
முழு குடும்பத்திற்கும் ஒரே சோப்பை பயன்படுத்துவது பாதுகாப்பானதா? பாதுகாப்பானது தான். ஆனால்... சில விஷயங்களை கருத்தில் கொள்வது நல்லது.
1. சரும வகைகள்
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சரும வகைகள் இருக்கலாம். சிலர் வறண்ட, எண்ணெய் பசையுள்ள அல்லது உணர்திறன் அதிகம் உள்ள சருமத்தை கொண்டிருக்கலாம். ஒருவருக்கு நன்றாக இருக்கும் சோப்பு மற்றொருவர் சருமத்தை எரிச்சல் அடையச் செய்யலாம்.
2. சரும அலர்ஜி
சோப்பு என்பது நம் உடலை சுத்தமாக வைத்திருக்க உதவக்கூடியது. ஒரே சோப்பை வீட்டில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாம். ஆனால், சருமத்தில் அலர்ஜி உள்ளவர்கள் அப்படி செய்வதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் யாருக்காவது சில பொருட்களுக்கு ஒவ்வாமை அல்லது உணர்திறன் இருந்தால் அந்த சோப்பை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
சிலருக்கு மற்றவர்கள் உபயோகிக்கும் பொருட்களை உபயோகித்தால் சருமத்தில் அரிப்பு, எரிச்சல், சிவந்து போகுதல் போன்றவை ஏற்படும். எனவே, சரும அலர்ஜி உள்ளவர்கள் பிறர் பயன்படுத்தும் சோப்புகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
சிலருக்கு சில சோப்பு வகைகளால் சரும அலர்ஜி உண்டாகலாம். அப்படிப்பட்டவர்கள் தங்கள் சருமத்திற்கு ஏற்ற சோப்பை வாங்கி தனியாக பயன்படுத்துவது நல்லது.
3. தொற்று நோய் பரவும் சமயங்களில்
தொற்றுநோய் பரவும் அபாயம் இருக்கும் சமயங்களில் தனித்தனி சோப்புகளை பயன்படுத்துவது தான் சிறந்தது. காரணம் ஒருவரின் உடலில் பாக்டீரியா தொற்று இருந்தால், அது மற்றவர்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே, தொற்று நோய்கள் பரவும் சமயங்களில் தனித்தனி சோப்புகளை பயன்படுத்துவது தான் சிறந்தது.
4. வயதை கருத்தில் கொள்வது
குழந்தைகள் குறிப்பாக மென்மையான சருமம் கொண்ட கைக் குழந்தைகள் அதிக உணர்த்திறன் வாய்ந்த சருமத்தை கொண்டிருப்பார்கள். எனவே, அவர்களுக்கென்று தனியாக லேசான மென்மையான சோப்புகளை பயன்படுத்துவது நல்லது.
5. பாடிவாஷ்
'ஷவர் ஜெல்' என்று அழைக்கப்படும் பாடி வாஷ் வாங்குவதற்கு முன்பு நம் சருமத்திற்கு ஏற்றதை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். வறண்ட சருமம் உள்ளவர்கள் ஈரப்பதம் ஊட்டும் பாடி வாஷையும், எண்ணெய் சருமம் உள்ளவர்கள் எண்ணெய் இல்லாத பாடி வாஷையும் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டியது அவசியம். சரும உணர்திறன் உள்ளவர்கள் பிறர் உபயோகிக்கும் சோப்புகளை பயன்படுத்தாமல் திரவ சோப்பு அல்லது பாடிவாஷ் பயன்படுத்துவது நல்லது.
6. பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகள்
பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகள் வழக்கமான சோப்புகளை விட கிருமிகளைக் கொல்வதில் சிறந்ததல்ல. மேலும் இவை சில நேரங்களில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, சாதாரண சோப்பு மற்றும் தண்ணீர் பயன்படுத்துவதே போதுமானது. சில பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளில் உள்ள இரசாயனங்கள் சருமத்தில் எரிச்சலையும், பிற உடல்நலப் பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.
இவற்றின் அதிகப்படியான பயன்பாடு, நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எதிர்க்கும் பாக்டீரியாக்களை உருவாக்கலாம். இது மருத்துவ சிகிச்சையில் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, சாதாரண சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்துவதே போதுமானது.
7. தனிப்பட்ட விருப்பம்
குடும்பத்தில் உள்ள சிலருக்கு அதிக வாசனை தரும் சோப்புகள் மற்றும் அதிக வாசனை தரும் திரவியங்கள் பிடிக்கும். இவர்கள் பொதுவான சோப்பை பயன்படுத்த விரும்ப மாட்டார்கள். பொதுவாக மென்மையான, மணம் அதிகம் இல்லாத சோப்புகள் தான் குடும்ப பயன்பாட்டிற்கு சிறந்தது. அத்துடன் பார் சோப்பை விட திரவ சோப்புகள் தான் பாதுகாப்பானதும், சுகாதாரமானதும் கூட.
கிளிசரின், மூலிகை சோப்புகள் என பல மருத்துவ குணங்கள் நிறைந்த சோப்புகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும், ஒருவருக்கொருவர் நோய்கள் பரவாமல் இருக்கவும், உடல் நலக் காரணங்களுக்காக தனித்தனி சோப்பை பயன்படுத்துவது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)