

பொதுவாகவே வெயில் காலத்தில் பாட்டிலில் தண்ணீர் தீருவது தெரியாது. ஆனால், குளிர்காலம் வந்துவிட்டால், நமக்கு வியர்க்காது, தாகமும் பெரிதாக எடுக்காது. அதனால், நாள் முழுக்க வெறும் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டுச் சமாளிப்போம்.
நாம் செய்யும் இந்தச் சின்ன அலட்சியம், உடலுக்குள் ஒரு மிகப்பெரிய ஆரோக்கியச் சிக்கலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பது பலருக்குத் தெரிவதில்லை. அதுதான் 'சிறுநீரகக் கற்கள்'. பனிக்காலத்தில் ஏன் இந்தப் பிரச்சனை அதிகமாகிறது?
ஏன் கற்கள் உருவாகின்றன?
நம் உடலின் துப்புரவுத் தொழிலாளிதான் சிறுநீரகம். ரத்தத்தில் உள்ள கழிவுகளை, அதாவது தேவையற்ற உப்பு, கால்சியம், யூரிக் அமிலம் போன்றவற்றை வடிகட்டிச் சிறுநீர் வழியாக வெளியேற்றுவதுதான் அதன் வேலை. இந்தப் பணியைச் சரியாகச் செய்ய, சிறுநீரகத்திற்குப் போதுமான அளவு தண்ணீர் தேவை.
நாம் தண்ணீர் குடிப்பதை நிறுத்தும் போது, அல்லது குறைக்கும்போது, வெளியேற வேண்டிய கழிவுகள் சிறுநீரகத்திலேயே தேங்கிவிடுகின்றன. ஆற்றில் தண்ணீர் வறண்டு போனால் எப்படி மணல் திட்டுக்கள் தெரியுமோ, அதுபோலத் தண்ணீர் இல்லாத போது இந்த உப்புகள் ஒன்று சேர்ந்து கடினமான கற்களாக மாறிவிடுகின்றன. இதுதான் பின்னாளில் பெரிய வலியைக் கொடுக்கிறது.
அறிகுறிகள்!
சிறுநீரகக் கல் இருந்தால் ஆரம்பத்தில் தெரியாது. ஆனால், கல் நகரும்போது உயிர்போகும் வலி இருக்கும்.
இடுப்புக்கு மேலே, விலா எலும்புக்குக் கீழே திடீரெனக் கடுமையான வலி ஏற்பட்டு, அது முன்பக்கம் அடிவயிறு வரை பரவும்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது வலி இருக்கும். சில சமயங்களில் சிறுநீர் இளஞ்சிவப்பு நிறத்திலோ அல்லது நுரை தள்ளியோ வெளியேறலாம்.
தீராத முதுகு வலியுடன் குமட்டல் அல்லது வாந்தி வருவது போன்ற உணர்வு இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், சூடு ஒத்தடம் கொடுத்துக் காலத்தைக் கடத்தாமல் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.
தடுக்கும் வழிகள் என்ன?
தாகம் எடுத்தால்தான் குடிப்பேன் என்று அடம் பிடிக்காதீர்கள். குளிர்காலத்தில் தாகம் எடுக்காது. அதனால், ஒரு நாளைக்குக் குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம் என்று இலக்கு வைத்துக்கொள்ளுங்கள். குளிர்ந்த நீர் குடிக்கச் சிரமமாக இருந்தால், வெதுவெதுப்பான சுடுதண்ணீரைக் குடிக்கலாம்.
எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழச்சாறுகளில் சிட்ரேட் உள்ளது. இது கற்கள் உருவாவதைத் தடுக்கும் இயற்கையான மருந்து.
ஊறுகாய், கருவாடு, சிப்ஸ், பாக்கெட் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதிகப்படியான உப்பு, சிறுநீரில் கால்சியத்தை அதிகரிக்கச் செய்து கற்களை உருவாக்கும்.
டீ, காபிக்கு பதிலாகப் புதினா டீ, செம்பருத்தி டீ அல்லது சீரகத் தண்ணீரைக் குடிப்பது நீர்ச்சத்தை அதிகரிக்கும்.
"முன் ஏர் போன வழியே பின் ஏர் போகும்" என்பார்கள். பரம்பரைச் சொத்து வருகிறதோ இல்லையோ, சர்க்கரை நோயும், சிறுநீரகக் கல் பிரச்சனையும் பரம்பரையாக வர வாய்ப்புள்ளது. அதனால், ஏற்கெனவே குடும்பத்தில் யாருக்காவது இந்தப் பிரச்சனை இருந்தாலோ அல்லது உங்களுக்குச் சர்க்கரை நோய் இருந்தாலோ கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
குளிர்காலம் தானே என்று தண்ணீரைப் புறக்கணிக்காதீர்கள். அந்த ஒரு டம்ளர் தண்ணீர், உங்களை மிகப்பெரிய அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆரோக்கியம் நம் கையில்... மன்னிக்கவும், நாம் குடிக்கும் தண்ணீரில் உள்ளது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)