புகைப்பிடிப்பதால் பல கேடுகள் விளையும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், இந்த புகைப்பழக்கத்தினால் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு நேரங்கள் குறையும் என்பது தெரியுமா?
புகைப்பழக்கம் மது பழக்கம் ஆகியவை நமது உடல் நலத்திற்கு கேடு என்பது நம் அனைவருக்குமே தெரியும். தெரிந்தும் அந்த பழக்கத்தை விட முடியாமல் தவிப்பவர்கள் ஏராளம். சமீபத்தில்கூட ஷாருக்கான் தனது புகைப் பழக்கத்தை விட்டுவிட்டதாக கூறியிருந்தார். அவர் இதற்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் தான் ஒரு நாளைக்கு 100 சிகரெட் பிடிப்பதாக கூறினார்.
இப்படி சிகரெட் பழக்கத்தை கஷ்டப்பட்டு நிறுத்துபவர்கள் ஏராளம். ஆனால், அப்படி நிறுத்தினாலுமே மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல காலங்கள் ஆகும்.
புகைப்பழக்கம் அதிகம் இல்லாதவர்கள் புகைப் பிடிப்பதை நிறுத்தினால் இதய ஆரோக்கியம் இயல்பு நிலைக்கு வர 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும் என்று ஆய்வு கூறுகிறது. அதிகம் புகைப்பிடிப்பவர்கள், அதாவது ஒரு நாளைக்கு மட்டும் கணக்கில் வைத்துக்கொள்ளாத அளவிற்கு புகைப்பிடிப்பவர்களின் இதய ஆரோக்கியம் முழுவதும் குணமாக 25 ஆண்டுகள் வரை ஆகும் என்கிறது புதிய ஆய்வு ஒன்று.
புத்தாண்டு ஆரம்பித்ததால் சென்ற ஆண்டு இறுதியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. சுகாதாரம் மற்றும் சமூகப் பராமரிப்புத் துறையால் நியமிக்கப்பட்ட ஆய்வை நடத்திய லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், புகைப்பிடிப்பவர்கள் ஆரோக்கியமற்ற பழக்கத்தை விட்டுவிட்டு புத்தாண்டை நல்ல படியாக தொடங்க வேண்டும் என்று கூறினார்கள்.
மேலும் இதுகுறித்து பேசும்போது, “சிகரெட் பழக்கத்தால் ஆண்டிற்கு 80 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். இவர்கள் ஆரோக்கியத்தையும் ஆயுட்காலத்தையும் இழக்கிறார்கள். ஒரு சிகரெட் ஒரு நபரின் வாழ்க்கையில் சுமார் 20 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. அதாவது 20 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட்டால் ஒரு நபரின் வாழ்க்கையில் கிட்டத்தட்ட ஏழு மணிநேரம் குறைகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவர் ஜாக்சன் கூறுகையில், “புகைப்பிடிப்பதை நிறுத்தாதவர்கள் சுமார் ஒரு தசாப்த வாழ்க்கையை இழக்கிறார்கள்.” என்று எச்சரிக்கிறார்.
இதன்மூலம் இந்த புத்தாண்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
புகைப்பழக்கம் உடையவர்கள் முழுமையாக 1 வருடம் நிறுத்திவிட்டால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.
திடீர் இதய செயலிழப்பு, சிரை த்ரோம்போம்போலிசம் மற்றும் புற தமனி நோய் அபாயம் ஆகியவை குறைகிறது. இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்ற சுவாச அறிகுறிகளை குறைக்கிறது. மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா போன்ற சுவாச தொற்றுகளை குறைக்கிறது. இதுபோல படிப்படியாக குணமடையலாம்.