

சிலர் தனியாக இருக்கும் போது தனக்குத் தானே ஏதோ பேசிக் கொண்டேயிருப்பார்கள் Talking to Yourself . இதை சிலர் கேலி செய்வார்கள். ஆனால் இது கெட்ட பழக்கம் அல்ல. இது உங்களுடைய கூர்மையான புத்தியையும் திறமையையும் வெளிப்படுத்தும் செயலாகும். நீங்கள் தனியாக இருக்கும் போது பேசுவது குழம்பமாக தெரிந்தாலும் அதில் நீங்கள் உங்கள் பிரச்னைகளுக்கு விடை தேட முடியும்.
பென்சில்வேனியாவில் ஒரு ஆராய்ச்சியாளர் சாமான்கள் நிறைந்த அறையிலிருந்து சிலரை ஒரு குறிப்பிட்ட பொருளை எடுத்துக் தரக் கூறினார். பாதி பேர் பச்சை நிற பாட்டில் என்று கூறிக்கொண்டே தேடினர். மற்ற பேர்கள் மௌனமாகத் தேடினர். தனக்குத் தானே பேசியவர்கள் எந்த அலுப்பும் படாமல் சுலபமாகக் கண்டு பிடித்தனர். இதே ஆராய்ச்சி விளையாட்டு வீரர்கள், விமான ஓட்டிகள் மற்றும் அறுவை சிகிச்சையாளர்களையும் வைத்து நடத்தப்பட்டது.
ஆராய்ச்சியில் தனக்குள்ளே பேசும் பழக்கம் உள்ளவர்கள் மிக நிதானமாகவும் எந்த ஒரு அழுத்தத்திலும் பிரச்னைகளை நன்றாக மேற்கொள்வதாகவும் அறியப்பட்டது. இது மாஜிக் இல்லை. இந்த பழக்கம் ஒருவரின் புத்தியை கூர்மைபடுத்துவதாக அறியப்படுகிறது. இதன் மூலம் ஒரு விஷயத்தில் ஒருமுகத்தன்மை நன்கு ஏற்படுவதாக தெரிகிறது.
நாம் நமக்கு நாமே பேசிக் கொள்ளும் போது, அதுவும் அதை சத்தம் போட்டு சொல்வதால் நீங்கள் எந்த வேலையைச் செய்ய விரும்புகிறீர்களோ அந்த வேலையை சரியாகச் செய்ய ஊக்குவிக்கிறது. சில குழந்தைகள் விளையாடும்போது பேசிக் கொண்டே செயல்படுவார்கள். உங்களுக்குள்ளேயே நீங்கள் பேசிக்கொள்வதால் நீங்கள் செய்ய வேண்டிய காரியத்தில் மிக கவனமாக இருப்பீர்கள். உங்கள் எண்ணங்கள் சிதறாமல் ஒருமுகப்படுத்தப்பட்டு நல்ல பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது.
நீங்கள் உங்களுக்குள்ளே பேசுவதில் சிறிது மாற்றம் செய்தால் இன்னும் சிறந்த நலனைப் பெற முடியும். 'இதை நான் இப்படிச் செய்யப் போகிறேன்' என்பதற்குப் பதில், 'நீ எப்படி செய்யப் போகிறாய்?' என்று இரண்டாம் மனிதரிடம் பேசுவது போல் பேசினால் இன்னமும் சிறப்பாகச் செயல்படலாம்.
முதலில் இப்படிப் பேசுவது விந்தையாக தோன்றினாலும் மிச்சிகன் பல்கலைக்கழகம் மனோதத்துவ ஆராய்ச்சியின் படி இது சிறந்த பலன் தரும் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் மூலம் எந்த விஷயம் குறித்தும் தெளிவான சிந்தனை ஏற்படும்.
ஒரு நாளைக்கு ஒரு விஷயம் என்று கவனமாகக் கையாளுங்கள். நீங்கள் ஒரு மீட்டிங்கில் பேசப் போகிறீர்கள் என்றால் நீங்கள் எந்த விதமாக பேசினால் அடுத்தவர்களை ஈர்க்கமுடியும் என்பதை யோசித்து உரத்த குரலில் சொல்லிப் பாருங்கள். இதன்மூலம் உங்களுக்குத் தெளிவு ஏற்பட்டு மீட்ங்கை மிக திறமையாகச் கையாளுவீர்கள். நீங்கள் மனதிற்குள் என் பேசவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை அழகாக செதுக்கிக் சொல்லுங்கள். நீங்கள் செய்யும் விஷயம் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கும்.
இதற்காக நீங்கள் கண்ணாடி முன் பேசிப் பழக வேண்டும் என்பதில்லை. நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் பேசிக் கொள்ளுங்கள். நீங்கள் சமயலறையிலோ, காரில் இருக்கும்போதோ இல்லை கதவை திறக்கும் போதோ முணுமுணுப்பீர்கள் அல்லவா? அந்த மாதிரி பேசும் பேச்சு உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக பேசிக்கொள்ளுங்கள்.
இனிமேல் தனக்குத் தானே பேசுபவர்களை பைத்தியம் என்று நினைக்காதீர்கள் இவர்கள் புத்தி கூர்மை உள்ளவர்கள்.