பெரும்பாலான மக்கள் காலை ஒரு வேளை மட்டும் தான் பல் துலக்குகிறார்கள் (brushing teeth). ஒரு சிலர் மட்டும் தான் காலை இரவு என இரண்டு வேளைகளும் பல் துலக்குகிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஒரு நாளில் மூன்று முறை பல் துலக்குவதை கட்டாயமாக வைத்துள்ளனர். இரவில் தூங்குவதற்கு முன்னால் பல் துலக்குவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. பல் துலக்குவதற்கும் நல்ல தூக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறது . இரவில் ஒருவர் பல் துலக்கினால் அவருக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும். பகலில் அவரது புன்னகையை மெருகேற்றும்.
இரவு உணவு உண்ட பின் வாயில் மற்றும் பல் இடுக்குகளில் உணவுத் துகள்கள் ஒட்டிக் கொண்டு இருக்கும். நேரம் ஆக ஆக உணவுத் துகள்களின் பாக்டீரியாக்கள் உற்பத்தியாக தொடங்கும். இரவு நேரம் நாம் தூங்கும் போது வாய் மற்றும் அதை சார்ந்த உறுப்புகள் ஓய்வெடுக்கும் என்று நினைப்போம்.
ஆனால் , வாய் சுகாதாரத்தில் பாக்டீரியாக்கள் இரவில் அதிக பாதிப்பை அடைய வேலை செய்கின்றன. இரவு நேரத்தில் வாயில் உமிழ்நீர் உற்பத்தி பாதியாக குறையும். உமிழ்நீர்கள் வாயின் ஆரோக்கியத்தை பராமரிக்கின்றன. உமிழ்நீர் தான் அமிலங்களை கட்டுப்படுத்துபவை, பற்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கச் செய்பவை.
வாயில் உமிழ்நீர் உற்பத்தி குறையும் போது பாக்டீரியாக்கள் வேகமாக உற்பத்தியாகும். பாக்டீரியாக்கள் பற்களில் பூச்சிகளை உருவாக்கி ஈறுகளை பலவீனம் அடைய செய்கின்றன. வாயில் அதிக பாக்டீரியாக்கள் செயல்பாடு இருந்தால் பற்களின் சேதத்தை சரி செய்ய முடியாது. இது இயற்கையாக ஈறுகள் பலமடைவதற்கு தடையாக இருக்கின்றது. இதனால் ஈறுகள் பாதிப்படைந்து , அடிப்பகுதியில் வீக்கம் ஏற்படுகின்றது. இந்த வீக்கம் பற்களின் வேர்களை பலவீனமடைய செய்கிறது. இதனால் அடிக்கடி ஈறு வலி, பல் வலி போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகலாம்.
இரவில் பல் துலக்காமல் இருப்பது காலையில் பல் துலக்காமல் இருப்பதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
தூக்கம் சரிவர வராமல் இருப்பது ஒருவருக்கு பலவிதமான நோய் பாதிப்புகளை உண்டாக்கும். ஈறு பிரச்சினை , பல் வலி போன்றவை உங்களின் தூக்கத்தை கெடுக்கக் கூடும். சரியான தூக்கம் இல்லாதது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து , மன அழுத்தத்தை உண்டுபண்ணும்.
இரவில் பல் துலக்காமல் விடுவதால் பற்கள் சொத்தையாக மாறும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும் ஈறுகளில் தொற்று ஏற்பட்டு, ஈறு இரத்த கசிவு போன்ற பலவீனமான நிலை ஏற்படும். தூக்கத்தில் பற்களை கடிக்கும் பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படலாம்.
இரவு நேரங்களில் வீங்கிய ஈறு பிரச்சனைகளை கொண்டவர்களுக்கு, இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. மேலும் இது இதயநோய் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடியது. இதனால் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரவு நேரங்களில் பற்களை சுத்தப்படுத்துவதில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.
இரவு நேர பற்கள் பராமரிப்பு:
தினசரி இரவு 8 மணிக்குள் உணவை உட்கொள்ள வேண்டும். அதன் பின்னர் அரைமணி நேரம் கழித்து பல் துலக்கி விட்டு , வாயை நன்கு கொப்பளித்து விட்டு படுக்க செல்ல வேண்டும். வெந்நீரில் வாய் கொப்பளிப்பது பாக்டீரியாக்களை அழிக்க சிறந்த தேர்வாக இருக்கும். பல் துலக்கிய பின்னர் தண்ணீர் தவிர எந்த பானமும் அருந்தக் கூடாது. இவ்வாறு பற்களை இரவு நேரத்தில் சுத்தம் செய்வதன் மூலம் இரவில் நல்ல தூக்கத்தை அனுபவிக்கலாம். நோய்களில் இருந்தும் பாதுகாப்பாக இருக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)