

உலகளவில் பல கோடி மக்களை பாதித்துள்ள ஒரு மருத்துவ அபாய நிலை தான் உயர் இரத்த அழுத்தம் (Hypertension). இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் இயல்பான அளவைவிட அதிக அழுத்தம் ஏற்படுவதை தான் உயர் இரத்த அழுத்தம் என்கிறோம். இதனால் இதயத்திற்கு செல்லும் இரத்தம் குறைய தொடங்குகிறது. இரத்தத்தை பம்ப் செய்ய இதயமும் மிகவும் சிரமப்படுகிறது. இந்த நிலையில் ஒருவரின் உடல்நிலையில் தடுமாற்றங்கள் ஏற்படும்.
இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முதன்மையான காரணங்களில் சோடியம் (சாதாரண உப்பு) அதிகளவில் இரத்தத்தில் சேர்வது தான். இது மட்டுமல்லாமல் கொழுப்பு மற்றும் மன அழுத்தமும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் வேறு சில காரணிகளாக உள்ளது.
பொதுவாக உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க மருத்துவர் முதல் சாதாரணமான நபர்கள் வரை பரிந்துரைப்பது உணவில் உப்பு சேர்க்கும் அளவை குறைப்பது தான். ஆனால், இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உப்பின் அளவை குறைப்பதை விட முற்றிலும் தவிர்த்து விடுகின்றனர். இது உடலுக்கு நன்மை தருமா?
உயர் இரத்த அழுத்த நோயாளிகள் உணவில் உப்பை முற்றிலும் தவிர்ப்பது சரியான நடைமுறையா?
உணவில் உப்பை குறைப்பது உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்க நல்ல நடைமுறை தான் என்றாலும், அதை முற்றிலும் தவிர்ப்பது ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடும். இவ்வாறு செய்வதால் உடலில் சோடியம் அளவு மிகவும் மோசமான அளவில் குறைந்து ஹைபோநெட்ரீமியா (Hyponatremia) என்ற நிலைக்கு கொண்டு செல்லும். இந்த நிலையில் ஒருவருக்கு கடுமையான சோர்வு, மயக்கம், தலைசுற்றல், கண்பார்வை மங்கல், மன குழப்பம் போன்றவை ஏற்படும்.
உடலில் சோடியம் குறைவு ஏற்படுவது ஏன்?
உயர் இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையில் பல நோயாளிகளுக்கு டையூரிடிக்ஸ் எனப்படும் நீர் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் சிறுநீர் கழிப்பதை அதிகப்படுத்துவதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான உப்பை நீர் மூலமாக வெளியேற்றி இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. சில நேரங்களில் அளவுக்கு அதிகமான சோடியம் உடலை விட்டு வெளியேறி விடுகிறது.
சோடியத்தின் தேவை:
சோடியம் உடலின் மிக அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகும். நீர் சமநிலையைப் பராமரித்தல், நரம்பியல் சமிக்ஞைகளை உடலெங்கும் அனுப்புதல், மற்றும் தசைகளின் சீரான செயல்பாடு போன்ற அடிப்படை பணிகளுக்கு இது தேவைப்படுகிறது. சோடியம் அளவு குறையும் போது உடலுக்குள் நடைபெறும் தொடர்புகள் குறைந்து பலவீனம், அதீத சோர்வு, தசைப் பிடிப்பு, தலைச்சுற்றல், குழப்பம் மற்றும் மிக முக்கியமாக, அபாயகரமான அளவிற்கு குறைந்த இரத்த அழுத்தம் போன்ற மூளை தொடர்பான சிக்கல்களை உண்டு பண்ணுகிறது.
உப்பை நிறுத்துவது சரியா?
உப்பை முற்றிலும் தவிர்ப்பது தவறு என்று மருத்துவ நிபுணர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். தேவையான அளவு சோடியம் இல்லாமல், உடலின் செயல்முறைகள் பாதிக்கப்படும். தினசரி எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவை பாதியாக குறைத்தால் மட்டும் போதும். அதே போல அதிக உப்பு நிறைந்த ஊறுகாய்கள், அப்பளங்கள், வற்றல், கருவாடு , உப்புக் கண்டம் , கேனில் வைக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
தினசரி உணவில் உப்பின் அளவை பராமரிக்க வேண்டும். பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம், இளநீர் ஆகியவற்றை வாரத்தில் சில நாட்கள் சாப்பிடுவது சோடியத்தை சமன் செய்ய உதவும். எதையும் அளவுக்கு குறைவாகவோ, அளவுக்கும் அதிகமாகவோ உட்கொள்ளுவது தான் பிரச்னை ஆகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)