பழங்கள் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் சிறந்த உணவுகளாகும். ஒவ்வொரு பழமும் தனித்துவமான சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. நம் முன்னோர்கள் பழங்களை வெறும் உணவாக மட்டுமல்லாமல், நோய் தீர்க்கும் மருந்தாகவும் கருதினர். அந்த வகையில் அன்னாசிப்பழம் சூடு, தர்பூசணிபபழம் குளிர்ச்சி என்ற கருத்து நம் மத்தியில் பரவலாக உள்ளது. ஆனால், இது உண்மையா? வாருங்கள் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பழங்கள் என்பவை தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புகள். எனவே, ஒவ்வொரு பழமும் தன்னைச் சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும். சில பழங்கள் வெப்பமான காலநிலையில் வளர்ந்து, அதிக நீர்ச்சத்துக் கொண்டிருக்கும். வேறு சில பழங்கள் குளிர்ந்த கால நிலையில் வளர்ந்து இனிப்பு சுவையுடன் இருக்கும். இந்த தகவமைப்புகள் பழங்களின் ஊட்டச்சத்து மதிப்புகளில் மாறுபாடுகளை ஏற்படுத்துகின்றன.
அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழம் வெப்ப மண்டல பகுதிகளில் அதிகம் விளையும். இதில் விட்டமின் சி, மாங்கனீஸ் மற்றும் ப்ரோமிலின் போன்ற நொதிகள் உள்ளன. இது செரிமானத்தை எளிதாக்கி உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும். அன்னாசிபழத்தின் இந்த குணம்தான் இதை சூடான தன்மை கொண்டதாகக் கருதக் காரணமாக உள்ளது.
தர்பூசணிப்பழம்: தர்பூசணிப்பழம் கோடைகாலத்தில் அதிகம் உண்ணப்படும் ஒரு பழமாகும். இதில் 92 சதவீதம் நீர் உள்ளது. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. தர்பூசணிப்பழத்தில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். இதுதான் தர்பூசணிப்பழத்தை குளிர்ச்சியான தன்மை கொண்டதாகக் கருத வைக்கிறது.
அன்னாசிப்பழம் சூடு தர்பூசணிப்பழம் குளிர்ச்சி என்ற கருத்து ஆயுர்வேத மருத்துவத்தில் காலம் காலமாக உள்ள ஒரு கருத்தாகும். ஆயுர்வேதத்தின்படி ஒவ்வொரு உணவும் மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அதிகரிக்கும் அல்லது குறைக்கும். அன்னாசிப்பழம் பித்தத்தை அதிகரிக்கும் எனவும், தர்பூசணிபழம் பித்தத்தை குறைக்கும் எனவும் ஆயுர்வேதம் கூறுகிறது.
ஆனால், நவீன மருத்துவம் இதை ஏற்கவில்லை. இந்த கால மருத்துவத்தின் படி உணவுகள் சூடு அல்லது குளிர்ச்சி என வகைப்படுத்தப்படுவதில்லை. அவை நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன என்பது மட்டுமே உண்மை. அன்னாசிப்பழம் சூடு தர்பூசணிப்பழம் குளிர்ச்சி என்ற கருத்து நம் முன்னோர்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் நம்பிக்கைகளில் ஒன்று. இதற்கு அறிவியல் ரீதியாக உறுதியான ஆதாரங்கள் இல்லை. எனவே, பழங்கள் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் என்பதால் அவற்றை சமநிலையில் உண்டு நம் உடல் நலனை மேம்படுத்திக் கொள்ளலாம்.