

தண்ணீர் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் இதன் முக்கியத்துவத்தை நம்மில் பலர் உணர்வதில்லை. தண்ணீர் இல்லையென்றால் ஒரே நாளில் நமது மனித உடல் வாடி சோர்ந்து விடும்.
தண்ணீர் நம் தாகத்தைத் தணிக்கிறது. இத்துடன் மட்டுமல்லாமல், நமது பல்வேறு உடல் உறுப்புகளுக்கும் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. தண்ணீர் நம் உடலில் நீரிழப்பைத் தடுத்தல், உடல் வெப்பநிலையை சீர்ப்படுத்துதல், செல்களுக்கு ஊட்டச்சத்துக்களையும் ஆக்சிஜனையும் கொண்டு செல்லுதல், சருமத்திற்கும் பிற திசுக்களுக்கும் ஈரப்பதத்தை அளித்தல், மலச்சிக்கலைப் போக்குதல், மூட்டு எலும்புகளுக்கு இடையிலான உராய்வினைத் தடுத்தல், தசையை வலுப்படுத்துதல், உடலில் நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றுதல், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்தல், எடை இழப்பை ஊக்குவித்தல் ஆகிய உடல் செயல்பாடுகளுக்கும் பெரிதும் உதவியாக இருக்கிறது.
நம் நாட்டில் 75% க்கும் அதிகமான மக்கள் நாள்பட்ட நீரிழப்பால் தினமும் அவதிப்படுகின்றனர். பெரும்பாலான நேரங்களில் நமக்கு ஏற்படும் தாகம், பசி எனத் தவறாகக் கருதப்படுகிறது. லேசான நீரிழப்பு கூட ஒருவரின் வளர்சிதை மாற்றத்தை 3% வரை குறைக்கும் எனக் கூறப்படுகிறது.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஒரு கிளாஸ் அளவு தண்ணீரே 98% பேர்களின் பசியைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நம் உடல் சோர்வுக்கும், மனச் சோர்வுக்கும் முக்கியக் காரணம் போதிய தண்ணீர் அருந்தாமல் இருப்பதே!
ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பது முதுகு மற்றும் மூட்டு வலிக்கு ஒரு நல்லத் தீர்வாக அமையும் என ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. நாம் தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.
காலை எழுந்தவுடன் நாம் குடிக்கும் 2 கிளாஸ் தண்ணீர் நம் உள் உறுப்புகள் நன்கு செயல்பட உதவுகிறது.
உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் 1 கிளாஸ் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது.
குளிப்பதற்கு முன் 1 கிளாஸ் தண்ணீர் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
படுக்கைக்குச் செல்லும் முன் 1 கிளாஸ் தண்ணீர் குடிப்பது பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
நமது தண்ணீர் அருந்தும் பழக்கத்தை மேம்படுத்திக்கொள்ள, நமது மூளையில் உள்ள நீரின் அளவு 80%, நமது இரத்தத்தில் உள்ள நீரின் அளவு 90%, நம் எலும்புகளில் 22% என்னும் உண்மைகளை நினைவில் வைத்துக் கொள்ளுவது நல்லது.
உணவை ஆற்றலாக மாற்ற தண்ணீர் உதவுகிறது. மேலும், தண்ணீர் நம் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது. நமது தசைகளில் உள்ள நீரின் அளவு 75%. நமது முகம் மற்றும் தோல் உட்பட அனைத்து திசுக்களின் ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் மிகவும் உதவுகிறது.
தினமும் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துவது, அலுவலகத்தில் தண்ணீர் குடிக்க இடைவேளை எடுத்துக் கொள்ளுதல், வேலைக்கு அல்லது கல்லூரிக்குச் செல்லும்போது தண்ணீர் பாட்டில்களை நம்முடன் எடுத்துச் செல்லுதல், நாம் பணி புரியும் இடங்களில் நம் எதிரே பணிகளுக்கு இடையே அவ்வப்போது அருந்துவதற்கு ஒரு கப் தண்ணீரை நமது மேஜையின்மேல் வைத்திருப்பது போன்ற நற்பழக்கங்கள் நாம் தினமும் போதிய அளவு குடிப்பதை ஊக்கப்படுத்தும். நாம் உடல் செயல்பாடுகளைச் செய்வதற்கு முன், செய்யும்போது மற்றும் செய்ததற்குப் பின் எப்போதும் தண்ணீர் அருந்தலாம்.
நாம் குடிக்கும் தண்ணீர் சுகாதாரமானதாக இருப்பதை குடிப்பதற்கு முன் உறுதி செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் அசுத்தமான நீரின் மூலம் நமக்கு ஏற்படும், காலரா, டைபாய்டு போன்ற அபாயகரமான நோய்கள் நமக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியும். நல்ல குடிநீர் நம் உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்பதை உணர்ந்து இனியாவது செயல்படுவோம். நலமான வாழ்வு வாழ்வோம்.