
சிலருக்கு கை, கால்கள் பார்ப்பதற்கு ஒல்லியாக இருக்கும். ஆனால், வயிற்றுப்பகுதி மட்டும் பெரிதாக பலூன் போன்று இருக்கும். இந்த பிரச்னையைப் எப்படி சரிசெய்வது என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
நம்முடைய வயிற்றினுடைய அளவு உணவு இல்லாத போது நம் கை முஷ்டி அளவுக்கு தான் இருக்கும். ஆனால், நாம் உணவு சப்பிட சாப்பிட வயிற்றின் அளவு விரிவடையும். வயிற்றின் அளவு நான்கு லிட்டர் கொள்ளளவு கொண்டது. அதற்கு மேலேயும் தாங்கக்கூடிய திறன் கொண்டது. மேலும் நம் வயிறை ஒரு மினி கேஸ் ஃபேக்டரி என்றும் சொல்லலாம். பலவிதமான வாயுக்கள் உணவு ஜீரணமாகும் போது உற்பத்தியாகும்.
Carbon dioxide, Hydrogen போன்ற வாயுக்கள் இருக்கும். ஆனால் பெரும்பாலும் இந்த வாயுக்கள் பெருங்குடல் பகுதியில் இருக்கும் பாக்டீரியாவால் அதிகமாக உற்பத்தியாகிறது. இதையே நாம் கேஸ் ட்ரபிள் (Gas trouble) என்கிறோம்.
சரியாக ஜீரணமாகாத மாவுச்சத்து, நார்ச்சத்துக்கள் கொண்ட காய்கறிகள், பழங்கள் வாயுவை உருவாக்கும். இதனால் தான் சிலருக்கு வயிறு சற்று உப்பியதுப்போல தெரிகிறது. உணவுகளில் புரதத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால் வாயு உற்பத்தியைக் குறைக்கலாம்.
சாதாரணமாக சிலருக்கு வயிறு உப்பலாக இருப்பதற்கு வேகமாக சாப்பிடுவது காரணம். இதனால் அதிகப்படியாக காற்று உள்ளே சென்று விடுகிறது. இதை சரிசெய்ய உணவை பொறுமையாக மென்று சாப்பிடுவது அவசியமாகும். வயிற்றுப்பகுதியின் தசைகள் மிகவும் பலவீனமாவது இன்னொரு காரணமாகும். இப்படி இருக்கும் போது சாதாரணமாக சாப்பிட்டால் கூட வயிற்றுப்பகுதி உப்பியதுப்போல தெரியும்.
உப்பு அதிகம் உள்ள உணவுகள் நீரை அதிகம் உறிஞ்சி எடுத்துக்கொள்ளும் என்பதால் வயிறு வீக்கம் பெரிதாக தெரியும். மைதாவால் செய்யப்பட்ட உணவுகள், கேக், குளிர்பானங்கள் ஆகியவை வயிற்றில் Bloating sensation-ஐ அதிகப்படுத்தும்.
நம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் சில வழிகளைக் காண்போம்:
தண்ணீரை சுட வைத்து அதில் சீரகம், சோம்பு, கொத்தமல்லி விதைகள் மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்துக் கிடைக்கக்கூடிய தண்ணீரை வடிக்கட்டி குடித்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். புரதம், பருப்புகளால் ஏற்படும் வாயுவைக் குறைக்க உணவில் பெருங்காயத்தை சேர்க்க வேண்டும். இது வாயுவைக் குறைக்கும் தன்மையைக் கொண்டது. காலை சிற்றுண்டி சாப்பிட்ட பிறகு மிளகு, சீரகம் சேர்க்கப்பட்ட தண்ணீரை குடிப்பது மிகவும் நல்லது. தண்ணீரில் எழுமிச்சை ஜூஸை சேர்த்து அதனுடைன் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்துக் குடிப்பது நல்லது.
இந்த தண்ணீரை குடித்த பிறகு 15 நிமிடம் நடப்பது நல்ல பலனைத் தரும். உணவு கவளத்தை 20 முறை கடித்து பொறுமையாக சாப்பிடுங்கள். இரவு உணவை தூங்க போவதற்கு இரண்டு மணி நேரத்திற்குள் சாப்பிட்டு முடித்து விடுங்கள். உணவு சாப்பிட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்த்து சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.
யோகாசனத்தில் புஜங்காசனம், Cobra pose, child pose, Wind relieving pose போன்ற ஆசனங்களை செய்யலாம். படியில் ஏறி இறங்குவது வயிற்றுப்பகுதி தசையைக் குறைக்கும். திரிப்பலா பவுடரை வாரம் ஒருமுறை சுடுத்தண்ணீரில் கலந்துக் குடிக்கலாம். இரவு வெந்தயத்தை ஊற வைத்து அந்த தண்ணீரை காலையில் குடிப்பது நல்லது. புளிக்கு பதிலாக குடம்புளியை பயன்படுத்தலாம்.
இதுப்போன்ற சுலபமான டெக்னிக் மூலமாக இந்த பிரச்னையை சரிசெய்யலாம். ஆனால், திடீரென்று வயிறு உப்பிவிட்டது, உப்பும் போது வயிற்றில் வலி இருக்கிறது, மூச்சு விட சிரமம் ஏற்படுகிறது, பசியின்மை, உடல்எடை அதிகரித்தல் இத்தகைய பிரச்னை ஏற்படும் போது மருத்துவரை அணுகுவது சிறந்தது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)