
நமது ஜீரண மண்டலம் தானாகவே இயங்கும் அதிசயமான அற்புதமான பகுதி. உணவுக் குழாயிலிருந்து துவங்கி, இரைப்பை, வயிறு, சிறுகுடல், பெருங்குடல் மலக்குடல் வரை சென்று, இறுதியாக ஆசன வாயில் முடியும், நாம் உயிர் வாழக்காரணமான பகுதி.
பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய் என்பது சமீப காலங்களில் பரவலாகக் காணப்படுகிறது. கடந்த 30 வருடங்களில் இந்தியாவில் பாதிப்பு அதிகமாகி வருகிறது.
இதற்கு பொதுவான காரணங்கள், மற்ற புற்று நோய்களைப் போலவே, நம் வாழ்க்கைமுறை, சுற்றுச் சூழல், சரிவிகித உணவு இல்லாமல் இருத்தல், நிறைய காய்கறிகள், பழங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளாமல் இருத்தல், உடற்பயிற்சி இல்லாதது, அதிக உடல் எடை என்று சொல்லப்படுகிறது. பரம்பரையில் யாருக்காவது இருந்தால் வர வாய்ப்பு உண்டு.
சுமார் 1.5 மீட்டர் (5 அடி) நீளமுடையது பெருங்குடல். இது இரைப்பை, சிறுகுடல் இவற்றில் செரிமானம் ஆன பின்னர் மீதம் இன்னும் செரிமானம் ஆகவேண்டியவற்றிலிருந்து நீரைப் பிரித்து திடக்கழிவுப் பொருளாக்கி, மலக்குடலுக்கு அனுப்புகிறது. ரெக்டம் (Rectum) எனப்படும் மலக்குடல் அதைச் சேமித்து பின்னர் மலமாக வெளியே அனுப்புகிறது.
பெருங்குடல், மலக்குடல் இதில் எந்தப் பகுதியிலும் புற்று நோய் வரலாம். இவை கொலோன் கேன்சர் (Colon cancer) அல்லது கொலோ ரெக்டல் கேன்சர் (Colorectal cancer) எனப்படும்.
பெருங்குடலில் பாலிப்ஸ் (polyps) எனப்படும் கட்டிகள் உருவாகலாம். இவையே சில சமயங்களில் புற்று நோயாக மாறும். அல்லது சாதாரணக் கட்டிகளாகவும் இருக்கலாம்.
இதை சோதிக்க கொலோனோஸ்கோபி (Colonoscopy) செய்யப்படுகிறது. ஒரு நீண்ட வளையக்கூடிய (flexible tube) கேமரா பொருத்திய குழாய், பெருங்குடலுக்குள் செலுத்தப்பட்டு சோதனைசெய்யப்படுகிறது.
இந்த புற்றுநோய் காரணிகளான செல்கள் , மைக்ரோஸ்கோப் வழியே பார்க்கும்போது மேற்புறம் தட்டையாக சிக்னெட் மோதிர வடிவில் இருப்பதால் சிக்னெட் ரிங் (signet ring cell) செல்கள் எனப்படுகின்றன.
மலம் கழிக்கும் வழக்கங்களில் (Bowel habits) மாற்றம், வயிற்றில் வலி, மலத்தில் ரத்தம் கலந்து வருதல், வாந்தி, வயிறு உப்புசமாக இருத்தல், உடல் எடைக் குறைவு போன்ற அறிகுறிகள் காணப்படலாம். ஆனால் இவை புற்றுநோய் காரணம் என்று மட்டுமே கூறமுடியாது. வேறு காரணங்களும் இருக்கலாம். மருத்துவ சோதனை மூலம்தான் கண்டு பிடிக்க முடியும்.
பெருங்குடலில் புற்றுநோய்க் கட்டிகள் இருந்தால் அவை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்த பிறகுதான், புற்றுநோய் எந்த நிலையில் இருக்கிறது என்பதை மருத்துவரால் தீர்மானிக்க முடியும்.
மலக்குடல் புற்று நோய்க்கு சிகிச்சை கொஞ்சம் மாறுபடும். இதில் அறுவை சிகிச்சை இல்லை. ஆனால் ரேடியேஷன் அவசியமாகிறது.
மலக்குடலில் கட்டிகள் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடித்து ரேடியேஷன் தரவேண்டும்.
இது மிகவும் நுட்பமாகச் செய்ய வேண்டிய சிகிச்சை என்பதால் இதில் தேர்ந்த மருத்துவர்குழு மட்டுமே செய்யமுடியும் என்பது மிக மிக அவசியம்.
பக்க விளைவுகள் இருக்கும் என்பதால் குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெறவேண்டும், நோயாளிக்கு மனரீதியாக கவுன்சலிங் தரவேண்டும். ஐந்து வருடங்கள்வரை மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.