
சாதாரண மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 80 ஆண்டுகள் என்று இருக்கும் இக்காலத்தில், சுமார் 250 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஒரு சீன மனிதரின் கதை ஆச்சரியமூட்டுவதுடன், பெரும் புதிராகவும் உள்ளது. லி சிங்-யுன் (Li Ching-yun) என்ற இந்த மனிதர், சீன மூலிகை மருத்துவர், தற்காப்புக் கலை நிபுணர் மற்றும் ஒரு தந்திரோபாய ஆலோசகராக இருந்தார். உலகில் நீண்ட காலம் வாழ்ந்தவர் இவரே என்று பலர் நம்புகிறார்கள்.
சில தகவல்களின்படி, இவர் 1736-ல் பிறந்ததாகவும், 1933-ல் மரணமடைந்தபோது அவருக்கு 197 வயது என்றும் கூறப்படுகிறது. ஆனால், இன்னும் வியக்கத்தக்க சில பதிவுகள், இவர் 1677-ல் பிறந்திருக்கலாம் என்றும், அப்போது அவருக்கு 256 வயது என்றும் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வளவு நீண்ட ஆயுளுக்கு லி சிங்-யுன் என்ன செய்தார்? அவரது நீண்ட ஆயுளுக்கான 5 என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
1. மன அமைதி:
'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழின் ஒரு அறிக்கையின்படி, லி சிங்-யுன் தனது நம்பமுடியாத நீண்ட ஆயுளுக்கு மன அமைதியை ஒரு முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளார். "உள் அமைதியைப் பெற முடிந்தால், யார் வேண்டுமானாலும் 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழ முடியும்," என்று அவர் அடிக்கடி கூறியிருக்கிறார். மன அழுத்தம், நம் உடலின் இயற்கையான சமநிலையைக் குலைத்து, ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.
நாம் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருக்கும்போது, கார்டிசால் என்ற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கிறது. இது நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலவீனப்படுத்தி, ரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதய நோய்களுக்கு வழிவகுக்கும். மன அழுத்தம் செரிமானம், தூக்கம் மற்றும் மனத் தெளிவையும் பாதித்து, சோர்வு, பதட்டம், மனச்சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். நீண்டகால மன அழுத்தம் முதுமையையும் துரிதப்படுத்தி, நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால், மன அமைதியை நிர்வகிப்பது அவசியம்.
எனவே, மன அழுத்தத்தைத் தவிர்த்து, அமைதியான வாழ்வை வாழ்வது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்குச் சக்திவாய்ந்த அடித்தளமாக அமைகிறது. உள் அமைதி, சிறந்த தூக்கம், தெளிவான சிந்தனை மற்றும் ஆரோக்கியமான உறவுகளுக்கு வழிவகுக்கும் - இவை அனைத்தும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவசியம். தியானம், நிதானமான வாழ்க்கை மற்றும் நன்றியுணர்வுடன் இருப்பது போன்றவை குழப்பமான சூழலிலும் அமைதியாக இருக்கவும், வாழ்க்கையின் சவால்களைச் சிறப்பாகச் சமாளிக்கவும் உதவும்.
2. இயற்கை மூலிகைகள் மற்றும் எளிய உணவு முறை:
லி சிங்-யுனின் நீண்ட ஆயுளுக்கு அவர் வாழ்நாள் முழுவதும் உட்கொண்ட சில மூலிகைகளும் காரணமாக இருந்தன. தனது 10 வயதிலேயே திபெத், அன்நாம், சியாம் போன்ற தொலைதூரப் பகுதிகளுக்குப் பயணித்து, மருத்துவத் தாவரங்களைச் சேகரித்து, அவற்றைச் சீன மூலிகை விற்பனையாளராக விற்றுள்ளார்.
லிங்ஷி (Lingzhi), கோஜி பெர்ரிஸ் (Goji Berries), காட்டு ஜின்செங் (Wild Ginseng), மற்றும் கோட்டு கோலா (Gotu Kola) போன்ற பாரம்பரிய சீன மூலிகைகளை அவர் விற்றுள்ளார். அவர் அவற்றை வெறும் விற்றது மட்டுமல்லாமல், தனது எளிய உணவில் இந்த மூலிகைகளையும், அரிசி ஒயினையும் சேர்த்துக் கொண்டார். இது அவரது நீண்ட ஆயுளுக்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் பெரிதும் பங்களித்தது என்று விக்கிபீடியா தகவல்கள் கூறுகின்றன.
3. ஆமை போல அமர்தல்:
வோங் பெய்-ஃபு (Wu Pei-fu) என்ற தளபதி, லி சிங்-யுனின் நீண்ட ஆயுளின் ரகசியத்தைக் கண்டறியும் ஆவலில் அவரைத் தன்னுடன் வாழ அழைத்தார். அப்போது லி சிங்-யுன், தனது மாணவர்களில் ஒருவருக்கு நீண்ட ஆயுளுக்கான எளிய ஆனால் கவித்துவமான ஆலோசனையை வழங்கினார்: "அமைதியான இதயத்துடன் இருங்கள் (Keep a quiet heart), ஆமை போல அமருங்கள் (sit like a tortoise), புறா போல விரைவாக நடங்கள் (Walk briskly like a pigeon), நாய் போல உறங்குங்கள் (Sleep like a dog)." ஆமை போல அமர்தல் என்பது நிதானமான, அமைதியான உடல் அசைவுகளைக் குறிக்கிறது. அவசரமில்லாத இயக்கம், உடலின் ஆற்றலைச் சேமித்து, உள்ளுறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது.
4. புறா போல நடத்தல்:
"புறா போல விரைவாக நடங்கள்" என்ற அறிவுரை, தினசரி வாழ்க்கையில் சுறுசுறுப்பாகவும், ஆனால் மெதுவாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. கடினமான உடற்பயிற்சிகளை விட, சீரான, மென்மையான நடைபயிற்சி மற்றும் உடல் அசைவுகள் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
5. நாய் போல உறங்குதல்:
"நாய் போல உறங்குங்கள்" என்பது ஆழ்ந்த, இடையூறில்லாத உறக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறவும், அன்றாட சோர்வில் இருந்து மீளவும் போதுமான மற்றும் தரமான தூக்கம் அவசியம். ஆழமான தூக்கம், உடலின் அனைத்துச் செல்கள் மற்றும் திசுக்களின் சீரமைப்பிற்கும், மன அமைதிக்கும் துணைபுரிகிறது.
லி சிங்-யுனின் வயது குறித்த கதைகள் வெறும் கட்டுக்கதைகள் அல்ல. 1930களில், ஒரு சீனப் பேராசிரியர், லி சிங்-யுனின் 150வது மற்றும் 200வது பிறந்தநாளைக் கொண்டாடிய அரசப் பதிவுகளைக் கண்டறிந்தார். இது அவரது நம்பமுடியாத நீண்ட ஆயுளுக்குச் சான்றாகக் கருதப்படுகிறது.