உடல் எடையைக் குறைக்க இன்க்ளைன் நடைப்பயிற்சி (Incline walking) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இது சாதாரண நடைப்பயிற்சியை விட அதிக கலோரிகளை எரிக்கிறது. பசியை குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கும் ஹார்மோன் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது. மிதமான சாய்வில் தொடங்கி படிப்படியாக வேகத்தையும் சாய்வையும் அதிகரிப்பது எடை இழப்புக்கு உதவும்.
வீட்டில் இருந்தே உடற்பயிற்சி செய்ய உதவும் 'Treadmill'
1) இன்க்ளைன் நடைப்பயிற்சியின் நன்மைகள்:
சாய்வான நடைப்பயிற்சி ஒரு சிறந்த மற்றும் பயனுள்ள பயிற்சியாகும். தட்டையான தரையில் நடப்பதை விட, சாய்வான பரப்பில் நடக்கும்பொழுது உடல் அதிக ஆற்றலை செலவழிக்கிறது. இதனால், அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஒரு சாய்வில் நடப்பது உடல் முழுவதும் ரத்தத்தை பம்ப் செய்ய இதயம் அதிகம் உழைக்க வேண்டி வரும் இது இதய தசையை வலுப்படுத்தும். அத்துடன் இது அதிக தசைகளை ஈடுபடுத்துகிறது மற்றும் இதயத்துடிப்பை அதிகரிக்கிறது. இது எடை இழப்புக்கு முக்கியமானது.
சாய்வான நடைப் பயிற்சியால் நம் கால்கள், பிட்டம் (glutes) மற்றும் தொடை தசைகளை பலப்படுத்துகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஓடுவதைப் போலல்லாமல், இது மூட்டுகளில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் காயங்களின் அபாயம் குறைகிறது.
இது கார்டிசோல் அளவைக் குறைத்து தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகிறது.
சாய்வான நடைப்பயிற்சி பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் அளவைக் குறைக்கும்.
மூட்டு மற்றும் கணுக்கால் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்றாகும். ஏனெனில், இது உடற்பயிற்சியின் தாக்கத்தை குறைக்கிறது.
2) எப்படி தொடங்குவது?
ஆரம்பத்தில் சிறிய சாய்வுடன் தொடங்கி, நம் உடல் வலிமை பெறும் பொழுது படிப்படியாக சாய்வையும் வேகத்தையும் அதிகரிக்கலாம். குறைந்த பட்சம் 1-5% சாய்வில் தொடங்கி, படிப்படியாக நம் உடல் தகுதிக்கேற்ப அதிகரிக்கலாம்.
ஒரு குறுகிய கால தீவிரப் பயிற்சியை விட, தினசரி நிலையான பயிற்சி சிறந்த பலனைத் தரும். மிதமான வேகத்தில் தொடங்கி, நாம் வசதியாக உணரும்போது வேகத்தை அதிகரிக்கலாம்.
எடை இழப்புக்கு உடற்பயிற்சியுடன் சேர்த்து ஆரோக்கியமான உணவும் அவசியம். பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. நடைப்பயிற்சியின் பொழுது போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
தொடர்ந்து இந்த உடற்பயிற்சியை செய்து வருவது சிறந்த பலனைத் தரும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)
வீட்டில் இருந்தே உடற்பயிற்சி செய்ய உதவும் 'Treadmill'