
'விட்டிலிகோ' எனப்படும் வெண் புள்ளிகள் ஒரு தன்னுடல் தாக்க நோய். உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பானது, சருமம், முடி மற்றும் கண்களுக்கு நிறத்தைக் கொடுக்கும் நிறமிகளை உற்பத்தி செய்யும் செல்களை தாக்குவதால் வெண்புள்ளி உண்டாகிறது. இந்த பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி விலக்கி வைக்காமல், அனுசரித்து ஆதரவு தர வேண்டும்.
உடலில் தோன்றும் வெண்புள்ளிகள் ஒரு தொற்று வியாதி அல்ல. வலியை ஏற்படுத்தக் கூடியதும் அல்ல. ஆனால் முகத்திலும் உடலிலும் வெண்புள்ளிகளோடு காணப்படும் மக்களை அவர்களது நெருங்கிய உறவினர், நட்பு வட்டம் மற்றும் பிற மனிதர்கள் ஒதுக்கி வைப்பதும், அவர்களை மனதால் துயரப்பட செய்வதும் நடக்கிறது. பெரும்பாலான வெண்புள்ளிகள் உடைய நோயாளிகள் தன்னுடைய சுயமரியாதை பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அவர்களுக்கு தேவையான ஆதரவை தருவது மிகவும் முக்கியமாக முக்கியமாகும்.
பெரும்பாலானோருக்கு விட்டிலிகோ பற்றிய தவறான எண்ணங்கள் உள்ளன. அது வெண்புள்ளிகள் உள்ள மனிதரைத் தொட்டாலோ, பழகினாலோ தம்மையும் வெண்புள்ளிகள் தாக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் வெண்புள்ளிகள் என்பது ஒரு குறைபாடு அல்ல, மாறுபட்ட சரும நிறங்களை கொண்டது.
வெண்புள்ளி உள்ள மனிதருக்கு சரியான வேலை கிடைப்பது அல்லது திருமணம் நடப்பது பெரிதும் சிரமமாக இருக்கிறது. இதனால் அவர்களுக்கு மனரீதியான பாதிப்பு உண்டாகிறது. சமூகத்தால் ஒதுக்கப்பட்டு விட்டோம் என்று அவர்கள் நினைத்து மனச்சோர்வும் தாழ்வுணர்ச்சியும் கொள்கிறார்கள். சிலருக்கு மனரீதியான குறைபாடுகளும் ஏற்படுகின்றன.
சுற்றிலும் உள்ள மனிதர்களில் யாருக்காவது வெண் புள்ளிகள் இருந்தால் அவர்களை, எல்லோரையும் போலவே நடத்த வேண்டும், பழக வேண்டும். அவர்களின் உணர்வுகள் மற்றும் கருத்துக்களுக்கு மரியாதை அளித்து அவரை சாதாரணமான மனிதரைப் போல நடமாட செய்ய உதவ வேண்டும். அதற்கு தகுந்த சூழலை உருவாக்க வேண்டும். அவர்களை யாராவது துன்புறுத்தினால் அவமரியாதை செய்தால், அல்லது விளக்கி வைத்தாலோ அவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும். அவர்களின் பலம், திறமை போன்ற தனித்துவமான குணங்களை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர அவர்களின் சரும நிறத்தைப் பற்றி கவலைப்படக் கூடாது.
வெண் புள்ளிகள் பாதிப்புக்கு உள்ளான சிலருக்கு கூட தன் நோயைப் பற்றி சரியாகத் தெரிவதில்லை. அவர்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தி, வாய் வழியாக வழங்கப்படும் மருந்துகள் மற்றும் சருமத்தின் மீது பூசக்கூடிய கிரீம்கள் பற்றிய சிகிச்சை முறைகளை பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
பொதுவெளியில் அவர்களை சந்தித்தால் முறைத்துப் பார்ப்பது, ஒதுக்குவது போன்ற செயல்களை செய்யாமல் மரியாதைக்குரிய வகையில் அவர்களை நடத்த வேண்டும். வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தாழ்வுணர்ச்சி இருந்தால் அதைப் போக்க அவர்களுடன் உரையாடி நேர்மறையான எண்ணத்தை அவர்களுக்குள் விதைக்க வேண்டும்.
உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல பொழுதுபோக்குகள் போன்ற உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியம் அளிக்கும் விஷயத்தில் அவர்களை ஈடுபடுத்த ஊக்குவிக்க வேண்டும். மனநல ஆரோக்கியம் குறைவாக உள்ளவர்களுக்கு தகுந்த மனநல ஆலோசனை கிடைக்க வழிவகை செய்யலாம்.
உடலில் வெண் புள்ளி பாதிப்பில்லாத நன்றாக இருக்கும் சருமத்தை எடுத்து வெண்புள்ளி பாதித்த பகுதியில் அறுவை சிகிச்சை மூலம் மாற்றுவதும் நடக்கிறது. இதையும் சொல்லி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும்.