இன்றைய காலத்தில், உணவுப் பாதுகாப்பு மற்றும் நம் வசதிக்காக அலுமினியத் தாள் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உணவை சுட்டு, பேக் செய்து, சூடாக வைத்திருப்பதற்கு அலுமினியத் தாள் மிகவும் வசதியானதாக இருந்தாலும், இது உடல் நலத்திற்கு எந்த அளவுக்கு நல்லது என்பது சந்தேகமே. இந்தப் பதிவில் உணவை அலுமினியத் தாளில் சுற்றி வைப்பதன் தாக்கங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
அலுமினியம்: அலுமினியம் என்பது பூமியில் மிகுதியாகக் கிடைக்கும் ஒரு உலோகம். இது அதன் இலகுரக தன்மை, நல்ல வெப்பம் கடத்தும் தன்மை மற்றும் துருப்பிடிக்காத தன்மை போன்ற பண்புகளால் பல்வேறு தொழில்நுட்ப பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, உணவுப் பாத்திரங்கள், பானங்கள், மருந்துப் பொட்டலங்கள் மற்றும் பல பொருட்கள் தயாரிக்க அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது.
அலுமினியம் நம் உடலில் இயற்கையாகவே குறைந்த அளவில் காணப்படுகிறது. அதிக அளவு அலுமினியம் உடலுக்குள் சென்றால், அது நரம்பு மண்டலம், மூளை மற்றும் எலும்புகள் போன்ற உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், ஆரோக்கியமான மனிதர்களுக்கு அலுமினியம் குறித்தான ஆபத்து குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.
உணவை அலுமினியத் தாளில் சுத்தி வைப்பதன் தாக்கங்கள்:
அமில உணவுகள்: அலுமினியத் தாள் அமிலத்துடன் வினைபுரியும். எனவே, தக்காளி, எலுமிச்சை போன்ற அமிலத்தன்மை கொண்ட உணவுகளை அலுமினிய தாளில் சுத்தி வைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
உணவு வகை: உணவின் அமிலத்தன்மை, உணவுடன் சேர்க்கப்படும் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் ஆகியவை அலுமினியம் உணவுடன் கலக்கும் அளவை பாதிக்கலாம்.
சமையல் வெப்பநிலை: அதிக வெப்பநிலையில் சமைக்கும் போது, அலுமினியம் உணவில் கலக்கும் அளவு அதிகரிக்கலாம். அதேபோல உணவை நீண்ட நேரம் சமைக்கும் போது, அலுமினியம் உணவில் கலக்கும் அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
அலுமினிய தாளின் தரம்: குறைந்த தரமுள்ள அலுமினியத் தாளில் இருந்து அதிக அளவு அலுமினியம் உணவில் கலக்க வாய்ப்புள்ளது.
ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன?
உணவை அலுமினியத் தாளில் சுத்தி வைப்பது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, இதுவரை நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் முரண்பட்ட முடிவுகளைத் தந்துள்ளன. சில ஆராய்ச்சிகள், அதிக அளவு அலுமினியம் உடலில் சென்றால் நோய்களை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றன. மற்ற சில ஆராய்ச்சிகள், சாதாரணமாக உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அளவு அலுமினியம் உடலுக்கு பாதிப்பில்லை எனக் கூறுகின்றன.
உணவை அலுமினியத் தாளில் சுத்தி வைப்பது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை என்றாலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அதனால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.