அவசரம் அவசரமா சாப்பிடுபவரா நீங்க? இந்த கதையை படிச்சுட்டாவது திருந்துங்க!

Healthy eating habits
Healthy eating habits
Published on

பரபரப்பான சூழலில் நகர்ந்து கொண்டிருக்கும் நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் பல்வேறு மாற்றங்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அதில் உணவு பழக்கங்களும் முக்கியமான ஒன்றாகும். தலை வாழை இலை போட்டு அறுசுவைகளும் பரிமாறப்பட்டு சாப்பிடப்பட்ட நம்முடைய பாரம்பரியமான உணவு பழக்க வழக்கங்கள் மாறி தற்போது மெல்ல மெல்ல துரித உணவுகளின் ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் இன்றைய காலகட்டங்களில் சாப்பிடுவதற்கும் உரிய நேரம் கொடுக்காததும் ஒரு மிகப்பெரிய சிக்கலாகவே இருக்கிறது. ஒருவேளை நிதானமாக சாப்பிடவில்லை என்றால் என்ன ஆகும் என்பதை இக்கதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு அரசர் தன்னுடைய அரண்மனையில் வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்தார். அதன்படி போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஒரு ஆடும், அந்த ஆடு உண்பதற்கான ஒரு மாத தீவனங்களும் கொடுக்கப்படும். ஒவ்வொரு நாளும் ஆட்டிற்கு தேவையான உணவை கொடுக்க வேண்டும். ஆனால் மாதத்தின் முடிவில் ஆட்டின எடை சிறிதளவு கூட கூடியிருக்கக் கூடாது. அப்படி யார் ஒருவர் ஆட்டை வளர்த்து வருகிறாரோ அவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தார்.

போட்டியில் பலரும் கலந்து கொண்டனர். அரசரிடமிருந்து ஆட்டையும் தீவனத்தையும் பெற்றுக் கொண்டு சென்ற பலரும் மிகவும் கவனமாக ஆட்டை கவனித்து வந்தனர். அதே அரசவையில் காவலாளியாக வேலை பார்த்த ஒரு இளைஞனும் ஆட்டையும் தீவனத்தையும் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு சென்றான். ஆனாலும் அவனுக்கு அரசர் கூறியது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் குளத்திற்கு தண்ணீர் எடுக்க செல்லும் போது அங்கு அமர்ந்திருந்த முதியவர் ஒருவரை சந்தித்து ஆலோசனை கேட்டான்.

அந்த முதியவரும் அந்த இளைஞனுக்கு தக்க ஆலோசனைகள் கூறினார். அவர் கூறிய ஆலோசனைப்படி இளைஞனும் ஆட்டை பராமரித்து வந்தான். அரசர் கொடுத்த ஒரு மாத காலம் முடிவடையவே அனைவரும் ஆட்டை அரசர் முன் கொண்டு சென்றனர். ஒவ்வொரு ஆட்டையும் எடை போட்டுப் பார்த்த அரண்மனை பணியாட்கள் இளைஞனே வெற்றி பெற்றதாக கூறி அரசரிடம் அழைத்து வந்தனர். அரசரும் தக்க சன்மானத்தை கொடுத்த பிறகு இளைஞரிடம், 'கொடுத்த தீவனத்தையும் சரியாக பயன்படுத்தி இருக்கிறாய், அப்படி இருந்தும் எப்படி ஆட்டின் எடை கூடாமல் பார்த்துக் கொண்டாய்?' என்று கேட்டார்.

அதற்கு அந்த இளைஞனோ, 'அரசரே! நான் ஒவ்வொரு நாளும் ஆட்டிற்கு சாப்பாடு கொடுக்கும்போது அதன் முன் ஒரு ஓநாயை பிடித்து கட்டி வைத்து விடுவேன். ஓநாயும் ஆடும் ஜென்ம விரோதிகள். எங்கே ஓநாய் தன்னை கடித்து விடுமோ? என்ற பயத்திலேயே ஆடு தான் சாப்பிடும் எதையும் நிதானமாக சாப்பிடாது. அதனால் ஆடு சாப்பிட்ட எதுவும் அதற்கு ஜீரணமாகாமல் அப்படியே கழிவுகளாக வெளியேறிவிடும். இதனால்தான் ஆட்டின் எடை கூடவில்லை' என்று கூறினான். இளைஞரின் புத்திசாலித்தனத்தை அறிந்த அரசரும் அவனை மனதாரப் பாராட்டினார்.

இந்த கதையில் வருவது போலவே நாம் எவ்வளவு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலும் கூட அவற்றை ஒரு நிதானத்தோடு அமர்ந்து சாப்பிடாமல், ஒரு பரபரப்புடனும் பதட்டத்துடனும் சாப்பிடும்போது அவை நம் உடலில் முழுமையாக சத்துக்களாக மாறுவதில்லை. எனவே, இனிமேல் உடல் எடை கூட வில்லையே என்று நினைப்பவர்களும், நன்றாக சாப்பிட்டும் ஆரோக்கியம் இல்லையே என்று நினைப்பவர்களும் கொஞ்சம் உணவு உண்ணும் நேரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கலாமே!

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? சாப்பிடலாம் , ஆனால்...
Healthy eating habits

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com