
சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சாதாரண உப்புக்கு பதில் K salt என்று சொல்லப்படும் பொட்டாசியம் உப்பை எடுத்துக்கொண்டால், ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகள் வராது என்று சொல்கிறார்கள். இதில் எந்த அளவிற்கு உண்மையுள்ளது என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
தற்போது உப்புகளில் நிறைய வகைகள் வந்துவிட்டன. சாதாரண அயோடின் உப்பு பயன்படுத்துவதற்கு பதில் இப்போதெல்லாம் பிங்க் சால்ட் போன்ற உப்புகளை பயன்படுத்துகிறார்கள். நம் வீடுகளில் பயன்படுத்தும் உப்பை சோடியம் க்ளோரைட் (Nacl) என்று சொல்வோம். இதில் இருக்கும் சோடியம் அதிக நீரை நம்முடைய ரத்த குழாயில் சேகரிக்கிறது. அதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதுவே இதய பிரச்னைகளுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஒரு நாளைக்கு 2 கிராம் அளவிலான உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், சராசரியாக உலகம் முழுவதும் 8 முதல் 10 கிராம் உப்பை ஒரு நாளைக்கு மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
இதற்கு பதில் பொட்டாசியம் சால்ட்டை எடுத்துக் கொள்ளலாம். இதனுடைய சுவையும் சாதாரண உப்பினுடைய சுவையை ஒத்திருக்கும். அவ்வாறு பொட்டாசியம் உப்பை எடுத்துக் கொள்வதால், ரத்த அழுத்தம் 2 முதல் 4 பாயின்ட் அளவு குறைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.
ஆனால், இந்த பொட்டாசியம் உப்பில் இருக்கும் வேறு சில பிரச்னைகள் என்னவென்றால், சாதாரண உப்பைக் காட்டிலும் பொட்டாசியம் உப்பின் விலை பதினைந்து மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் பொட்டாசியம் உப்பை குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள், வயதானவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள்.
ஆகவே, பொட்டாசியம் உப்பை எடுத்துக்கொண்டு ரத்த அழுத்தத்தை 2 முதல் 4 பாயின்ட்கள் குறைப்பதற்கு பதில் யோகா செய்வதால், உடல் எடைக் குறைப்பதால், நல்ல பழங்கள் சாப்பிடுவதால், நடைப்பயிற்சி ஆகியவற்றை செய்தாலே நன்றாக ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும்.
உணவிலே உப்பு சேர்த்துக்கொள்வதை குறைப்பதை விட மாவுச்சத்தை குறைக்க வேண்டும். இன்சுலின் எதிர்ப்புத்தன்மையைக் குறைக்க வேண்டும். இதன் மூலமாக நம் உடலில் Renin, Angiotensin, Aldosterone இவற்றில் மாற்றங்கள் ஏற்படும். நம் உடலில் இருக்கும் உப்பை வெளியேற்றிவிடும். இதுவே ரத்த அழுத்தத்தை நன்கு குறைக்கும்.
எனவே, தினமும் நாம் பயன்படுத்தும் உப்பை உபயோகிப்பதே சிறந்தது. புதிது புதிதாக வரும் உப்புகளில் எதை வாங்கி பயன்படுத்துவது உடலுக்கு நல்லது என்று தேவையில்லாமல் குழப்பம் வேண்டாம்.