மூன்று வேளையும் அரிசி உணவை சாப்பிட்டவர்கள் தான் நம் முன்னோர்கள். ஆனால் அது ஒரு காலகட்டம். தற்போது அரிசி உணவை மூன்று வேளையும் எடுத்துக் கொள்பவர்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
மூன்று வேளையும் சாதமும் சாப்பிட்ட காலத்தில் மனிதனுக்கு உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. தற்போது அப்படி அல்ல, உடல் உழைப்பு குறைந்துவிட்டது. உடலுக்கு வேலை அல்ல, மூளைக்குத்தான் வேலை என்பது போல் தற்போதைய சூழ்நிலை உள்ளது.
நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி உணவைக் குறைத்து, அதற்குப் பதிலாக வேறு உணவுகளைச் சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதற்குக் காரணம், அரிசியில் சர்க்கரையை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. இது மட்டும் இல்லை. ஒரு நாளைக்கு மூன்று வேளை சோறு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு எதிர்காலத்தில் சில நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
மற்ற ஊட்டச்சத்துக்களைக் குறைத்து, நீண்ட காலமாக அரிசியை மட்டுமே சாப்பிட்டு வருபவர்கள் இதை நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும். அரிசி அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அரிசியை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும். அதுதான் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது.
உங்களுக்கு எடை அதிகரித்துக்கொண்டே இருந்தால் உங்கள் உணவில் அரிசியின் அளவை அதிகரிக்கிறீர்கள் என்று அர்த்தம். பெண்களில், எடை அதிகரிப்பிற்கு தைராய்டு மற்றும் PCOD போன்ற பிரச்னைகளும் காரணமாக இருக்கலாம். இருப்பினும், அத்தகைய மருத்துவ வரலாறு இல்லாதவர்கள், அதிக காய்கறிகளை சாப்பிடுவதன் மூலமும், அரிசிக்கு பதிலாக அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் எளிதாக எடையைக் குறைக்கலாம்.
வெள்ளை அரிசியில் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும், கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாகவும் உள்ளன. இவை உங்கள் இதய ஆரோக்கியத்தையும் மெதுவாக சேதப்படுத்தும். தினமும் அரிசி மட்டும் சாப்பிடுபவர்களுக்கு ட்ரைகிளிசரைடு அளவிலும் கெட்ட கொழுப்பிலும் விரைவான அதிகரிப்பு ஏற்படுகிறது. இவை அனைத்தும் இதயம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும். அரிசியை விரும்புபவர்கள் வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசியை உணவில் சேர்ப்பது பயனளிக்கும்.
தினமும் அரிசி மட்டும் சாப்பிடுவது வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் அபாயத்தை படிப்படியாக அதிகரிக்கிறது. அதாவது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது. இதுவே எடை அதிகரிப்பு மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. அதனால்தான் மருத்துவ நிபுணர்கள் வெள்ளை அரிசியை சரியான அளவுகளுக்குள் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
மூன்று வேளையும் அரிசி உணவு வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுரை கூறுகிறார்கள். அதற்கான காரணங்களையும் கூறுகிறார்கள். அப்படி என்றால் நாம் தானே முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்?