கீழாநெல்லி – காமாலைக்கு மருந்து கசந்தாலும் கட்டாயம் அருந்து!

கீழாநெல்லி
கீழாநெல்லி

கீழாநெல்லி வயல் வரப்புகளிலும், ஈரமான இடங்களிலும் காணப்படும். இதற்கு கீழ்காய்நெல்லி, கீழ்வாய்நெல்லி ஆகிய பெயர்களும் உண்டு.

இதன் இலைகளில் கசப்பு சுவைகொண்ட பில்லாந்தின் என்கிற செயல்படும் மூலப்பொருளைக் காணலாம். இதனுடைய இலைகள் புளியமரத்தின் இலைகளைப் போலவே இரண்டு வரிசைகளில் சிறியதாகக் காணப்படும். இந்த இலைகளைத் தாங்கிப் பிடிக்கும் நடுநரம்பின் கீழ் பாகம் முழுவதும் கீழ் நோக்கிய பசுமையான சிறு பூக்களும், காய்களும் தொகுப்பாக காணப்படும். இதனால் அது கீழாநெல்லி என்று பெயர் பெற்றது.

கீழாநெல்லி முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. செடி முழுவதும் பொட்டாசியம் சத்து மிகுதியாக உள்ளது. சிறுநீரைப் பெருக்கும், விஷத்தை முறிக்கும், ரத்த சோகையைக் குறைக்கும், ரத்தத்தில் உள்ள நுண் கிருமிகளைக் கொல்லும், பசி உண்டாக்கும், காய்ச்சல் போக்கும்.

முன்னோர்கள் ‘வரும் முன் காப்போம்’ என்பதற்கேற்ப இதை அவ்வப்போது பயன்படுத்துவார்கள். கிராமங்களில் இன்றும் மஞ்சள் காமாலைக்கு மருந்தாகப் பயன் படுத்துகிறார்கள். கீழா நெல்லி இலையைச் சுத்தம் செய்து அம்மியில் அரைத்து சிறு உருண்டையாக்கி தினமும் ஒரு உருண்டை சாப்பிட வேண்டும். 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும். அதிகமாக கசப்பாக தோன்றினால் இலையை நீரில் கொதிக்கவைத்து சீரகம், பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து குடித்தால் மஞ்சள் காமாலையிலிருந்து பூரண குணம் கிடைக்கும். இந்தச் சாறை குடிக்கின்ற நாளில் புளி, மீன், மாமிசம், எண்ணெய், காரம் ஆகாது.

கீழாநெல்லி வேரை அரைத்து பசும் பாலுடன் கலந்து காலை, மாலை 3 நாட்கள் குடித்தால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சி பெறும். கடின உழைப்பாளிகளுக்கு இது மிகவும் உகந்த உணவு.

விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களைக் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை நசுக்கி அதனை 2 கப் நீரில் இட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை இரு வேளை குடிக்க வெள்ளைப்படுதல் தீரும்.

ஒரு கைப்பிடி அளவு இலையை அரைத்து ஒரு கப் மோரில் கலந்து காலையில் குடித்துவந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.

தேவையான அளவு கீழா நெல்லி இலைகளை அரைத்து அடிபட்ட காயத்தின் மீது வைத்துக் கட்ட காயங்கள் குணமாகும்.

இதையும் படியுங்கள்:
ஆட்டுப்பால் அருந்துவதால் ஒவ்வாமை ஏற்படுமா?
கீழாநெல்லி

கீழாநெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்பு சத்து, மினரல்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இதைக் கல்லீரலின் பாதுகாவலன் என்பார்கள். கல்லீரலைக் காக்கும் மூலிகை டானிக்காக மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

கீழாநெல்லி பொடியை வெந்நீரில் கலந்து குடித்துவந்தால் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்குவதுடன் கண்பார்வை மேம்படும்.

சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும். மலட்டுத்தன்மையைப் போக்கும். சர்க்கரை நோயைக் குணப்படுத்தும்.

2 ஸ்பூன் நல்லெண்ணெய் கீழாநெல்லி வேர், சீரகம் ஆகியவற்றை நன்றாக அரைத்து பசும் பாலுடன் கலந்து வடிகட்டி அந்தச் சாற்றை குடித்தால் தலைவலி குணமாகும்.

தலைமுடி சம்பந்தமான பிரச்னைகள், சருமப் பிரச்னைகள் போன்றவற்றிற்கு இந்த இலையை அரைத்து தடவிவந்தால் போதும் நிவாரணம் கிடைக்கும்.

இயற்கை நமக்குத் தந்த இந்தக் கீழாநெல்லி செடியை நாம் சரியாகப் பயன்படுத்தி நோய்நொடி இல்லாமல் வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com