

நமது ஆரோக்கியத்தின் அடித்தளம் நார்ச்சத்து. இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பலர் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கிறதா என்பதைப் பற்றி அதிகம் கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது குறைந்து வருகிறது. நார்ச்சத்து என்பது செரிமானத்தை சீராக்கவும், குடல்நலத்தை பாதுகாக்கவும், உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் மிகவும் அவசியமான ஒன்று. பலர் வாழைப்பழத்தை நார்ச்சத்து நிறைந்த பழமாகக் கருதினாலும், அதைவிட அதிக நன்மை தரும் சில பழங்களும் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்
கிவி – செரிமானத்தின் தோழன்
அவற்றில் முதன்மையானது கிவி பழம். வெளிப்புறத்தில் பழுப்பு நிற தோலுடனும், உள்ளே பச்சை நிற சதையுடனும் காணப்படும் இந்தப் பழம் சற்று புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையைக் கொண்டது. கிவியில் அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமானக் கோளாறுகள் குறைகின்றன.
குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிப்படுவோருக்கு இது நல்ல பலன் தருகிறது. காலையுணவில் கிவியைச் சேர்த்துக்கொண்டால் உடல் லேசாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். தயிர், பழச்சாலட் அல்லது ஸ்மூத்தி போன்றவற்றிலும் கிவியைச் சேர்த்து சாப்பிடலாம்.
ஆப்பிள் – தினசரி ஆரோக்கிய காவலன்
அடுத்ததாக ஆப்பிள். “ஒரு ஆப்பிள் தினமும் சாப்பிட்டால் மருத்துவர் தேவையில்லை” என்ற பழமொழி உலகம் முழுவதும் பிரபலமானது. அதற்குக் காரணம், ஆப்பிளில் உள்ள சத்துக்கள். இதில் உள்ள நார்ச்சத்து குடலிலுள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்க்க உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்துவதோடு, நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்கவும் உதவுகிறது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற பழம் ஆப்பிள். அதை அப்படியே சாப்பிடலாம்; அல்லது நிலக்கடலை வெண்ணெய், தேன், தயிர் போன்றவற்றுடன் சேர்த்தும் சுவைக்கலாம்.
புளூபெர்ரி – சிறிய பழம் ஆனாலும் சக்திவாய்ந்தது
சிறிய அளவில் இருந்தாலும் பெரிய நன்மைகளை தரும் பழம் புளூபெர்ரி. இப்பழத்தில் நார்ச்சத்துடன் ஆன்டி-ஆக்ஸிடென்ட்களும் அதிகம் உள்ளன. அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த உதவுகின்றன. தொடர்ந்து புளூபெர்ரி சாப்பிடுவது குடல்நலத்தையும் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. கேக், ஜூஸ், ஸ்மூத்தி, ஓட்ஸ் போன்றவற்றில் புளூபெர்ரியைச் சேர்த்து சாப்பிடும்போது சுவையும் ஆரோக்கியமும் ஒன்றாகக் கிடைக்கின்றன.
பாஷன் ஃப்ரூட் (Passion fruit)– புதுமையான சுவை, பல நன்மைகள்
பாஷன் ஃப்ரூட் எனப்படும் பழமும் நார்ச்சத்து நிறைந்த ஒன்று. இதன் புளிப்பும் இனிப்பும் கலந்த தனித்துவமான சுவை பலரையும் கவர்கிறது. இதில் வைட்டமின் A மற்றும் C போன்ற சத்துகளும் நிறைந்துள்ளன. உடலின் சோர்வை குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும் தன்மையும் இதற்கு உண்டு. தற்போது நகரங்களில் ஜூஸ் கடைகளிலும் பழக்கடைகளிலும் பாஷன் ஃப்ரூட் அதிகமாகக் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
பலவகை பழங்கள் தரும் பலவகை நன்மைகள்
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது உடலுக்கு மட்டுமல்ல, மனநலத்திற்கும் நல்லது. செரிமானம் சீராக இருந்தால் உடலும் மனமும் சுறுசுறுப்பாக இயங்கும். அதற்காக ஒரே ஒரு பழத்தை மட்டுமே நம்பாமல், பலவகை பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் குறைந்தபட்சம் ஒரு அல்லது இரண்டு பழங்களை சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால் பல நோய்களைத் தடுக்க முடியும்.
இயற்கை நமக்குத் தந்துள்ள இந்த ஆரோக்கியப் பொக்கிஷங்களைப் பாதுகாத்து பயன்படுத்துவது நம் பொறுப்பு. மருந்துகளைத் தேடும் முன், உணவிலேயே ஆரோக்கியத்தைத் தேடிக் கற்றுக்கொண்டால் வாழ்க்கை மேலும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.