித்து விற்பனை செய்கின்றனர், விலை சற்று கூடுதலாக இருந்தாலும் அந்த இனிப்புகளை வாங்கி நீங்கள் சுவைக்கலாம்.
வெறும் வயிற்றில் இனிப்பை தவிர்க்கவும்:
பண்டிகை காலத்தில் வீட்டில் இனிப்புகள் கட்டாயம் இருக்கும் என்பதால், காலையிலேயே அல்லது வெறும் வயிறாக இருக்கும்போது எந்த இனிப்பையும் சாப்பிட வேண்டாம். வெறும் வயிற்றில் இனிப்புகள் சாப்பிட்டால், உடனடியாக சர்க்கரை அளவை ரத்தத்தில் தூண்டி விடக்கூடும். இதனால் முதலில் ஏதாவது ஒரு திட உணவை பாதி அளவு உண்ட பின்னர், உங்களுக்கு பிடித்த இனிப்பு வகைகளை ருசி பார்த்துக் கொள்ளுங்கள்.
சாப்பிட வேண்டியவை மற்றும் நடைபயிற்சி:
சாப்பிடும் இனிப்பு வகைகள் சர்க்கரை குறைந்த அதிரசம், நெய் உருண்டை, இனிப்பு சேர்த்த முறுக்கு வகைகள், சோமாஸ், பாதுஷா போன்றவற்றை ஒவ்வொன்றாக சாப்பிடலாம். நீங்கள் பாதி அளவு தான் உணவு சாப்பிட்டிருப்பதால், மீதி உணவுக்கு பதில் இந்த இனிப்புகள் சாப்பிட்டால் போதுமான ஆற்றலும் கிடைக்கும், அதேபோல் உடலில் சர்க்கரை ஏறுவதையும் குறைக்கும்.
இந்த லேசான இனிப்புகளை சாப்பிட்ட பின்னர் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். இந்த நடைப்பயிற்சி செய்வதால் உடலில் சர்க்கரை அளவு திடீரென்று கூடுவது கட்டுப்படுத்தப்படும், குறைந்தபட்சம் 20 நிமிடம் நடைப்பயிற்சி செய்யவும். இனிப்பு சாப்பிடும் தினங்களில் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தினை நிறுத்தி வையுங்கள். அதற்கு பதில் சிறிய அளவில் இனிப்புகளை சாப்பிடலாம்.
தண்ணீர் குடியுங்கள், உதவி செய்யுங்கள்:
போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். தண்ணீர் அதிகம் குடிப்பதால் உடலில் ஒரே நேரத்தில் சர்க்கரை அளவு ஏறுவதை ஓரளவு மட்டுப்படுத்தும். இனிப்புகள் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்க மறக்க வேண்டாம்.
வீட்டில் சிறு சிறு வேலைகளை செய்து கொண்டே இருங்கள். இந்த நாட்களில் வீட்டை சுத்தம் செய்வது, மற்றவர்கள் வேலை செய்யும் போது உதவி செய்வது போன்ற சிறு சிறு உதவிகளை செய்து கொண்டு இருங்கள். உங்கள் உடலில் சேரும் கலோரிகளை வேலை செய்து எரித்து விடுங்கள். பண்டிகை காலமாக இருந்தாலும் உங்களது நீரிழிவு நோய் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டாம். தேவைப்படும் பட்சத்தில் சர்க்கரை அளவை வீட்டிலேயே சரி பார்த்துக் கொள்ளவும். சில தினங்களில் எந்தவகையான இனிப்பு சாப்பிடுவதையும் நிறுத்தி விடவும்.