Artificial sweeteners
Artificial sweeteners

செயற்கை இனிப்பூட்டிகளின் பயன்பாடு நல்லதா கெட்டதா?

Published on

ர்க்கரைக்கு மாற்றாக தற்போது செயற்கை இனிப்பூட்டிகள் எனப்படும் ஆர்டிபிசியல் ஸ்வீட்னர்கள் கிடைக்கின்றன. இவற்றைப் பெரும்பாலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் உட்கொள்கிறார்கள். இவை பவுடர் வடிவத்திலோ அல்லது லிக்விட் வடிவத்திலோ கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் சாதக, பாதகங்களைப் பற்றி பார்ப்போம்.

செயற்கை இனிப்பூட்டிகள் என்றால் என்ன?

செயற்கை இனிப்பூட்டிகள் என்பவை குறைந்த கலோரி அல்லது ஜீரோ கலோரி சர்க்கரை மாற்றுகளாகும். வழக்கமான வெள்ளை சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரையை சேர்க்காமல், உண்ணும் உணவிலும் பானங்களிலும் இனிப்பு சுவை தருவதற்காக சேர்க்கப்படுபவை. இவற்றால் கூடுதல் கலோரிகள் இல்லை.

செயற்கை இனிப்பூட்டிகளின் நன்மைகள்:

எடை மேலாண்மை: செயற்கை இனிப்பூட்டிகள் கொண்ட உணவுகளை உண்பதால் உடலின் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலை குறைக்க உதவும். இதனால் எடை இழப்புக்கு உதவலாம். உடல் எடை கட்டுக்குள் இருக்கும். சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தும்போது எடை மேலாண்மையை கடைப்பிடிக்கலாம்.

இரத்தச் சர்க்கரை கட்டுப்பாடு: சில செயற்கை இணைப்பூட்டிகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாக இருக்கிறது.

பல் ஆரோக்கியம்: சர்க்கரை சேர்த்த இனிப்பு வகைகளை உண்ணும்போது பல் ஆரோக்கியம் கெட்டுப்போகும். பற்சொத்தை, துவாரங்கள் உண்டாகும். ஆனால், செயற்கை இனிப்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை அருந்தும்போது பல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

இனிப்பு சுவை: கலோரிகள் இல்லாமல் இருப்பதால் பலவிதமான இனிப்பு நிலைகளை இவை வழங்குகின்றன. இதனால் இவற்றை உட்கொள்ளும் நபர்கள் மிதமான அளவில் இனிப்பு சுவையை அனுபவிக்கலாம்.

செயற்கை இனிப்பூட்டிகளின் தீமைகள்: பொதுவாக, செயற்கை இனிப்புகள் என்பது உணவு மற்றும் பானங்களை இனிமையாக்கப் பயன்படும் ரசாயனங்கள். இவற்றை சுவைக்கும்போது நாக்கில் உள்ள சுவை மொட்டுகள் அவற்றை அங்கீகரிப்பதால் அவை இனிமையாக இருக்கின்றன. இவற்றை தினமும் எடுத்துக்கொள்ளும்போது இவை பசியை அதிகரிக்கும். எடை அதிகரிப்பை ஊக்குவிக்கும். உணவு உண்ட பின்பும் இன்னும் உணவு உண்ணத் தூண்டுகிறது. அதனால் எடை கூடுவது நிகழ்கிறது. ஏனென்றால், பிற இனிப்பு சுவையுள்ள உணவுகளில் காணப்படும் கலோரிகள் இவற்றில் இல்லாததால் அவை மூளையை குழப்பி இன்னும் பசியுடன் இருப்பதாக நினைக்க வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
பசுமை வீடு விளைவும் - உலக வெப்பமயமாதலும்!
Artificial sweeteners

சுவை: சிலருக்கு செயற்கை இனிப்பூட்டிகளின் சுவை விரும்பத்தகாததாக இருக்கலாம். உண்மையான சர்க்கரையின் சுவை இதில் இல்லாமல் இருப்பது போல தோன்றலாம்.

உடல் நலக் கோளாறுகள்: பெரும்பாலான செயற்கை இனிப்பூட்டிகள் பாதுகாப்பாகக் கருதப்பட்டாலும் நீண்ட கால உடல்நல பாதிப்புகள் குறித்து இன்னும் விவாதங்களும் ஆய்வுகளும் நடந்து வருகின்றன. சில ஆய்வுகளின் முடிவுகள் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கின்றன.

வளர்சிதை மாற்ற விளைவுகள்: சில ஆராய்ச்சிகள் வளர்சிதை மாற்ற செயல்முறைகள் மற்றும் பசி தொடர்பான ஒழுங்கின்மைக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கின்றன. இதனால் எடை அதிகரிப்பு அல்லது அதிகரித்த பசிக்கு வித்திடலாம்.

குடல் ஆரோக்கியம்: சில வகையான செயற்கை இனிப்பூட்டிகள் குடலின் செயலை பாதிக்கலாம். குடலில் உள்ள மைக்ரோபயோடேட்டாவை பாதிக்கலாம். இதனால் குடல் ஆரோக்கியம் சீர்கெடலாம்.

ஒவ்வாமை: சில நபர்களுக்கு செரிமானப் பிரச்னைகள் ஏற்படலாம். சில குறிப்பிட்ட செயற்கை இனிப்பூட்டிகள் எதிர்வினைகளைத் தரலாம்.

புற்றுநோய்: விலங்குகளுக்கு செயற்கை இனிப்பூட்டிகளைக் கொடுத்து ஆராய்ச்சி செய்யப்பட்டபோது அவை புற்றுநோய் போன்ற தீவிரமான பாதிப்புகள் ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டது. எனவே, செயற்கை இனிப்பூட்டிகளை எடுத்துக்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளாமல் அரிதாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com