
பல காலமாக பாதாம் பருப்புகளை அவற்றில் உள்ள எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள், அதன் தனித்துவம் கொண்ட சுவை, மற்றும் டெக்சருக்காக பலரும் உட்கொண்டு வருவதை நாம் அறிவோம். ஆல்மண்டில், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் E போன்ற முக்கியமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஆல்மண்டில் பல வகை உண்டு. அவற்றுள் காஷ்மீரி மம்ரா ஆல்மண்ட் மற்றும் கலிஃபோர்னியா ஆல்மண்ட் ஆகிய இரண்டு வகை ஆல்மண்ட் இந்தியாவில் பிரபலமானதாக உள்ளன. இவை இரு வேறு வகை பாதாம் பருப்புகளாகும். இரண்டிலும் தனித்துவமான சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. மம்ரா ஆல்மண்ட் ஆர்கானிக் முறையில் வளர்க்கப்பட்டு அதிகளவு ஊட்டச்சத்துக்களும் சுவையும் கொண்டதாக உள்ளது. இவற்றின் வளர்ச்சியில் எந்த வித இரசாயனமும் பூச்சி மருந்தும் உபயோகப்படுத்துவதில்லை. காஷ்மீரின் குளிர் நிறைந்த பகுதிகளில் இது வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த மாதிரியான குளிரான சீதோஷ்ண நிலை அங்கு விளையும் பாதாம் பருப்புகளுக்கு தனித்துவமான சுவை, டெக்ச்சர், வலுவான தோல் மற்றும் மரத்திலானது போன்றதொரு வெளிப்புறத் தோற்றத்தையும் தருகிறது. மற்ற வகைப் பாதாம் பருப்புகளுடன் ஒப்பிடுகையில் காஷ்மீரி மம்ரா ஆல்மண்டின் சுவை உயர் தரமானது. மேலும் இது மூளையின் ஆரோக்கியம், இரைப்பை, குடல் இயக்கங்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் சிறந்த முறையில் உதவி புரியும்.
கலிஃபோர்னியா ஆல்மண்ட் உலகில் எங்கும் பரவலாகக் கிடைக்கக் கூடியது. பல நாட்டினராலும் விரும்பி உட்கொள்ளப்பட்டு வருகிறது. உறுதியான தரத்தில், பல வகை சுவைகொண்டது. அமெரிக்காவில் வளர்க்கப்பட்டு, பதப்படுத்தப்படுகிறது. கிரிஸ்பியாகவும் மைல்டு டேஸ்ட்டும் கொண்ட கலிஃபோர்னியா ஆல்மண்ட் பச்சையாகவும், ரோஸ்ட் செய்தும், சாலட், பெப்பர் ரோஸ்டட், ஹனி ரோஸ்டட் என பல வகையான சுவைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மிக அதிகளவில் பயிரிடப்பட்டு வருவதால் இதன் விலையும் அனைவராலும் வாங்கக்கூடிய நிலையில் உள்ளது.
சமையலில் உபயோகிக்கவும், பேக் (bake) செய்யும் வசதிக்காகவும் கலிஃபோர்னியா ஆல்மண்ட் பிளான்ச் (Blanch) செய்தும் விற்கப்படுகிறது. கலிஃபோர்னியா ஆல்மண்டில் கொழுப்பு சத்துக்கள், வைட்டமின் E, மினரல்கள், கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.
இவை இதய ஆரோக்கியத்தை நல்ல முறையில் பாதுகாக்கவும் கொலஸ்ட்ரால் அளவை சம நிலையில் வைக்கவும் உதவும். இயற்கையாகவே அதிகளவு ஆரோக்கியம் நிறைந்தது கலிஃபோர்னியா ஆல்மண்ட்.
காஷ்மீரி மம்ரா ஆல்மண்ட் தனித்துவமான, கொஞ்சம் சிவிங்கம் போன்ற டெக்சர் கொண்டது. வலுவான சுவை கொண்டது. கலிஃபோர்னியா ஆல்மண்டில் இருப்பதை விட இனிப்பு சுவை கொஞ்சம் மம்ரா ஆல்மண்டில் குறைவு. மம்ரா ஆல்மண்டில் இயற்கையாகவே சுவை அதிகம் உள்ளதால் அவை பாரம்பரிய உணவுகளில் அதிகம் சேர்க்கப்பட்டு வருகின்றன. காஷ்மீரி மம்ரா மற்றும் கலிஃபோர்னியா ஆல்மண்ட் இரண்டிலுமே ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதிக ஊட்டச்சத்து, அதிக சுவை உயர்ந்த தரம் வேண்டுவோர் காஷ்மீரி மம்ரா ஆல்மண்டை தேர்வு செய்யலாம். அதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் அதிகம். பாரம்பரிய உணவுகளிலும் சேர்க்கக் கூடிய ஆர்கானிக் கொட்டை இது.
கலிஃபோர்னியா ஆல்மண்ட் அதிக நாடுகளில் கிடைக்கக் கூடியது. வித விதமான சுவைகளில், எண்ணெயாகவும், பட்டராகவும், பவுடராகவும், துருவிய வடிவிலும் கிடைக்கக்கூடியது. விலையும் குறைவு. இருந்தும் புரோட்டீன் போன்ற சத்துக்களை தரவும், இதய ஆரோக்கியம் காக்கவும் உதவி புரிகிறது கலிஃபோர்னியா ஆல்மண்ட்.