Air Fryer-ல் சமைப்பது ஆரோக்கியமானதா?
சமீப காலமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி மக்கள் நகர்ந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்த உணவுகளை தேர்வு செய்யத் தொடங்கியுள்ளனர். இதற்கு உதவும் வகையில் சமையல் உபகரணங்களிலும் பல புதிய கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. அவற்றுள் ஒன்றுதான் ஏர் ஃப்ரையர் (Air Fryer). குறைந்த எண்ணெயில் அல்லது எண்ணெய் இல்லாமலேயே பல்வேறு உணவுகளை இதில் பொரித்து எடுக்க முடியும். இருப்பினும் இதில் சமைப்பது உண்மையில் ஆரோக்கியமானதா? என்பது பலருக்கு சந்தேகமாகவே உள்ளது.
ஏர் ஃப்ரையர் எப்படி செயல்படுகிறது?
ஏர் ஃப்ரையர் என்பது ஒரு சிறிய அடுப்பைப் போன்ற உபகரணம். இதில் இருக்கும் கூடை போன்ற பகுதியில் உணவை வைத்து அதிக வெப்பத்தில் காற்றை சுற்றவிட்டு உணவை சமைப்பார்கள். இதில் எண்ணெய் குறைவாகவே பயன்படுத்தப்படுவதால் கலோரி மதிப்பு குறைவாக இருக்கும். இதனால், உணவில் உள்ள கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும்.
இது மிகவும் வேகமாக உணவை சமைத்துவிடும். எனவே, அதிக நேரத்தை மிச்சப்படுத்தலாம். ஏர் ஃப்ரையரை சுத்தம் செய்வது மிகவும் எளிது. கோழி, உருளைக்கிழங்கு, வடை, மீன், காய்கறிகள் என பல்வேறு வகையான உணவுகளை ஏர் ஃப்ரையரில் சமைக்கலாம்.
இந்த சாதனத்தில் சமைப்பதில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதிக வெப்பத்தில் உணவை சமைப்பதால் சில ஊட்டச்சத்துக்கள் அழிந்து போகும் வாய்ப்புள்ளது. மேலும், இதனால் மாவுச்சத்துள்ள உணவுகள் அக்ரிலமைடு என்ற வேதிப்பொருளை உருவாக்கும். இது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. சில வகையான உணவுகளை ஏர் ஃப்ரையரில் சரியாக சமைக்க முடியாது. மேலும், இதன் விலையும் சற்று அதிகமாகவே இருக்கும்.
ஏர் ஃப்ரையரில் ஆரோக்கியமாக சமைப்பது எப்படி?
இதில் சமைக்கும்போது எண்ணெய் இல்லாமல் சமைப்பது நல்லது. அல்லது மிகக் குறைவாகவே எண்ணெய் பயன்படுத்தி சமைக்க முயற்சி செய்யுங்கள். எப்போதும் புதிய காய்கறிகள், பழங்களை மட்டுமே உணவுக்கு சுவையைக் கூட்ட மசாலா பொருட்களை அதிகமாக சேருங்கள். எவ்வளவு ஆரோக்கியமான உணவு என்றாலும் அதிகமாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடுதான். எனவே ஏர் ஃப்ரையரில் சமைத்த உணவுகளையும் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.