நம் உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும் அடித்தளம் அமைத்துத் தருவது, நாம் உட்கொள்ளும் உணவு நல்ல முறையில் செரிமானமடைந்து சத்துக்கள் உறிஞ்சப்படும் செயல்களேயாகும். இச்செயல்கள் அனைத்தையும் நடத்திக் கொடுப்பது நம் ஜீரண மண்டல உறுப்புகள். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஜீரண மண்டல உறுப்புகளில் வீக்கம், உணவுகள் ஜீரணமாவதில் மந்தநிலை போன்ற அசௌகரியங்கள் உண்டாகும்போது மொத்த உடலுறுப்புகளுக்கும் தேவையான சக்தி கிடைப்பதில் குறையேற்படும்.
இந்நிலையைத் தவிர்க்க, உண்ணும் உணவில் சில மாற்றங்களைக் கொண்டுவரும்போது பிரச்சினை தீர்ந்துவிடும். அப்படி நாம் செய்ய வேண்டிய 7 முக்கியமான உணவியல் மாற்றங்கள் என்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. சிறப்பான செரிமானத்தை ஊக்குவிக்கவும், வைட்டமின்கள் நல்ல முறையில் உடலுக்குள் உறிஞ்சப்படவும் உதவக் கூடிய, ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் நிறைந்த அவகேடோ பழங்கள் மற்றும் ஆலிவ் ஆயிலை நம் உணவுடன் சேர்த்துக்கொள்வது மிகுந்த நன்மை தரும்.
2. பழங்கள், காய்கறிகள், முழு தானிய வகைகள், பயறு மற்றும் பருப்பு வகை உணவுகள் ஆகியவற்றில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவைகளை அடிக்கடி நம் உணவுடன் சேர்ந்து உண்பது செரிமானம் சிரமமின்றி நடைபெறவும் மலச்சிக்கல் நீங்கவும் உதவி புரியும்.
3. வயிறு வீக்கம் உண்டாவதைத் தடுக்கவும், செரிமானம் சிறப்பாக நடைபெறவும், மலச்சிக்கல் நீங்கவும் நல்ல முறையில் உதவி புரிவது தண்ணீர். எனவே ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு அவசியம் தேவை.
4. யோகர்ட் மற்றும் கெஃபிர் போன்ற உணவுகளில் ப்ரோபயோட்டிக்ஸ் அதிகம் நிறைந்துள்ளன. இவை குடலில் உள்ள, செரிமானத்துக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுபவை. இந்த உணவுகளை தினசரி உட்கொண்டால் ஜீரணம் நல்லமுறையில் நடைபெறும்.
5. ஒரு நாளில் ஒவ்வொரு முறையும் நாம் உட்கொள்ளும் உணவின் அளவை குறைத்துக் கொள்வது இரைப்பை குடல் இயக்கங்கள் அதிக பளுவின்றி சமநிலையில் இயங்க வழிவகுக்கும். தேவைப்பட்டால் இரண்டு வேளை உணவிற்கு இடைப்பட்ட நேரத்தை குறைத்து மூன்று வேளைக்குப் பதில் நான்கு வேளை குறைந்தளவு உணவை எடுத்துக்கொள்ளலாம்.
6. ஜீரணத்துக்கு சிறந்த முறையில் உதவக்கூடிய இஞ்சியை உணவுடன் சேர்ந்து உட்கொள்ளலாம். இஞ்சியில் டீ போட்டும் அருந்தலாம். இஞ்சி ஜீரண மண்டல உறுப்புகளை அமைதிப்படுத்தவும், வீக்கங்களைக் குறைக்கவும் உதவும்.
7. பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதை குறைத்துக் கொண்டால் ஜீரணக் கோளாறுகள் உண்டாகும் அபாயம் நீங்கும். இரைப்பை குடல் இயக்கங்கள் மேன்மையுறும்.
உணவு உட்கொள்ளும் முறையில் மேற்கூறிய மாற்றங்களை செய்து ஜீரண மண்டல செயல்பாடுகளை சிறப்பாக்குவோம்.