நடைப்பயிற்சிக்கு சிறந்த நேரம் காலையா? மாலையா?

Walking
Walking
Published on

டைப்பயிற்சிக்கு தற்போது பலரும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். பெரும்பாலானோர் காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்கின்றனர். மாலை நேரத்திலும் பலர் நடைப்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இரண்டில் எந்த நேரம் நடைப்பயிற்சி செய்ய ஏற்றது? அவற்றில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

காலை நேர நடைப்பயிற்சியின் பலன்கள்: காலையில் 20 நிமிடம் முதல் 40 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி செய்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. உடல் எடையை நன்றாகக் குறைக்க உதவுகிறது. காலை நேர நடைப்பயிற்சி செய்யும்போது கவனச் சிதறல்கள் குறைவாகவும் குறுக்கீடுகள் மிதமாகவும் இருக்கும் நேரம்.

மனநிலை மேம்பாடு: காலை நேர நடைப்பயிற்சி உடலில் எண்டார்பின்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இவை மனதில் உற்சாகத்தை உருவாக்கும் முக்கிய காரணிகளாகும். எனவே, மனம் உற்சாகமாக செயல்பட உதவியாக இருக்கிறது. மனநிலையும் மேம்படுகிறது. அன்றைய நாளுக்குத் தேவையான நேர்மறையான தொனியை காலை நேர நடைப்பயிற்சி தருகிறது.

பசி கட்டுப்பாடு: காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்யும்போது நாள் முழுவதும் பசியை கட்டுப்படுத்த உதவுகின்றது என சில ஆய்வுகள் சொல்கின்றன. இது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு வழி வகுக்கும். தேவையில்லாத தின்பண்டங்கள் பக்கம் மனம் நாடுவதைத் தடுக்கும்.

உடல் வெப்பநிலை: ஒருவரின் உடல் வெப்பநிலை காலையில் குறைவாக இருக்கும். உடல் செயல்பாடுகள் மெதுவாக தொடங்கும் காலை நேரத்தில் தசைகள் மற்றும் மூட்டுகள் விரைப்பாக இருக்கும். எனவே, வீட்டிலேயே சிறிது நேரம் வார்ம்அப் செய்து முடித்த பின்பு வாக்கிங் செல்வது நல்லது.

மாலை நேர நடைப்பயிற்சியின் பலன்கள்:

உடல் வெப்பநிலை அதிகரித்தல்: மாலையில் நமது உடல் வெப்பநிலை இயற்கையிலேயே அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யும்போது சிறந்த தசை செயல்பாடு மற்றும் செயல் திறனுக்கு வழிவகுக்கும்.

மன அழுத்த நிவாரணம்: அன்றைய நாளின் வேலைப்பளுவில் இருந்து விடுபட்டு நடைப்பயிற்சியில் ஈடுபடும்போது மன அழுத்தத்தைப் போக்கவும் உதவியாக இருக்கும். மனமும் உடலும் ரிலாக்ஸா இருக்கும்.

பதற்றமின்மை: காலை நேரத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபடும்போது வேலைக்குச் செல்ல வேண்டுமே என்கிற பதற்றமும் அவசரமும் இருக்கும். ஆனால், மாலையில் இந்தப் பதற்றங்கள் எதுவும் இல்லாமல் நிதானமாக அதிகத் தொலைவு நடக்க நேரம் கிடைக்கும்.

சமூகத் தொடர்பு: மாலை நேர நடைப்பயிற்சி என்பது நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் செல்ல உகந்ததாக இருக்கலாம். இது சுவாரசியமாகவும் உற்சாகமான உணர்வையும் தரும்.

இடையூறுகள்: அதே சமயத்தில் இதில் சில இடையூறுகளும் நேரலாம். மாலை நேரத்தில் வேறு ஏதாவது நிகழ்வுகளில் கலந்து கொள்ள நேரலாம் அல்லது நாள் முழுவதும் உழைத்த களைப்பும் சோர்வும் நடைப்பயிற்சிக்கு இடைஞ்சலாக இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!
Walking

எப்படி நடக்க வேண்டும்?

ஒருவர் தனது நடையின் வேகம் இதயத்துடிப்பை உயர்த்தும் அளவுக்கு விறுவிறுப்பாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சியுடன் சேர்ந்து சமச்சீர் உணவை கடைபிடிப்பது மிகவும் அவசியம். நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாக நடைப்பயிற்சியின்போது பேசிக்கொண்டே செல்லாமல் கைகளை வீசிக்கொண்டு வேகமாக நடத்தல் வேண்டும்.

காலை, மாலை என இரண்டுமே நடைப்பயிற்சிக்கு உகந்த பொழுதுகள்தான். ஒருவர் தனது வாழ்க்கை முறை மற்றும் பணி நேரம் போன்றவற்றை மனதில் கொண்டு அதற்கேற்பவாறு காலை அல்லது மாலையை தேர்ந்தெடுக்கலாம். உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு காலை நேர நடைப்பயிற்சி சிறந்தது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேநேரத்தில் நிதானமாக ரிலாக்ஸ்டாக நடக்க நினைப்பவர்களுக்கு மாலை நேரம் சிறந்ததாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com