

இன்றைய அவசரமான யுகத்தில் நம் உடல் ஆரோக்கியத்தில் காட்டும் சிறு சிறு அலட்சியங்கள் கூட பின்னாளில் பெரிய ஆபத்துகளை உண்டாக்க காத்திருக்கின்றன. சமீபத்திய ஒரு ஆய்வின் படி உலகம் முழுவதும் 85 கோடிக்கும் அதிகமான மக்கள் சிறுநீரக பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச நெப்ராலஜி சங்கம் கூறியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், 40 வயதைக் கடந்த பெண்களுக்கு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பெண்கள் சிறுநீரக அபாயங்களில் சிக்கிக் கொள்வதற்கு முக்கிய காரணம், அவர்களின் தவறான சில பழக்க வழக்கங்கள். அந்தப் பழக்கங்கள் என்னென்ன என்பதை அறிந்து அதிலிருந்து விடுபட முயற்சி செய்யவும்.
1. சிறுநீரை அடக்கி வைத்தல்:
பொதுவாக பெரும்பாலான பெண்களுக்கு சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கம் உள்ளது. வெளியிடங்களுக்கும் பயணங்களுக்கும் செல்லும் பொழுது பெண்கள் பெரும்பாலான நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருக்கின்றனர். பெரும்பாலும் மற்றவர்களின் கழிப்பறையை பயன்படுத்த பெண்கள் அதிக தயக்கம் காட்டுவார்கள்.
அதுபோல "பொது இடங்களில் கழிவறை எங்கே உள்ளது?" என்று கேட்க தயக்கம் காட்டி, அடக்கியே வைத்திருக்கின்றனர். இந்தப் பழக்கம் சிறுநீர்ப்பையில் பாக்டீரியாக்கள் பெருக வழிவகுக்கிறது. இது சிறுநீரகத் தொற்றுக்கு வழிவகுப்பதோடு, சிறுநீரகத் திசுக்களையும் சிதைக்கக்கூடும்.
2. போதிய அளவு தண்ணீர் குடிக்காதது:
பெண்கள் பொதுவாக அதிக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நினைத்து, தண்ணீரை மிகவும் குறைவாகவே அருந்துகின்றனர். குறைவாக தண்ணீர் குடிப்பதால், சிறுநீரகங்கள் உடலில் உள்ள நச்சுக்களையும், அதிகப்படியான சோடியம் மற்றும் யூரியாவையும் வெளியேற்ற முடியாமல் தவிக்கும். இதன் காரணமாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். மேலும், அதன் வடிகட்டுதல் திறன் குறைவதற்கும் காரணமாகிறது.
3. வலி நிவாரணிகளின் பயன்பாடு:
பெண்கள் பொதுவாக கை கால் வலி, தலை வலி ஆகியவற்றிற்கு அடிக்கடி பெயின் கில்லர் எனப்படும் நிவாரணிகளை எடுத்துக் கொள்கிறார்கள். இப்யூபுரூஃபன் (Ibuprofen) போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றித் தொடர்ந்து பயன்படுத்துவது, சிறுநீரகங்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைத்து, காலப் போக்கில் நிரந்தரச் செயலிழப்பை ஏற்படுத்தும்.
4. அதிகப்படியான புரதம் உட்கொள்ளல்:
சமீப கால ட்ரெண்டிங்கின் படி பெண்கள் உடல் எடையை குறைக்க, கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்து, அதிக புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுகிறார்கள். அதிகமான புரதம் சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தத்தினை கொடுக்கின்றன. இந்த அளவு தொடர்ச்சியாக அதிகரிக்கும் போது சிறுநீரகங்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன.
5. இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்:
இரவு நேரங்களில் அதிக முறை சிறுநீர் கழிப்பது சிறுநீரக வடிகட்டிகள் சேதமடைந்துள்ளதன் ஆரம்ப அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த பிரச்னையை அலட்சியமாக அனுகி, சிறுநீரகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடக்கூடாது.
6. சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தைக் கவனிக்காமை:
பெண்கள் தங்களுக்கு நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்த நோய் போன்றவை ஏற்பட்டாலும் அலட்சியமாகவே இருக்கின்றனர். இந்த நோய்களை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால், அவை சிறுநீரகத்தில் உள்ள நுண் ரத்த நாளங்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சிறுநீரகத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்:
பெண்கள் எப்போதும் போதுமான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். சிறுநீர் என்பது அனைவருக்கும் இயற்கையான பொதுவான விஷயம் என்பதால், கழிவறை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து செல்ல தயக்கம் வேண்டாம். உணவு பழக்கங்களில் நீர் நிறைந்த பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் பரிந்துரையின்றி வலி மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். உணவில் அளவுக்கு அதிகமான புரதங்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம். 40 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)