இன்றைய காலத்தில் உடற்பயிற்சி செய்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஆனால், பலர் உடற்பயிற்சி செய்த உடனேயே சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். உடற்பயிற்சி செய்த பின் சரியான நேரத்தில் சரியான உணவை உட்கொள்வது, நம் உடலின் செயல்பாடுகளை சீராக வைத்திருக்கவும், தசை வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும். இந்தப் பதிவில் ஒர்க்அவுட் செய்த பின் எவ்வளவு நேரம் கழித்து சாப்பிட வேண்டும் என்பது பற்றிய சில முக்கியமான தகவல்களைப் பார்ப்போம்.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் நம் உடலுக்கு புதிய ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றலை நாம் உணவு மூலமாகவே பெற வேண்டும். உடற்பயிற்சி செய்த பின் சரியான நேரத்தில் சரியான உணவை உட்கொள்ளாவிட்டால் நம் உடல் சோர்வாகவும் தசைகள் பலவீனமாகவும் இருக்கும்.
உடற்பயிற்சி செய்த உடனேயே சாப்பிடலாமா அல்லது கொஞ்ச நேரம் கழித்து சாப்பிட வேண்டுமா? என்பதில் பலருக்கு சந்தேகம் உள்ளது. பொதுவாக, உடற்பயிற்சி செய்த 30 முதல் 45 நிமிடங்களுக்குள் உணவு உட்கொள்வது நல்லது. இந்த நேரத்தில் உட்கொள்ளும் உணவு, உடலில் உள்ள கிளைக்கோஜன் தேவையை நிரப்பி, தசை வளர்ச்சிக்கு தேவையான புரதத்தை வழங்க உதவும்.
உடற்பயிற்சி செய்த பின் உங்களுடைய உணவில் புரதம், கார்போஹைட்ரேட் என இரண்டும் இருப்பது அவசியம். புரதம் தசை வளர்ச்சிக்கு உதவும், கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். எனவே, உடற்பயிற்சி செய்த பிறகு பழம், பால், தயிர், நட்ஸ் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
ஏன் 30-45 நிமிடங்களுக்குள் சாப்பிட வேண்டும்? உடற்பயிற்சி செய்யும்போது நம் உடலில் உள்ள கிளைக்கோஜன் குறைகிறது. கிளைக்கோஜன் என்பது கார்போஹைட்ரேட்டின் சேமிப்பு வடிவம். இதன் தேவையை நிரப்புவதற்கு 30-45 நிமிடங்களுக்குள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது உடலில் தசை புரத சிதைவு ஏற்படும். இந்த சிதைவைத் தடுக்கவும் தசை வளர்ச்சியை அதிகரிக்கவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி செய்த பின் சரியான நேரத்தில் சரியான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியமானது. மேலும், உங்களது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப உணவுத் திட்டத்தை வகுத்து சாப்பிடுங்கள். உடற்பயிற்சி மற்றும் உணவு பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணரை அணுகி ஆலோசிப்பது நல்லது.