சென்னையில் ஓட்டல்களில் சாப்பிடச் செல்லும்போது, குடிக்க வெந்நீர் கொடுக்குமாறு கேட்டுக் கொள்வது என் வழக்கம். சில ஓட்டல்களில் அவ்வாறே கொடுப்பார்கள். சிலவற்றில், ‘‘சார், இது சுத்திகரிக்கப்பட்டக் குடிநீர்தான்,‘‘ என்று தாம் கொண்டு வந்து வைக்கும் நீர் தூய்மையானதுதான் என்று உத்தரவாதமளிப்பார். வேறு ஒரு ஓட்டலில் லேசான மஞ்சள் நிறத்தில் ஆவி பறக்க, சூடாக குடிநீர் தந்தார்கள். ஆவி சீரக வாசனையுடன் இருந்ததாலும், நீரின் மேற்பரப்பில் சில சீரக மணிகள் மிதந்து கொண்டிருந்ததாலும், மிகுந்த நம்பிக்கையுடனும், வாடிக்கையாளரின் உடல்நலத்தில் அக்கறை கொண்ட அந்த ஓட்டலின் மீதான அக்கறையை வியந்தும் அந்த நீரை விரும்பிப் பருகினேன்.
சில மாதங்களுக்கு முன்னால் கிட்டத்தட்ட இதே அனுபவம் எனக்குக் கேரள மாநிலத்தில் கிட்டியது. அந்த மாநிலத்தில் உள்ள 108 திவ்யதேசத் திருத்தலங்களை தரிசிக்கச் சென்ற நான், அந்தந்தப் பகுதிகளில் உள்ள சலையோரக் கடைகளில் காலை உணவு எடுத்துக் கொள்ளச் சென்றேன். இங்கே முதலில் வெதுவெதுப்பான, லேசான செந்நிறம் கொண்ட குடிநீரை மேசையில் வைத்துவிட்டு, அப்புறம்தான் சாப்பிட என்ன வேண்டும் என்று கேட்டார்கள்.
அந்த நீரைப் பார்த்ததும் எனக்குத் தயக்கமாக இருந்தது. ‘‘இது ஏன், இந்த கலர்ல இருக்கு? கலங்கின குடிநீரை ஏன் வைக்கிறீர்கள்? நல்ல குடிநீர் இல்லையா?‘‘ என்று அந்த தம்ளரைப் பார்த்து பயந்து கொண்டே கேட்டேன்.
பணியாளர் மெல்லச் சிரித்தார். ‘‘சார், நம்ம ஊருக்குப் புதுசோ? இங்கே எல்லா ஓட்டல்கள்லேயும் வாடிக்கையாளர்களுக்கு இப்படித்தான் நீர் குடிக்கக் கொடுப்போம். சிலர் கட்டாயமாக பாட்டில் நீர் கேட்பார்கள். ஆனால் அவர்களையும் வற்புறுத்தி ஒரு தம்ளராவது இந்த நீரைக் குடிக்குமாறு கேட்டுக் கொள்வோம்,‘‘ என்றார் அவர். எனக்கு வியப்பாக இருந்தது.
‘‘இந்த சாலை சிற்றுண்டி கடை மட்டுமில்லே சார், பெரிய பெரிய ஓட்டல்களிலும், ஏன், நட்சத்திர ஓட்டல்களில்கூட இந்த நீரைத்தான் ‘வெல்கம் ட்ரிங்க்‘ ஆக முதலில் கொடுப்பார்கள்,‘‘ என்று அவர் மேலும் தகவல் தந்தது என் புருவங்களை உயர்த்தின. ‘‘கோயில் அன்னதானத்தின்போதும், ஏதேனும் வீட்டிற்கு நீங்கள் விருந்தாளியாகப் போனாலும் முதலில் இந்த நீரைக் கொடுத்துதான் விருந்துபசாரத்தையே ஆரம்பிப்பார்கள்,‘‘ என்றும் சொல்லி, என் புருவங்கள் அதற்கு மேல் ஏற நெற்றியில் இடம் கிடைக்காதபடி செய்தார் அவர்.
அது மூலிகைத் தண்ணீர். கோடை, குளிர், மழை என்று பருவங்கள் மாறும்போது அந்த ஆரம்ப நாட்களிலாவது இவ்வாறு இந்த நீரைத்தான் அருந்தக் கொடுக்கிறார்கள் அங்கே.
அப்படி என்னென்ன மூலிகைகள் சேர்ந்திருக்கின்றன இந்த நீரில்?
ஒன்று – பதிமுகம் பட்டை. லவங்கப்பட்டை மாதிரி ஒரு மூலிகை மரத்தின் பட்டை. இதுதான் நீருக்கு சிவப்பு வண்ணம் கொடுக்கிறது. சிறுநீரகப் பிரச்னைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறதாம் இந்த பதிமுகம் பட்டை.
இரண்டாவது லட்சுமி மரம் அல்லது சொர்க்க மரம். இதன் தாவரவியல் பெயர், சிமருபா கிளாக்கா (SIMAROUBA GLAUCA). இது மிகக் கொடிய நோயையும் அண்டவிடாத தன்மை கொண்டதாம் – புற்றுநோய் உட்பட! இயற்கை மருத்துவம் மட்டுமல்லாமல், அலோபதி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது இந்த மரத்தின் விதை, வேர், மலர், காய், பழம், பழத்தின் தோல். இவை எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை.
மூன்றாவது கங்களி மூலிகை. இது ஜீரண உறுப்பில் நன்கு வேலை செய்யுமாம்.
நான்காவது நன்னாரி வேர். இது உடலுக்குள் வெப்பத்தைப் போக்கி குளிர்ச்சி தருமாம்.
இவ்வாறு ஓட்டல் பணியாளர் விளக்கிக் கூறினார்.
‘கேரளம் கடவுளின் பூமி‘ என்பார்கள். அதன் ஓர் அம்சமாக மக்களின் நலம் விழையும் மனிதாபிமானம் அங்கே மிகுந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.